Sunday, July 12, 2015

சி.சு.செல்லப்பா : முனைவர் சௌந்தர மகாதேவன்



            காலம் எழுதிய கம்பீரஎழுத்து: சி.சு.செல்லப்பா
பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,
தமிழ்த்துறைத்தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி(தன்னாட்சி),
ரஹ்மத் நகர்,திருநெல்வேலி
9952140275]

எல்லோரும் எழுதுகிறார்களே நாம் எழுதினால்என்ன என்ற எண்ணம் தோன்றியதோ என்னவோ..சின்னமானூர் சுப்ரமணியம் செல்லப்பா என்கிற உயிரெழுத்தை உரிமையோடு எழுதிப்பார்த்தான் காலம் எனும் கம்பீர எழுத்தாளன். 

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ள வாடிப்பட்டியில் 1912 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 இல் பிறந்து, வத்தலகுண்டு அக்ரஹாரத்தின் கோவில்தெருவில் வசித்த சி.சு.செல்லப்பா, பின்னர்  சென்னைக்கு இடம்பெயர்ந்தார்.

 எழுத்தையே வாழ்க்கையாகவும், வாழ்வையே எழுத்தாகவும் கொண்டுவாழ்ந்தவர். ஜீவனாம்சம், சுதந்திரதாகம் என்பன அவர் எழுதிய அருமையான நாவல்கள். வாடிவாசல் அவரது குறுநாவல். தன் தந்தையைக் கொன்ற காளையை அடக்கிய மகனின் கதையை வாடிவாசல் கதையில் உணர்ச்சிப் பெருக்கோடு சி.சு.செல்லப்பா எழுதியுள்ளார்.

 சி.சு.செல்லப்பாவிடம் ஐம்பதுகளிலேயே அருமையான நிழற்படக்கருவி இருந்தது.  அலங்காநல்லூர் போய் காளை அடக்குவதைப் படமெடுத்து வைத்திருந்தார். சுதந்திரச்சங்கு இதழில் எழுதத்தொடங்கினாலும் மணிக்கொடி இதழில் எழுதிய பின்னரே இவர் எழுத்துகள் கவனம் பெற்றன.மனதில் காந்தியத்தை ஏந்திக் நீர்க்காவியேறிய கதர்வேட்டியோடும் காடாத்துணியில் தைத்த கையில்லாப் பனியனோடும் “எழுத்து” பிரசுரநூல்களைத்  தலையில் சுமந்துகொண்டு  ஒவ்வொரு கல்லூரித் தமிழ்த் துறையாகத் ஏறிஇறங்கிய உத்தமர்.


 இப்படியும் ஒருமனிதரை இந்தக் காலத்தில் பார்க்கமுடியுமா? என்று நினைக்கும்படியாக வாழ்ந்தவர்.தன் இறுதிவினாடிவரை எழுதுவதில் சலிப்போ அவநம்பிக்கையோ அவருக்கு ஏற்படவில்லை.


சரசாவின் பொம்மையும் மணல்வீடும் எல்லோராலும் பாராட்டப்பட்டபோது புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தவர். 

படைப்பாளராய் இருப்பவர் மற்றவர் படைப்புகளைப் படித்துத் தவறாது விமர்சிக்கவும் வேண்டும் என்பது சி.சு.செல்லப்பாவின் கருத்தியல். தரமான திறனாய்வுகளை வெளியிடுவதற்கென்று அவர் தொடங்கிய எழுத்து இதழ் தமிழுக்குக் கிடைத்த காலக்கொடை. 1959 ஜனவரியில் எழுத்து இதழைத் தொடங்கினார்.

 மக்களுக்குப் பிடித்தவற்றைத் தந்துகொண்டிருத்த தமிழ்இதழ்களுக்கு மத்தியில் ‘இப்படித்தான் தரமாகத் தருவேன்’ என்று இலட்சியநோக்கோடு எழுத்து இதழைத் தொடர்ந்து ஒன்பதேகாலாண்டுகள் நடத்தினார்.

 1968 ஆம் ஆண்டில் 112 வது இதழோடு ‘எழுத்து’ காலாண்டிதழாக மாறியது.எழுத்து தோன்றி பன்னிரெண்டாம் (1970 ) ஆண்டில் 119 ஆவது இதழோடு எழுத்து நின்றுபோனது. “ஜீவனாம்சம்” கதையைச் சோதனை முயற்சியிலான கதையை ‘எழுத்து’ இதழில் எழுதினார்.புதுக்கவிதை வளர்ச்சிக்கு எழுத்து ஆற்றியபணி போற்றத்தக்கது.

 சி.மணியும், வைதீஸ்வரனும், பிச்சமூர்த்தியும் எழுத்தின் கழுத்தில் புதுக்கவிதை மாலைபோட்டு அழகை ஆராதிக்க செல்லப்பா காரணமாய் அமைந்தார். எழுத்து இதழின் திறனாய்வுக் கட்டுரைகள் நடுநிலையோடு அமைந்தன.முதல் இதழிலிருந்தே க.நா.சு., சிறுகதைகள் குறித்த திறனாய்வுக் கட்டுரைகள் எழுதினார்.

புதுமைப்பித்தன் ,கு.ப.ரா நினைவுமலர்கள், ந.பிச்சமூர்த்தி,பி.எஸ்.ராமையா சிறப்பு மலர்களை வெளியிட்டார். சி.சு.செல்லப்பா ஓர் இலக்கிய இயக்கம்,தரமான எழுத்தைத்தந்த திறமான இலக்கியப் பிதாமகன். நவீனப் படைப்பிலக்கியத்தின் காலக்குறியீடு. எழுத்து இதழைத் தொடங்கியபோது தமிழ்நாட்டில் தீவிரமான இலக்கிய இயக்கத்தை இரண்டாயிரம்பேராவது ஆதரிப்பார்கள் என்று எண்ணித் தொடங்கினார்..

ஆதரவுகுறித்து அவருக்குக் கவலையில்லை..தரமான இதழைப் பன்னிருஆண்டுகள் தந்த பெருமை அவருக்கு உண்டு.

வாசிப்பை நேசித்த உத்தமக் கலைஞானியாக,தமிழகம் முழுக்க எழுத்தை இயக்கமாக மாற்றிய இதழியலாளராக இருந்தார். மனம் வெறுத்துச் சலித்துக்கொண்டதோ, தன்னை நொந்துகொண்டதோ இல்லை.

 “நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்” என்று சொன்ன அப்பர்பெருமானின் கம்பீரம் சி.சு.செல்லப்பாவிடம் இருந்தது. தரமான தன் எழுத்துகள் காலம் கடந்தும் நிற்கும் என்ற உறுதிஅவரிடம் இறுதிவரை இருந்தது. 

ஏற்கனவே யாரோ போட்டுவைத்த பாதையில் கால்நோகாமல் பயணப்படாமல் புதியபாதை போட்டார் என்பதால் அவர் கால்கள் ரணப்பட்டன. ஆனாலும் அவர்பயணப்படப் பயப்படவில்லை.

 எல்லாப் பயணங்களும் எதோஒரு சோடிக்கால்களின் கொப்பளத்தில் தொடங்கி வரலாறாய் உருப்பெற்றிருக்கின்றன. தன் இறுதிக்காலத்தில் 1800 பக்க நாவலைச் சொந்தவெளியீடாக வெளியிட்டார்.அந்தத் துணிச்சல் அவருக்கு மட்டுமே உண்டு.

நன்றி: மாதவம் மாதஇதழ்

No comments:

Post a Comment