Sunday, July 12, 2015

தன்நம்பிக்கைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்



            தோல்வி நிலையென நினைக்கலாமா?

பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி,9952140275
mahabarathai1974@gmail.com

சிறுதோல்விகளுக்கு நிலை குலைந்து போகிறோமே. நாம் நினைத்தது நடக்காமல் வேறுவகையில் நடந்ததை நம்மால் ஏன் எளிதாக எடுத்துக்கொள்ளமுடியவில்லை? கவலை என்ற ஒற்றைச்சொல் இப்படிக் கொடூரமாய் நம்மைச் சம்மட்டியால் அடித்துச் சங்கடப்படுத்துகிறதே.  கட்டயமாக நாம் கவலைப்பட்டுத்தான் ஆகவேண்டுமா? கவலை கோரமான வலை. நம் நிலையைக் குலைக்கும் மாயவலை..ரணங்களைத் தரும் காயவலை. எதற்கும் நீங்கள் அச்சப்பட அவசியமில்லை.

 ஆகாயம் இடிந்து அப்படியே நம் தலைமீது விழப்போவதில்லை. பொறுமையாக அமர்ந்து சிக்கெடுத்தால் நூலின் சிக்கலையும் வாழ்வின் சிக்கலையும் சிலமணித் துளிகளில் சீராக்கலாம்,சிக்கலில் மீண்டு எதையும் நேராக்கலாம்.செய்கிறோமா? நாமாக அனுமதிக்காதவரை எந்தத் தோல்வியும் நம்மை எதுவும் செய்துவிடமுடியாது...நாம் மனம் தளர்ந்து, தினம் தளர்ந்து போகாத வரை. சாகுமளவுக்கு இறைவன் நமக்குச் சங்கடங்கள் தரப்போவதில்லை. ஊரோடி வந்து எதிர்த்தாலும் போராடினால் உண்டு பொற்காலம்.தோல்விகளை எதிர்த்துப் போராட்டக் கற்றுக்கொள்ளுங்கள்.


யார்ஆறுதல் தருவார்? 

காத்திருக்கத்தான் வேண்டியதிருக்கிறது காலம் கனிந்து நமைக் கரையேற்றும்வரை. கவலை வலைகளில் சிக்குண்டு பின்னிக்கிடக்கும் நமக்கு ஆறுதலும் தேறுதலும் யார் தருவார்? நாம்தான் நமக்கு ஆறுதல்.விழுதலின் விழுது எழுதலில்தான் உள்ளது.
பரந்தவானம் குறித்த பயமிருந்தால் பறத்தல் குறித்து நினைத்துப் பார்க்க முடியுமா பறவைகளால்? எட்டாவது மாதத்தில் எட்டடிவைத்து நடக்கத் தொடங்கும் நம் வீட்டுச் சிறுகுழந்தைகள் எழுச்சியோடு நடப்பதற்குள் எழுந்துநடப்பதற்குமுன் எத்தனை முறை விழுந்து அடிகள் படவேண்டியிருக்கிறது. அடிகள் படாமல் சிற்பமில்லை..சிறப்புமில்லை.

அழகான வாழ்க்கை

கேள்விக் குறிபோன்ற கொக்கியால் அநாயாசமாக கனமான வெங்காய மூடையைத் தூக்கி நகர்த்தும் பாரம்சுமக்கும் உழைப்பாளிகள் இரவுபகலாய் பாரம்சுமைக்கிறார்களே..முதுகுவளைய உழைக்கிறார்களே.. எதற்காக? நாளை நலமாய் அமையும் என்பதற்காக. மதுரை மாட்டுத்தாவணிப் பேருந்து நிலையத்தில் அதிகாலை நான்கு மணிக்குக் கடையைத் திறந்து இனிய காலைப்பொழுதின் ரம்மியத்தோடும் ‘’உள்ளம் உருகுதையா..’’  பாடலோடும்  தேநீர் போடத் தாமிரபாய்லரில் வெந்நீர் கொதிக்கவைத்து, இடைவெளியில் எழுத்துக்கூட்டித் தலைப்புச் செய்தியை வாசித்துவிட்டுப் பேருந்துநிலையத்தில் நிற்கும் கண்டக்டரோடு நாட்டுநடப்பு பேசிவிட்டு டீ போட உற்சாகமாய் நகரும் தேநீர்கடைத் தொழிலாளி எதற்கும் அயர்ந்து பார்த்ததில்லை.அவரவர் தாங்கும் பாரத்தைத் தந்து அவரவரை நகர்த்திச் செல்கிறது அவரவர்க்கான அழகான வாழ்க்கை.

இதற்கா கலக்கம்?

தேர்வுமுடிவுகள்,அலுவலச் சூறாவளிகள்,பொருளாதார நெருக்கடிகள்,குழந்தைகளின் செய்கைகள்,உறவினர்களின் செயல்பாடுகள் உங்களை உலுக்கிக் கொண்டுதான் இருக்கின்றன.அதற்கா இவ்வளவு வருத்தம்? அதற்கா இவ்வளவு துயரம்? காற்று அசுரபலத்தோடு இருக்கும் சிலகணங்களில் நம்மால் மகிழ்வாகத் தூற்றிக்கொள்ளமுடியவில்லைதான். அதற்காகக் காற்றை விட்டுவிட்டுக்காததூரம் ஓடிவிட முடியுமா? நதிநீரின் இறுதித்துளிகளை நம்பிக் காத்திருக்கும்  கடைசிமீன்போல் நாமும் காத்திருக்கலாம் நமக்கான நல்ல வினாடி வரும்வரை. ஆனந்தக் காட்சிகளை அழகாய் ரசிப்பதற்கு இறைவன் தந்த சோடிக்கண்களால் நாம் சோகத்துளிகளை வடித்துக் கொண்டிருப்பது நியாமா?  நீங்கள் பதறியவிநாடிகளைக் கடந்துபின்னோக்கிப் பார்த்தால் இதற்கா இவ்வளவு கலங்கினோம் என்று சிரிக்கத் தோன்றும்.கலக்கம் நம்மைக் கலக்கும்.

அச்சம் வேண்டாம்

எவரெஸ்ட் ஏறுகிறவனின் பார்வை எப்போதும் சிகரஉச்சியை நோக்கித்தான் இருக்குமே தவிர,  ரணமான தன் பாதங்களைக் கண்டு வருந்துவதில் இருக்காது. எல்லாப் பயணங்களும் கொப்புளமான சோடிக் கால்களின் துயரத்தில்தான் தொடங்குகின்றன. சிற்றுருளி மகத்தான மலையைக் கூடக் காலப்போக்கில் சிறுகற்களாய் மாற்றிவிடுகிறது.சிறுதோல்விகள் மா ரணம் தந்து மரணத்தில் கொண்டு சேர்த்துவிடுகின்றன.அஞ்சவேண்டும் உள்ளிருந்து உருக்கெடுக்கும் அச்சஉணர்வை. நாம் எப்போதும் வென்றவர்களுக்கே வெற்றிவிழா நடத்திக் கொண்டிருக்கிறோம்.தோற்றவர்களையும் போற்ற வேண்டும். அவர்கள்தான் வெற்றியின் நெற்றியில் நாளை திலகமிடப்போகிறவர்கள். நாமாக முயல்வோம் நமக்கான வெற்றிதோல்விகளுக்காக. நன்றாகத்தான் இருக்கிறது நாமாக நோட்டில் ஒட்டும் லேபில் கூட. சாதாரணனுக்குச் சங்கடமில்லை- ஏனெனில் அவனைச் சுற்றி எந்த ஒளிவட்டமில்லை.

செல்பேசிகளைப்போல் இருங்கள்

 நமது இரண்டாவது இதயமாகவே மாறிவிட்ட செல்பேசிகளிடம் கூட நாம் கற்றுக்கொள்ளப் பாடம் இருக்கிறது. இணையத்தின் வழியே ஏதேனும் வைரஸ் நுழைந்துவிட்டால் உடன் உங்கள் செல்பேசியில் நீங்கள் நிறுவியுள்ள ஆண்டிவைரஸ் எனும் எதிர்க்காப்பாளன் விரைவாய் செயல்பட்டு எப்படி அழித்துவிட்டு உங்களுக்குத் தெரிவிக்கிறதோ அதேபோல் உங்கள் மனதில் மண்டிக்கிடக்கும் எதிர்மறை எண்ணங்களை உடன் அழித்துவிடுங்கள்.  இல்லையேல் அவை உங்கள் உற்சாகத்தை உருக்குலைக்க வைத்துவிடும். சிலநேரங்களில்  உயிரையும் எடுத்துவிடும்.
ஆயிரம் பாடல்களைத் தேக்கிவைத்து, வேண்டிய நேரத்தில் விரும்பிய பாடல்கள் தரும் செல்பேசிகளைப் போல் நல்ல பாடல்களைத் தேக்கிவைத்து தேவையானபோது பயன்படுத்துங்கள்.

பிசையும் பிரச்சினைகளை இசை தன் வசமாக்கி இல்லாமல் செய்யும்.தினமும் இரவுதூங்கும்முன் நல்ல இசை கேளுங்கள் மனமும் அத்தினமும் மகிழ்ச்சியாகும். செல்பேசி எல்லாவற்றையும் தன் உள்நினைவகத்தில் பதிவுசெய்துவைப்பதில்லை. சிலவற்றை நினைவகத்திற்கு வெளியே இருக்கும் வெளிநினைவுகள் சில்லுகளுக்கு மாற்றிவிட்டுத் தன் வேகத்தை அதிகரித்துக் கொள்கிறது.சிலவற்றை உடன் அழித்துவிடுகிறது. நீங்களும் அதேபோல் இருங்கள்.

 உள்ளுக்குள் இருந்து உங்களைப் பிசையும் பிரச்சினைகளை அவ்வப்போது அழித்துவிடுங்கள்.இல்லையேல் உங்களை அது நிலைகுலைய வைத்துவிடும். அலுவலகப் பிரச்சினைகளை வீட்டிலும், வீட்டுப்பிரச்சினைகளை அலுவலத்திலும் நினைத்து மனதில் போட்டுக் குழப்பி உங்கள் வேகத்தையும் உற்சாகத்தையும் குறைத்துக்கொள்வதைவிட வீட்டுக்கு வெளியே அவற்றை நிறுத்திவிடுங்கள். ஆதித்துளியிலிருந்து தொடங்கிய நீரின் ஓட்டம்தான் பெருந்துளியாய் மாறிப் பிரவாகமாய் பின்தொடர்ந்து ஆழியாய் அகண்டுக் கடலெனப் பெயர்பெறுகிறது.

மகிழ்ச்சியை அளியுங்கள்

·         நீங்கள் எதையாவது அளிப்பதற்கு இந்த உலகத்திற்கு வந்திருக்கிறீர்கள்.. நீங்கள் உட்பட எதையும் அழிப்பதற்கு அல்ல. சேற்றில் புதைந்திருக்கும் செந்தாமரை மாதிரி சோற்றில் புதைந்திருக்கிறோம் வந்தநாள் முதல் இந்த நாள் வரை.மலர்வோம் மனிதப்பூக்களாய்.

·         எதிர்கொள்ளுங்கள் எதையும்..பயந்துஓடுபவனையே காலம் பாய்ந்து தாக்குகிறது..பாடாய்ப்படுத்துகிறது.தற்கொலைக்குக் கூடத்தூண்டுகிறது. கோழைகளுக்குக் காலம், உயிருள்ளபோதே கல்லறைப்பேழையைத்  தயாரித்துவைக்கிறது. 

புதியசிந்தனைகள் நம் புத்தறிவைச் செதுக்குகின்றன.நேர்மை நம் வாழ்வை கூர்மையாக்குகிறது.உண்மை அதை அழகுச் சிற்பமாக்குகிறது. தடையாளக்கற்பதே வெற்றியின் அடையாளமாகிறது. எனவே தடையாளக் கற்றுக் கொள்ளுங்கள். 

மூளையின் மூலம் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடியாது.இதயத்தின் இமைகள் திற்கும்போது சிலகாட்சிகள் புலப்படும்.புரியத்தொடங்கும்போது காட்சிகளின் உண்மையான பின்னணிபுலப்படும். புத்தம்புதிய புரிதல்களாலேயே பலப்படுகிறது இந்த வாழ்வும். பயிற்சியும் முயற்சியும் அயர்ச்சியைப் போக்கும்.   *  சுதந்திரத்தின் சுந்தரத்தைச் சுவைப்பதில் நம் நாட்கள் உள்ளன. எதார்த்தத்தைப் புரிந்துகொண்டவர்களுக்கு வாழ்க்கை வசந்தச்சாமரம் வீசுகிறது. எதார்த்தம்மட்டுமே எப்போதும் கெடாத பதார்த்தம். உயிரின் சிறப்பு உயர்வில் இருக்கிறது.நிறுத்திவைக்கும்போது ஏணி எனப்பெயரெடுக்கும் மூங்கில் இணை, கிடத்திவைக்கும்போது பாடை எனப்பெயர் பெறுகிறது.பார்வையை மாற்றிக்கொண்டு பாருங்கள் வாழக்கை வாகை சூடஅழைக்கும்.

·         முரண்பாடான சமன்பாடல்ல வாழ்க்கை..

இந்த வாழ்க்கை இறைவன்  தந்த இனிய வரம்.எனவே வீணாக அதை வீணாக்க வேண்டாம்.
·         விழிப்புணர்வே விந்தைகளின் தந்தை. விழித்துக்கொண்டவனைக் காலம் பழித்துக்கொள்வதில்லை.தூங்கிக் கிடப்பவனை ஏங்கவைக்கத் தவறுவதில்லை.எனவே விரைவாக விழித்துக் கொள்ளுங்கள்.
·         உள்ளத்தாக்கப்படுவது பள்ளத்தாக்கிலிருப்பதைப் போல் கொடுமையானது.எனவே ஒருபோதும் உங்களை நீங்களே நொந்துகொள்ளாதீர்கள்.
·         பாதைகளற்ற பயணத்தில் அனுபவங்களே பாதங்கள்..புதிய அனுபவங்களுக்குத் தயாராகுங்கள்,அவை உங்களுக்குப் புதியபடிப்பினைகளைத் தரலாம்.
·         தண்டவாளத்தில் தலைவைத்தபடி தன்னம்பிக்கை குறித்து பேசிக்கொண்டிருக்கலாமா? எதிர்மறையான பேச்சும் சிந்தனையும் நம்மை பவீனப்படுத்தும். ஊசி முனை நுழைந்தபின்தான் நூலே நுழைய முடிகிறது.நீங்கள் அனுமதிக்காதவரை உங்களை யாரும் துயரப்படுத்திவிடமுடியாது.
·         பூமியின் புனிதம் நீங்கள்..மானுடம் காக்கவந்த மகிழ்வான மனிதம் நீங்கள். தோல்விகளில் இனியும் தொங்கிக்கொண்டிராதீர்கள். வெற்றியால் உங்களை வெளிப்படுத்துங்கள். பொறுமை உங்கள் வெறுமை நாட்களை அருமையாய் அலங்கரிக்கும்.
·         உங்கள் உள்ளம் குளம் போன்றது எல்லாநீரையும் பேதமில்லாமல் அப்படியே ஏற்கும்.உங்கள் உள்ளக் குளத்தை நம்பிக்கை எனும் நன்னீரால் நிரப்புங்கள்.மகிழ்ச்சிப் பூக்கள் அதில் மலரும்.
·         வாழ்வென்பது வலியோடும் வலிமையோடும் வாழ்வதெனப் புரிந்துகொள்ளுங்கள்.வலிமை இழப்பது வாழ்க்கை இழப்பது என உணருங்கள்.

·         சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருப்பவன் சாதனைப்படிகளில் ஏறமுடியாது எனவே உங்களுக்கான உன்னதமான சந்தர்ப்பங்களை உருவாக்குங்கள். 

சிரமத்தின் உச்சியில்தான் சிகரஉச்சியும் உள்ளது.எனவே சிரமப்பட்டுச் சிகரமேறுங்கள்,சிகரமாய் மாறுங்கள். மகிழ்ச்சி மரத்தில்தான் காலக்கனிகள் பழுத்து உதிர்கின்றன, சிரிப்பே சிறப்பு எனவே புன்னகைக்கப் பழகுங்கள்..புவிஉங்களுக்கே.. 

·         வெறுமை பூசியவன் பெருமை பேசமுடியாது. எட்டரை வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டு மூளைக் கோளாறு உடைய மாணவன் என்று முத்திரை குத்தப்பட்டு, பள்ளியை விட்டு வெளியே அனுப்பப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசனுக்கு வீட்டிலேயே மூன்றாண்டுகள் பாடம் சொல்லித்தந்து ஊக்கப்படுத்தியவர் அவர் தாய் நேன்சி மேத்தீவ்ஸ் எலியட். அவருக்குப் பழங்கதைகளைச் சொல்லியும் கணிதம் கற்றுத்தந்தும் எழுதப் படிக்கச் சொல்லியும் தந்தவர் அவர் தந்தை சாமுவெல் ஓக்டென் எடிசன்.எனவே தோற்றுப்போனதற்காகத் துவளவேண்டாம்.

வாழ்க்கை இன்முகத்தோடும் இன்னொரு முகத்தோடும் இன்னும் உங்களுக்காகக் காத்திருக்கிறது.
·         கனவு காணும் கண்கள்,மகிழ்வலைகளைத் தேக்கிவைத்த நெஞ்சம் இவற்றோடு துன்பங்களிலிருந்து விடுபடுங்கள் விரைவாய் விண் எட்டலாம்.விந்தைகள் பல புரியலாம்.வாழ்க்கை காத்திருக்கிறது உங்களுக்காக.






No comments:

Post a Comment