ஜி.நாகராஜன் நினைவுநாள் பிப்ரவரி19
துயரங்களை உயரமேற்றிய கலைஞன்: ஜி.நாகராஜன்
.....................................................................................................................
*முனைவர் சௌந்தர
மகாதேவன்,தமிழ்த்துறைத்தலைவர்,
சதக்கத்துல்லாஹ்
அப்பா கல்லூரி,திருநெல்வேலி
mahabarathi1974@gmail.com,
9952140275
காலமெனும் அகண்டவெளியில் விசித்திர சித்திரங்களை
வரைந்து சென்ற உன்னதக் எழுத்தாளர் ஜி.நாகராஜனின் படைப்புவெளி எந்தச்
சட்டகங்களுக்குள்ளும், எந்தச் சட்டங்களுக்குள்ளும் அடைபடாதது. சமூகத்தின் வலிகளை
வார்த்தைகளாக்கும் நுட்பம் அறிந்தவர் ஜி.நாகராஜன்.
படைப்பாளிகளின்
பார்வைக்கு அகப்படாத விளிம்புநிலைத் தொழிலாளர்களை நோக்கித் தன் எழுத்தின்
கழுத்தைத் திருப்பியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
பத்து விரலும் உழைத்தால்தானே
ஐந்துவிரல் அள்ளித் தின்ன முடியும்? ஆசிரியப் பணியாற்றிய மனிதர், படைப்பின்
பக்கங்களில் இளைப்பாறியது காலம் செய்துவைத்த கோலம்.
ஆட்களை மறந்துவிட்டு நாட்களைக் கொண்டாடிக்
கொண்டிருக்கும் நமக்கு அவர் எழுதிய “ நாளை மற்றுமொருநாளே” எனும் நாவல்
அதிர்ச்சிதரும் பக்கங்களை விரித்துரைத்துச் செல்கிறது.
ஒழுக்கத்தை ஒருவர்கூட விடாமல் பேசிக்கொண்டே
பிறழ்வுகளின் பின்னால் பயணித்துக் கொண்டிருக்கும் வேடிக்கை மாந்தர்களை முகத்திரை
கிழித்து காட்டிய கலைஞன் ஜி.நாகராஜன். அவர் பாத்திரங்கள் பாசாங்கற்றவை.
இடதுகையால் மேலிருந்து தொங்கும் கயிற்றினைப்
பிடித்துக்கொண்டு வழியும் வியர்வையை வலதுகையின் ஆட்காட்டிவிரலால் வழித்து
தோசைக்கல்லில் சுரீரென்ற சப்தத்தோடு கொண்டுசேர்கிற உணவுக்கலைஞனின் யதார்த்தம்
குறத்திமுடுக்கில் உண்டு.
கடலைக் கடக்கிற பெருமுயற்சியோடு உடலைக் கடக்கிற
உள்ளங்களை 61 பக்கமே உள்ள குறத்திமுடுக்கில் அலையவைத்து வேடிக்கை பார்த்திருப்பார்.
எரிந்துஎரிந்து புகையின் அடர்த்தியால் கரிபூசப்பட்ட சிமினிவிளக்கைக்
கைக்கரியோடுதானே எழுதமுடியும்? ஜி.நாகராஜன் அப்படியே எழுதியிருக்கிறார்.
துணிச்சலாகவண்ணம் பூசிமறைக்கப்பட்ட நகங்களின் அழுக்கினையும்
மெல்லிசான எண்ணம் பூசி மறைக்கப்பட்ட அகங்களின் இழுக்கினையும் ஒருசேரத்
தோலுரித்துக்காட்டி வெளிச்சத்திற்கு வெளியேயும் அவரால் பார்வையோடு படைப்பைத்தர
முடிந்திருக்கிறது.
துக்கவிசாரணை,போலியும் அசலும்,ஓடிய கால்கள்,டெர்லின்
சர்ட்டும் எட்டுமுழவேட்டியும் போன்ற நல்ல சிறுகதைகளைப் படைத்திருக்கிறார். தனிமனித
வாழ்விலும் படைப்பிலும் அவர் மேற்கோண்ட துணிச்சல் வியக்கவைக்கிறது.அவர்
பயன்படுத்திய படைப்புமொழி குத்தீட்டிபோன்று கூர்மையானது.அவர் படைப்புக்கள்
திறந்துவைக்கும் வாசல்கள் வாசகனுக்குச் சுவாரசியம் தரக்கூடியது.
தேர்ந்த ஒரு
கமெராக் கலைஞனைப் போல் அவர் பின்னணியோடு அங்குமிங்கும் நகர்த்திக் காட்டும்
களங்கள் யதார்த்தமானது.மென்மையான நரம்பில் கோர்த்துக் கட்டுகிற வெண்மையான
முத்துகளைப் போல் அவர்கதைமாந்தர்கள் கண்ணுக்குத் தெரியாத இழையில் இணைக்கப்பட்டு
உலவுவது அழகானது.
கால்களைக் கட்டிப்போட்டு உளியால் சீவி லாடம்
அடிக்கிறபோது மாடுபடும் அவஸ்தைபோல் சிலகதைகளில் வாசகன் துன்புறுகிறான் அவர்படைத்த
கதைவெளி மாந்தர்கள் கக்கும்வாய்நுரை கண்டு. இருந்தாலும் என்ன இருப்பதைத்தானே
எழுதமுடியும்..அவன் படைப்பாளியாய் இருக்கிறவரையில்.
No comments:
Post a Comment