Monday, December 22, 2014

எழுத்தாளர் வண்ணதாசன் படைப்புலகில் ஓர் பயணம் :முனைவர். ச. மகாதேவன்



'நல்லதோர் வீணை செய்தே...'

முனைவர். ச. மகாதேவன்
தமிழ்த்துறைத் தலைவர்
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி
திருநெல்வேலி 627 011.
9952140275
            'இருக்கும் போது எருகம் பூ கூடத் தரவில்லை, மரித்தபின் மலர்வளைய மரியாதைகள் மகாகவி பாரதி முதல் எழுதுகோலோடு நாளை அமரகாவியங்கள் படைக்கக் காத்திருக்கும் புதிய எழுத்தாளர்கள் வரை இதுதான் கதி.
            1962ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்புப் பயின்ற போதே கே.டி.கோசல் ராம் நடத்திய “புதுமை” இதழில் எழுதி ஏழையின் கண்ணீர்' எனும் கதையின் மூலம் எழுத்துலகில் நுழைந்து, இதோ நெருங்கிவிட்ட 2012ஆம் ஆண்டோடு ஐம்பது ஆண்டுகளை எழுத்துக்காகவே அர்ப்பணித்து, இன்னும் எழுதிவரும் திருநெல்வேலி தி.க.சிவசங்கரனின் மகனாகப் பிறந்த சி. கல்யாணசுந்தரம் எனும் வண்ணதாசனுக்கு நாம் தந்த கவுரவம் என்ன? என்ற வினாவோடு அவரது எழுத்துலகம் பற்றிய எண்ணவோட்டத்தில் கலக்கிறேன்.
            'கல்யாணி அச்சகம், கம்பாசிடர் கணபதி' இதுதான், வண்ணதாசன் எழுதிய முதல் சிறுகதையின் முதல்வரி ' துன்பம் இனியில்லை சோர்வில்லை, தோற்ப்பில்லை அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட' என்று பாரதிப் பெருங்கவிஞன் சொன்னது போல் வண்ணதாசனின் கதையுலகம் அன்புலகம். வண்ணதாசனின் படைப்பிலக்கியங்கள் அன்பிலக்கியங்கள். வாழ்வைக் கலையாகவும் கலையை வாழ்வாகவும் புரிந்து வைத்திருக்கிற வண்ணதாசனின் 117 சிறுகதைகளைத் தொகுத்துப் புதுமைப்பித்தன் பதிப்பகம் வெளியிட்டுள்ள “வண்ணதாசன் கதைகள்” என்ற தொகுப்பு பிரமிக்க வைத்து முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொள்ளத் தூண்டியது.  அதில் இடம் பெறாத கதைகளோடு 'கிருஷ்ணன் வைத்த வீடு’ தொகுப்பும் (2000), அத்தொகுப்பு வெளிவந்து ஆறு ஆண்டுகள் கழித்து “பெய்தலும் ஓய்தலும்” (2007) தொகுப்பும், அதற்கடுத்த மூன்றாமாண்டில் (2010) “ஒளியிலே தெரிவது” தொகுப்பும் வெளிவந்து உயிர்மைப் பதிப்பகத்தின் சுஜாதா விருதும் (2011) பெற்றது.
            'பெய்தலும் ஓய்தலும்' தொகுப்பிற்கு முன்னுரை எழுதிய வண்ணதாசன் புதுமைப்பித்தன் 99 சிறுகதைகள் எழுதியிருப்பதாக ஒரு கணக்குச் சொல்வார்கள், புதுமைப்பித்தனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாம், அவன் எழுதாமல் போன அந்த நூறாவது கதையை எழுதிவிடத்தான் முயன்று கொண்டு இருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது.”  என்று சொல்லும் வண்ணதாசன் 160 கதைகள் படைத்திருக்கிறார்.
            வல்லிக்கண்ணன் மீது கொண்ட அன்பால் வல்லிக்கண்ணதாசனாகத் தன்னை உருவகித்து வண்ணதாசன் எனும் புனைபெயரில் 15 வயதில் எழுதத் தொடங்கிய அந்த அழகியல் எழுத்தாளனுக்கு இன்று 65 வயது!  அவரது படைப்பிலக்கியங்கள் அருமையான வாழ்க்கையை நேசிக்கிற, யாவற்றையும் ரசித்து மகிழ்கிற எல்லோரிடம் அன்பு செலுத்தத் துடிக்கிற இறவாப் புகழ் பெற்ற மென்மைத் தன்மை பெற்ற பாத்திரங்களாலானது.  எவர் கண்களிலும் பாடாதவாழ்வு நுட்பங்களைக் கூர்மையாகக் கண்டு, வண்ணங்களைக் குழைத்துத் தூரிகையால் மொழிநடை எனும் பரப்பில் வாழ்க்கைச் சித்திரங்களை அவர் படைத்து வாசகனைப் பிரமிக்க வைக்கிறார்.
            “எல்லோரையும் ஏற்றுக் கொள்கிறேன்.  அவரவர் பலங்களோடும் அவரவர் பலவீனங்களோடும்” என்று போலித்தனமற்று இயல்பாக வாழும் வண்ணதாசனின் படைப்புக்களம் திருநெல்வேலி மண்சார்ந்து அமைகிறது.  திருநெல்வேலி சுடலைமாடன் கோவில் தெருவிலும், சுவாமி நெல்லையப்பர் ரதவீதியிலும், வளவு வீடுகளிலும், அவரது சுந்தரத்துச் சின்னம்மையும், பாப்பாத்தி ஆச்சியும், கணபதியண்ணனும், அகிலாண்டத்து அத்தானும், உலவிக் கொண்டே இருக்கிறார்கள்.
            உறவுகளே வண்ணதாசனின் கதாவிலாசங்கள்.  பெண்ணைத் தோழியாக, அன்பின் தாயகமாகக் காணும் வள்ளிமாணளன் எனும் வண்ணதாசனின் பாட்டுடைத் தலைவி அருவடைய துணைவியார் திருமதி வள்ளி அம்மையார் அவர்கள்தான்.
            இவரது கதைகளில் இடம் பெறும் ஆண்பாத்திரங்களும் பெண்ணியல்பு உடையவர்களாக உரத்துப் பேசாத மென்மைத் தன்மை உடையவர்களாகவே திகழ்கின்றனர்.  அவரது கதைகளின் வெற்றிக்கு அவரது தனித்துவம் மிக்க மொழி நடையும் அதற்குள்ளிருந்து அழகு செய்யும் உவமைப் பயன்பாடும் காரணமாக அமைகின்றன.  கவிதை உத்தியான உவமையை இவர், தேர்ந்த கதை உத்தியாக்கி வென்றுள்ளார்.
            “கணையாழி, கசடதபற” போன்ற நாற்பதுக்கும் மேற்பட்ட இதழ்களில் வண்ணதாசன் எழுதியிருந்தாலும் 1967 டிசம்பரில் எழுதிய 'சபலம்' கதை முதல் 1987 ஏப்ரலில் எழுதிய 'அப்பால் ஆன' கதை வரை 24 கதைகளைத் தீபம் இதழில் வெளியிட்டுத் தீபம் நா. பார்த்தசாரதி ஊக்கப்படுத்தினார்.
            தீபத்தின் இலக்கியக் கொள்கைகளான பரிசுத்தமும், சத்தியமும், நேர்மையும், ஒழுக்கமும், சக மனிதர் மீதான அக்கரையும், குடும்ப உறவுகளைக் கொண்டாடுதலும் வண்ணதாசனின் இலக்கியக் கொள்கைகளாயின.  அவர் எழுதியுள்ள ஆயிரக்கணக்கான பக்கக் கதைகளில் ஒரு வரியில்கூட ஆபாசத்தைப் பார்க்க இயலாது.
            ஏதுமறியாப் பதின்பருவத்துச் சிறுவர் சிறுமிகளை இவரைப் போல் வேறுயாரும் துல்லியமாகப் பதிவு செய்ததில்லை.  சலனமற்ற ஆழ்கடலுக்குள் மூச்சடக்கி முத்துக்குளிப்பவன் முத்தெடுப்பதைப்போல் வண்ணதாசன் மனக்கடலில் மூழ்கிச் சொல் முத்துக்களைப் பொறுக்கி எடுத்துப் பல மணி மாலைகளைத் தருகிறார்.  வாழ்வின் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாசகனை நெகிழ்வுக்குள்ளாக்கும் சமப்வங்களை வெகு இயல்பாக வண்ணதாசன் தருகிறார்.
            வண்ணதாசன் தேர்ந்த ஓவியராகவும் உள்ளதால் வாழ்வின் ஆயிரக்கணக்கான வர்ணங்களை அதன் விகிதங்களை மாற்றி வேறு வேறு வர்ணங்களாக அகச்சித்திரமாகப் படைக்க முடிகிறது.  கதைகளுக்குத் தலைப்பிடலை வண்ணதாசன் மிக நேர்த்தியாய் மேற்கொள்கிறார்.  ஐம்பது விழுக்காட்டிற்கும் மேலான கதைத் தலைப்புகள் ஒற்றைச்சொல் தலைப்புகளாகவே அமைகின்றன.  போட்டோ, பாசஞ்சர் ரயிலும் ஆண்கள் பெட்டியும் எனும் இரு தலைப்புகளைத் தவிர ஏனைய கதைத் தலைப்புகள் யாவும் ஆங்கிலச் சொல் கலவாத் தமிழ்த் தலைப்புக்களாகவே அமைகின்றன.
            வெள்ளையடித்தலையும், நோஞ்சான் கன்றினை ஈன்ற பசுவையும்கூட அவரால் நேர்த்தியாகக் கதையாக்க முடிகிறது.  அவர் கதைகள் யாவும் அவரது வாழ்வில் நடைபெற்ற நிகழ்வுகளே.  அவரது கதைகளை அவரது வாழ்க்கை வரலாற்றுத் தடங்களோடு ஒப்புநோக்கி முன்பின்னாக மாற்றி அமைத்தால் தமிழுக்கு ஒரு புதிய இலக்கிய வடிவம் கிடைக்கும்.
            'சின்னு முதல் சின்னு வரை' எனும் நீள் சிறுதை அவர்  வருங்காலத்தில் எழுத இருக்கிற நாவல் இலக்கியத்திற்கு முன்னுரை தருவதாக, முன்னோட்டம் தருவதாக அமைவதாக எடுத்துக் கொள்ளலாம்.
            'எல்லோர்க்கும் அன்புடன்' என்று அவர் எழுதிய நூற்றுக்கணக்கான கடிதங்கள் கடித இலக்கியத்திற்கு மேலூக்கம் தருவனவாக இலக்கியச் செழுமையோடு அமைகின்றன.
            வண்ணதாசனின் வியக்கத்தக்க மற்றொரு மென்மையான அவதாரம் கல்யாண்ஜி என்ற கவிஞன்.  புதிய சுவையோடும், புதிய பொருளோடும், புதிய வளத்தோடும், புதிய சொல்லோடும் சோதிமிக்க நவ கவிதையை இக்கவிஞர் தன் பள்ளிநாட்களிலேயே (அறுபதுகளில்) தொடங்கி விட்டார்.  பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இளஞ்செடியாய் முளைவிட்ட கவிதைச் செடிக்குக் கல்யாண்ஜி உரமூட்டியிருக்கிறார்.
            1966இல் கல்யாண்ஜி தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் பயின்ற போது (பி.காம்) எழுதிய 'அந்திமனம்' என்ற கவிதை, புதுமைப்பித்தனின் 'ஓகோ உலகத்தீர் ஓடாதீர்', எனும் கவிநடைக்கு இணையாக அமைகிறது. “பள்ளிச்சிறுபையன் பட்ட பிரம்படியால் உள்ளங்கை செம்மை உருவேற்கும் ஒன்றாக வானம் இருந்ததுகான்' என்ற வரிகள் அதற்குச் சான்று.  'எதையும் செய்யுங்கள் ஆனால் இலக்கியமாகச் செய்யுங்கள்' என்ற அறிவிப்போடு வெளிவந்த கசடதபற இதழில் கல்யாண்ஜி எழுதிய 'இதயவீணை தூங்கும் போது' கவிதை எல்லோராலும் புகழப்பட்டது.
'பேசும் பாரென் கிளியென்றான்
கூண்டைக் காட்டி வாலில்லை
வீசிப் பறக்கச் சிறகில்லை
வானம் கைப்பட வழியில்லை
பேசும் இப்போது பேசுமென
மீண்டும் மீண்டும் அவன் சொல்ல
பறவை யென்றால் பறப்பதெனும்
பாடம் முதலில் படியென்றேன்'       எனும்
கவிதையை வல்லிக்கண்ணன் பாராட்டுகிறார்.  சுய அனுபவத்தை உறவுப்பெயர்களுடன், இயற்கை சார்ந்த பின்னணிச் சித்தரிப்புகளுடனும் சுருக்கமான சொற்களால் மிக எளிமையாகத் தாமிரபரணி மண்சார்ந்து படைத்துவரும் கல்யாண்ஜி, அறுபதுகளில் எழுதத் தொடங்கி இடையில் நிறுத்திக் கொண்ட பல நூறு கவிஞர்களிடமிருந்து வேறுபட்டு நிற்கிறார்.
            ஒரு சில கவிதை இயக்கங்கள் தோல்வியைக் கண்ட எழுபதுகள் எண்பதுகளிலும் கல்யாண்ஜி புதுக்கவிதையில் பல்வேறு சோதனைகளைத் தொடர்ந்து செய்தவாறு எந்தச் சலனத்திற்கும் ஆட்படாமல் எழுதினார்.  தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத தன்மையையும், குழுச் சண்டைகளில் இறங்காமல், ஒதுங்கி இலக்கியத்தை விட சக மனிதர்களின் மீதான அன்பு என்ற கருத்தியலும் அவரை எல்லாச் சூறாவளிகளிலிருந்தும் காத்தன.  அவர்தன் படைப்பிலக்கியங்களின் மூலம் எந்தப் பிரச்சாரத்தையும் வலிந்து மேற்கொண்டதில்லை.
            “கலைஞன் எப்போதுமே கண்ணாடிக் குருவி, நிழலைக் கொத்தி, நிழலைக் கொஞ்சி நித்தம் தவம் செய்கிறவன்.  தன் அனுபவத்தின் வாழ்வின் ஜாடைகளுடன் அவன் அடுத்தடுத்துத் தீவிரமாக வரைகிற பொது முகத்தில் இவனுடைய முகமும் தெரிகிறது” என்ற கல்யாண்ஜியின் கருத்து, அவரது கவியுலகை நம்மால் புரிந்து கொள்ள உதவியாக அமைகிறது.
            ஒரே படைப்பாளி வெவ்வேறு இலக்கிய வடிவங்களில் இயங்கச் கூடியவனாக இருக்கும்போது திறனாய்வாளன் படைப்பின் ஊற்றுக் கண்ணைக் கண்டறிவது சற்றுக்கடினம்தான். பசுவய்யாவாகக் கவிதை படைத்த படைப்பாளி, சுந்தரராமசாமியாகக் கதை சொல்லியாக மாறும் கணத்தை மதிப்பிடுவது சவாலானதுதான்.
            படைப்பாளி வடிவத்தைத் தீர்மானித்த நிலை கடந்து, அவன் சொல்ல விழையும் பாடுபொருள், வடிவத்தைத் தீர்மானிக்கிறது.  வேதியியல் ஆய்வுக் கூடத்தில் பீயூரெட்டிலிருந்து விழும் சொட்டுத்திரவத்தின் எந்தத்துளி, குடுவையிலுள்ள வேதிப் பொருளை ஒரு வினாடியில் நிறம் மாற்றும் என்பதை இமைக்காமல் பார்த்தாலும் எப்படியும் தவறவிட்டுவிடுமோ அதே போன்ற நிலைதான் வண்ணதாசன் கல்யாண்ஜியாக மாறுகிற வினாடி.
            மரங்களைப் பற்றி, மாங்கொப்பை முறித்த மணத்தைப் நுகர்ந்து ஓடிவருகிற ஆயாம்மா பற்றி, 'ஒண்ணைப் பிடுங்கினா ஒண்ணை நடணும் இல்லையா' என்று  நடுகை கதையில் நடுதலைப் பற்றிச் சொல்லும் அதைக் கவிதையில் சுருக்கமாக, உருக்கமாகக் கூறுகிறார்.
            “பென்சில் சீவிக் கொண்டிருந்தேன்.
            மொரமொரவென
            மரங்கள் எங்கோ சரியா” என்று
வண்ணதாசன் கல்யாண்ஜியாக மாறுமிடம் முக்கியமானது.  முன்பின், புலரி, கல்யாண்ஜி தேர்ந்தெடுத்த கவிதைகள், நிலா பார்த்தல், அந்நியமற்ற நதி, இன்னொரு கேலிச் சித்திரம் என்ற அனைத்து கவிதைத் தொகுதிகளிலும் கல்யாண்ஜியின் தனித்துவம் தெரிகிறது.
            ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் ஒரு தமிழ்ப் படைப்பாளி எத்தனை வாசகர்களாகச் சென்றடைந்துள்ளார்? என்ற கேள்வி தமிழ்ச் சூழலில் கவலை தரத்தக்கது.  'ஒளியிலே தெரிவது' நூலின் முன்னுரையில் வண்ணதாசன் இவ்வாறு ஆதங்கப்படுகிறார்.  '2007 இல் வந்த பெய்தலும் ஓய்தலும்’ புத்தகத்தை இப்போதுதான் வந்திருக்கிற ஒன்று போல, 2010இல் வலைப்பதிவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்' என்று கூறும் வண்ணதாசன், “இப்போது இந்த லட்சணம் என்றால் சந்தியா பதிப்பகம்
2000-2001இல் என்னுடைய முழுத் தொகுப்பையும், கிருஷ்ணன் வைத்த வீட்டையும். வெளியிட்டிருக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும்? கற்றுணைப் பூட்டிக் கடலில் பாய்ச்சி நற்றுணையாவது நமச்சிவாயவே என்று திருச்சிற்றம்பலம் பாடி முடித்திருப்பார்கள்.   நான் கிட்டத்தட்டக் காணாமல் போயிருக்கும் வாய்ப்பு உண்டு” என்று எழுதுகிறார்.
            பாரதி தொடங்கி வைத்த கவிதைப் பரம்பரையில் வெளிவந்த ஓர் அழகியல் கவிஞன், கி.ரா.கு.ப.ரா. புதுமைப்பித்தன், மௌனி, ல.சா.ரா. இழுத்த சிறுகதைத் தேரை ஐம்பதாண்டுகளாக இழுத்துக் கொண்டிருக்கும் எதார்த்த சிறுகதையாசிரியன், “கவிதையும் உரைநடையும் கலந்து புதிய உரைவீச்சோடு 'அகம்புறம்' படைத்த உரைநடை நாயகன், கடிதத்தாள்களையே இலக்கியப் பக்கங்களாக மாற்றிக் கடித இலக்கியப் பக்கங்களாக அன்பாளன், கோட்டோவியங்களால் மனக்குகைகளில் சித்திரங்கள் வரைந்த சித்திரக்காரன் காலத்தின்முன் காணாமல் போய் விடுவேனோ என்று கையறுநிலையில் பேச வேண்டிய சூழல் நவீன இலக்கியத்திற்கு நல்லதல்ல.
            வாழும் மக்களின் வாழ்வியலை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடர்ந்து பதிவு செய்து தரும் இந்த அன்பு எழுத்தாளனுக்குத் தமிழ்கூறு நல்லுலகம் எவ்வாறு கைம்மாறு செய்யப்போகிறது?  தாமதமாய் தரும் மதிப்பு தரமான எழுத்தாளர்கள் உருவாதலைத் தடுக்கும்.