Thursday, July 23, 2015

தினமலர் என் பார்வை தன்னம்பிக்கைக் கட்டுரை: முனைவர் சௌந்தர மகாதேவன்




        வாழ்வை இரசிப்போம் நிறைவாய் வசிப்போம்
 
முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி, 9952140275


நாம் மட்டும் ஏன்இப்படி வாழ்கிறோம்? பல நேரங்களில் சகமனிதர்களின் புலம்பல்கள் புதிராய் இருக்கின்றன. 

 மணித்துளிகளைப்  பணித் துளிகளாகவும், பணத் துளிகளாகவும் மாற்றி வாழ்ந்ததுபோதும்.  மனத்துளிகளை ரசிக்கவும் இனி நம் காலத்தைச் செலவிடலாமே

  ஒரு சிறுநலம் விசாரிப்பு, ஒரு சிறுபுன்னகை, ஒரு சிறுஉதவி  என மலர்ச்சி மயமாக்கலாமே! உயிரோடிருத்தல் மட்டுமே வாழ்தலின் அடையாளமாகாது. புன்னகையோடு தொடங்கும் நாள் மலர்மணத்தோடு இரவில் உறங்கச்செல்கிறது.

 கவலை மறந்த மனங்களில்தான் இறைவன் இருக்கிறான் எப்போதும். மகத்தான மானுட சமுத்திரத்தில் தோன்றி எந்திரங்களைப்போல் எதற்காக நாம் ஆகவேண்டும்?. 

சிறுதுன்பங்களுக்கு எதற்கு மனம் உடைந்து உயிரை மாய்த்துக் கொள்ளவேண்டும்? மலர்த்தோட்டத்திற்குள் நுழைகிறோம், கடவுள் எழுதிய வண்ணக்கவிதைகளாய் புவியெங்கும் பூத்துக்குலுங்கும் பூக்கள் சிநேகத்தோடு மணம்வீசிக்கொண்டிருக்கின்றன. 

எத்தனைகோடி இன்பம்

அழகான வண்ணமலர்கள், நிலம் பார்த்து இறங்கும் ஆலம்விழுதுகள், அதில் தொங்கி ஆட்டம்போடும் அன்புக் குழந்தைகள், பசுமையான வயல்கள், கிணற்றில் அடிமண்தேடும் சிறுவர்கள், அற்புதமான வரப்புகள், வானை எட்டும் உயரமான மருதமரங்கள், அழகான குளக்கரைகள், அசையும் அழகுச்சிற்பங்களாய் அழகான ஆடுமாடுகள், பஞ்சாரத்தை விட்டுக் கொக்கரித்து வெளியேறும் கோழிகள், அதன் உடன் உறையும் அழகான கோழிக் குஞ்சுகள், கொய்யாமரத்திலிருந்து பயத்தோடு மிளகுக் கண்களால் எட்டிப் பார்க்கும் அணில்குஞ்சுகள், பசுஞ்சாணி மெழுகிய மண்வீடுகள்,கேணிக் குளியல்கள்,வைக்கோற்போரில் தலைநுழைக்கும் கன்றுக்குட்டிகள், பூவரசஇலையில் செய்த பீப்பிகள்,நோண்டித் தின்றாலும் நொடியில்விழாது ஓடும் நுங்குவண்டிகள், மார்கழி மாதத்துப் பனித்துளி, சித்திரை மாதத்துக் கத்தரிவெயில்,கசந்த காலத்தை மறக்கவைக்கும் வசந்தகாலம், ஆண்டின் முதல் மழை,முதல் வெள்ளம்,குட்டிக் குழந்தையின் முத்தம், வானொலியில் வழிந்தோடிவரும் பழைய மனம்கவர் பாடல்கள், மண்பானைத் தண்ணீர், ஓலைக்குடிசைவீடுகள், பழையசோறு, அம்மாவின் அன்பு, நிலாப் பார்த்த நிமிடங்கள், இவற்றை எல்லாம் ரசிக்கும்போது எத்தனைக்கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா! என்று சப்தமாய் பாடத்தோன்றுகிறது 
.
தாகூரின் ரசனை

கவிஞர்கள் எப்போதும் ரசனையின் ரசிகர்களாகவே திகழ்கின்றனர். நோபல்பரிசு பெற்ற கீதாஞ்சலியில், மகாகவி தாகூர் இந்த இனிய வாழ்வைக் கொண்டாடுகிறார்.

 இறைவனை வெகுநெருக்கத்தில் வைத்துப் பார்க்கிறார். திருவருளை நோக்கிய ஆன்மபயணத்தை அவர் கவித்திறனோடு காட்சிப்படுத்துகிறார். “என் இலக்கான உன்னைத் தரிசிக்க நான் சுற்றித்தான் வரவேண்டியிருக்கிறது” என்கிறார். 

 அவரது விஸ்வபாரதி பல்கலைக் கழகத்தில்  இயற்கையே பாடம், ரசித்தலே கற்றல். தாகூரின் மழைக்காலக் கவிதையில் நனைகின்றன அவரது எல்லா எழுத்துகளும் குடையின்றி. 


ரசிக்கும் மனம் ஆற்றும் ரணம்

வெள்ளைச் சலவை மொட்டாய் பௌர்ணமி நிலவில் ஒளிரும் தாஜ்மகாலை யாரேனும் ரசிக்காமல் இருக்கமுடியுமா? தம் வீட்டில் தவழும் குழந்தைகளின் இனிமையான மழலைமொழி கேட்டவர்கள் இனிமையான இசைக் கருவிகளின் இசையை உன்னதமானதென்று கூறுவார்களா? 

 யாவற்றையும் இனிமையாய் ரசிக்கப்பழகுங்கள். அனுபவிக்காத வாழ்க்கை அண்டமுடியா சுவர்க்கம்.  உங்கள் போக்கில் வளைப்பதற்கு வாழ்வு ஒன்றும் கான்கிரிட் கம்பி அல்ல.

 புரிந்து கொள்ளப்படாப் புலப்படல்களோடு நம் நாட்கள் நகர்கின்றன. உள்ளும் வெளியும் உள்ளபடி பயணப்பட்டால் நம் இலக்குகள் நமக்கு இலகுவாகப் புலப்படும்.

 “உதிர்ந்தமலர் கிளைக்குத் திரும்புகிறது வண்ணத்துப்பூச்சி” என்ற ஜப்பானிய ஹைகூ, அற்புதமான பறக்கும்மலராக வண்ணத்துப்பூச்சியை நமக்குக் காட்டுகிறது. 

உயரங்களில் ஏறவேண்டியவன் ஏன் துயரங்களில் ஏறிக்கொண்டிருக்கிறான்? எனக் கேட்கிறார் உலகக்கவிஞர் கீட்ஸ். “ அறுவடைமுடிந்துவிட்டது,அணிலின் நெற்களஞ்சியங்கள் கூட நிரம்பி வழிகிறது..மனிதர்களே நீங்கள் ஏன் துயரத்தால் நிரம்பிவழிகிறீர்கள்” என்று ஆதங்கத்தோடு கேட்கிறார் கவிஞர் கீட்ஸ். வானம்பாடிப் பறவையைப் போல் கவிவானில் பறக்கும் அவருக்கு மனிதர்கள் சோகமாக இருப்பது பிடிக்கவில்லை.

அடுத்தவேளை உணவுக்கு வழியில்லாத சூழலிலும் மகாகவி பாரதி, கைவசமிருந்த அரிசியையும் தானியங்களையும் பறவைகளுக்கு வாரிஇறைத்து “ காக்கை குருவி எங்கள் சாதி, நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்று பாடிப்பரவியவன். ,எந்த வலைக்குள்ளும் அகப்படா சுதந்திரக்கலையே வாழ்க்கை.

 
இயல்பாய் இருங்கள் 

சிரிக்கும் புத்தர் சிலையைப்போல் எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கப்பழகுங்கள். சிரிப்பின் சிறப்பு என்னவென்றால் அது இறப்பை வெல்லும். 

நன்றாகத்தான் இருக்கிறது நாமாக ஒட்டும்போது லேபில் கூட.எனவே நாமாகச் செய்து அனுபவங்களைப் பெறுவதில் என்ன தவறு? சோர்வு உனக்குள் தேர்வுஎழுதிவிடக் கூடாது.

 சேர்த்து வை உன்னைப் பார்த்துவந்த அம்புகளை..தடையாளக் கற்பதே நம் அடையாளம் என்று புரிந்துகொள்வோம். தானியங்கிப்பணம் தருஎந்திரத்தின் எண்ணிக்கை ஓட்டம் முடிவதற்குள் பணத்திற்காகக் கைநீட்டிநிற்கும் மனிதர்களின் அவசரம் நம்மைச் சங்கடப்படுத்துகிறது. மூடப்பட்ட ரயில்வேகேட் முன் பொறுமைஇல்லாமல் சைக்கிளோடு கஷ்டப்பட்டு உள்நுழைத்து தலைநுழைக்கிற சிலமனிதர்களின் அவசரம் நம்மைச் சங்கடப்படுத்துகிறது. நிதானமாய் மூச்சுகூடவிடாமல் நிதானமாய் நித்திரைகூடப்புரியாமல் செத்துக்கொண்டிருக்கிறார்கள் சீக்கிர சீக்கிரமாய் சிலபேர். 

எல்லாம் அனுபவம்தான்

வருத்தத்தின் நிறுத்ததில்  நின்றுகொண்டிருப்பதில்லை நம் வாழ்வு என்றும். வெளிச்சமற்ற வெளிகளில் புகுந்து நம் ரசனை அழகான வாழ்வியலை ஒளியூட்ட முயல்கின்றன நம் நாட்கள். பிரபஞ்சத்தின் புரியாமையை நம் நாட்கள் நமக்குப் புரியவைக்க முயல்கின்றன. 

. மேலெழும்பிக் கிளைபரப்பி வானம் நோக்கி வளரும் ஆலமரம், தன் விழுதனுப்பி வேர்களை விசாரிப்பது போல,நம் அக மனக்கண்ணாடியைத் தினக் கண்ணாடியின் முன்னிறுத்தித் தொடர்ச்சியாகத் தெரியும் பிம்பங்களைப் பிரமிப்புடன்  பார்ப்பதில் என்ன தவறுஇருக்கிறது? 

கற்பாறைகள் மீதும் துணிச்சலாய் அலைவீசி நீர்க்கரங்களால் தனைக் காட்டும் அலைபோல் இந்த வாழ்வியலின் கணங்களை ரசித்து எதிர்கொள்வதில் என்ன தவறு? எத்தனை முறை பார்த்தாலென்ன? 

ஆறு பார்க்க யாருக்குத்தான் அலுக்கும்? ஆறுபார்ப்போம்  அவசரமில்லாமல். கதிரா இருக்கும் போதே புதிராய் இருக்கும் பச்சைப்பசேல் என்றிருக்கும் வயல்வெளிகளைப்பார்ப்போம்.

 வாசித்தால் நேசிக்கத்தோன்றும் அழகான புத்தகங்கள் குழந்தைகள், பல நேரங்களில் நாம் அவர்களை வாசிக்காமல் விட்டுவிடுகிறோம், இல்லை சிலநேரங்களில் கிழித்துவிடுகிறோம், நம் வீட்டுக்குழந்தைக் குறும்புகள் ரசிப்போம்.

நல்லதை விதைப்போம்

கால அட்டவணையோடு எப்போதும் காலத்தை எதிர்கொள்ளமுடியாது. உடைந்த உறவுகள்,வலிதாங்கா விழிகள்,கசப்பான சம்பவங்கள் இவற்றோடு நம் நாட்களை நகர்த்திவிட முடியாது. இருப்பதைக் கொண்டு வெறுப்பதைப்போக்கி நதியாய் நகர்ந்துகொண்டே இருக்கவேண்டியதுதான். பயணப்படும் கால்களே பக்குவப்படுகின்றன.

 வேகஉலகில் சுகசோக சம்பவங்கள் அடுத்தடுத்து வரலாம், எனவே வெற்றிகண்டு துள்ளுவதோ, தோல்விகண்டு துவண்டுபோவதோ தேவையில்லை, எதுவுமே வேடிக்கைதான் நமக்கு நடக்காமல் இருக்கும்வரை! எனவே கடமையை நிறைவாய் செய்வோம்,பலன் தானாய் வரும். இரும்பாய் இருந்து துருப்பிடித்துப்போவதைவிடக் கரும்பாய் இருந்து சக்கையாவது மேல்.நம் துன்பத்தை நம்மோடு வைத்துக்கொண்டு மற்றவர் மகிழ்ச்சியில் மனமிசைந்து ஒன்றுபடுவோம்.

சிறகை நம்பி வானத்தில் வலம்வரும் பறவைபோல் சகமனிதஉறவுகளை நம்பி வலம்வருவோம் வாழ்வு வானத்தில்.இருக்கும்வரை யாரையும் வெறுக்கும்மனம் வேண்டாம்.

 “எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே” என்ற தாயுமானவரின் நெறி அற்புதமானதன்றோ! சிரிக்க மறந்த நாள் இப்புவியில் வசிக்க மறந்தநாள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். நல்லதை விதைத்திருந்தால் நல்லதே அறுவடையாகும்.அன்பிற் சிறந்த தவமில்லை என்றார் பாரதி,அன்பை விதைத்து,உள்ளதைச் சொல்லி,நல்லதைச் செய்து,ரசித்து வாழ்வோம்.
.







No comments:

Post a Comment