Sunday, July 12, 2015

காதுகளால் பேசிய கதைக்கலைஞன்: எம்.வி.வெங்கட்ராம் : முனைவர் சௌந்தர மகாதேவன்



         

பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,
தமிழ்த்துறைத்தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி), திருநெல்வேலி


       
   சொல்நூல்களால் நன்நூல்களை நெசவுசெய்த நேசத்திற்குரிய நாவலாசிரியர்.

 பதினாறு வயதில் மணிக்கொடியில் முதன்முதலாய் “சிட்டுக்குருவி” எனும் கதை எழுதி, கதைஉலகில் நடக்கத் தொடங்கினார்.

 நித்தியகன்னி, இருட்டு, உயிரின் யாத்திரை,அரும்பு, ஒரு பெண் போராடுகிறாள், வேள்வித்தீ, காதுகள் என்பன எம்.வி.வெங்கட்ராம் படைத்த அற்புதமான புதினங்கள்.தமிழ்ச்சூழலில் வாழும் சௌராஷ்டிர மக்களின் வாழ்வியலை அழகாகப் பதிவுசெய்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.


 நெசவுத்தொழில் புரியும் கண்ணன் எவ்வாறு தேர்ந்த நெசவுக்கலைஞராக மாறினார் என்பதை நனவோடை உத்தியைப் பயன்படுத்தி மிக எளிய நடையில் எம்.வி.வி. “வேள்வித்தீ” எனும் புதினமாய் எழுதினார். 


ந.பிச்சமூர்த்தியும்,கு.ப.ரா.வும் சிறுவயது முதலே நெருக்கம் என்பதால் அவரது இலக்கியவட்டம் தரமாய் அமைந்தது.பி.எஸ்.ராமையாவின் ஊக்கம் எம்.வி.வி.யை மணிக்கொடியில் தொடர்ந்து எழுதவைத்தது. 

அவர் மணிக்கொடியில் எழுதியதைப் பார்த்து கலைமகளில் எழுதச்சொன்னார்கள். மணிக்கொடி நின்றுபோன பின், அதில் எழுதிய எழுத்தாளர்களுக்காக 1948இல் அவர் ஆசிரியராகவும், கரிச்சான்குஞ்சு துணை ஆசிரியராகவும் பொறுப்பேற்று “தேனீ  என்ற இலக்கிய இதழை எம்.வி.வி. தொடங்க அதில், சி.சு.செல்லப்பாவைத் தவிர அனைத்து மணிக்கொடிப் படைப்பாளர்களும் அதில் எழுதினார்கள். தேனீ இதழ்கள் 12 வந்தன. 


க.நா.சு., தி.ஜானகிராமன் போன்றோர் எம்.வி.வி.யின் நண்பர்களாகத் திகழ்ந்தனர். இலக்கியத்தைவிட நட்புக்கு அவர் அதிக முக்கியத்துவம் தந்ததால் எதிர்கருத்தியல் கொண்ட எழுத்தாளர்கள்,விமர்சகர்களோடும் அவரால் நண்பராய் இருக்கமுடிந்தது.வாழ்வின் வெறுமையின் காரணமாகத் தீவிர நாத்திகராக இருந்த எம்.வி.வி. ஒருநாள் இரவுகண்ட கனவின் மூலம் தீவிரஆத்திகராய் மாறியதை அவரே சுவைபட எழுதியுள்ளார்.

 அவரது “காதுகள்” புதினம் சாகித்ய அகாதெமி விருது பெற்ற வித்தியாசமான புதினம்.இவ்வுலக வாழ்வின் தடைகளைத் தாண்ட ஆன்மீகத் தேடல் நடத்திய கதைத்தலைவனை ‘மாயை’ தடுக்கிறது.

 அந்த மாயத் தளையிலிருந்து விடுபட அவன் நடத்தும் அகமனப் போராட்டத்தின் பலத்த சப்தமே ‘காதுகள்’ புதினம். தன் காதுகளில் வினோதமான பலத்த சப்தம் கேட்டுக்கொண்டே இருந்தநிலையில் அதுகுறித்து ந.பிச்சமூர்த்தியிடமும்,தி.ஜானகிராமனிடமும் சொல்ல, அவர்கள் அதை ஆவலோடு கேட்டதாக எம்.வி.வி.சொல்லியுள்ளார். 

எப்போதும் தன் காதுகளில் முருகனின் குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது என்று எம்.வி.வி. நேர்காணல்களில் குறிப்பிட்டார்.
 தன் படைப்புக்களில் சிறந்தபடைப்பாக எம்.வி.வி “ அரும்புகள்” புதினத்தையே கருதினார். தி.ஜானகிராமனின் வற்புறுத்தலால் சுதேசமித்திரன் இதழுக்கு எம்.எம்.வி.தொடர்கதை எழுதத் தொடங்கினார்.அந்தக் காலத்தில் சுதேசமித்திரன் வாரத்திற்கு ஐம்பதுரூபாய் சன்மானம் தந்து அவரைத் தொடர்எழுதச்சொல்லவே தொடர்ந்தார்.

 இரண்டு அத்தியாயம் கடந்தபின் சாலிவாகனன் கோபத்தோடு எம்.வி.விடம் வந்து, “ என்னையா இப்படியெல்லாம் கதை எழுதறே?.. நாங்கள்லாம் படிக்கணுமா வேண்டாமா? என்று கோபமாய் கேட்டார்.அப்போது அவரைச் சமாளித்து அனுப்பிவிட்டேன். ஆனால் என்னுள் பயமும் அவநம்பிக்கையும் தோன்றிவிட்டது.எப்படி இந்த நாவலை முடிக்கப் போகிறோமென்று பயந்தேன்.என் காதுகளில் ஒலித்த முருகனின் குரல் என்னை உற்சாகப்படுத்தித் தூண்டிவிட, எந்தத் தடையுமின்றி நான் அதை எழுதி முடித்தேன். ஆனால் என்னுடைய எந்த நாவலும் தரத்தில் குறைந்தது அல்ல என்பது எனது அபிப்பிராயம்.நான் யாரையும் விட உயர்ந்தவன் இல்லை.ஆனால் யாரையும் விடத் தாழ்ந்தவன் இல்லை” என்று சுபமங்களா நேர்காணலில் எந்தவித ஒளிவுமறைவுமின்றித் தன் மனதில் பட்டதை இளையபாரதியிடம் சொன்ன எம்.வி.வெங்கட்ராமின் உரத்தகுரல் நம் காதுகளிலும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது

 “அவர் எழுத்துகள் அழகு..அழகு” என்பதாக.

நன்றி: மாதவம் மாதஇதழ்










No comments:

Post a Comment