நலம் நலமறிய ஆவல்..
....................................................................................................................................................
முனைவர் சௌந்தர மகாதேவன்,தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி,9952140275
உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் உங்கள்
சொந்தக் கையெழுத்தில் எதையாவது நீங்கள் எழுதி எத்தனைநாட்களாயிற்று!
எழுத்து எத்தனை
சுகமான அனுபவம்.வளைவும் நெளிவும் கூட்டி மனதின் நடைச் சித்திரத்தை விரல்கள் வழியே
நம் சொந்தக் கையெழுத்தில் எழுதுவது எத்தனை அழகானது.”நலம் நலமறிய அவா” என்று
தொடங்கி மற்றவை நேரில் என்று முடித்து அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதி
யுகமாகிவிட்டது.கிர்ரென்ற சப்தத்தோடு பித்தளைப் பாத்திரத்தில் அழகான கையெழுத்தில்
நம் பெயரை எழுதித்தருகிற மனிதர்கள் குறைந்து போய்விட்டார்கள்.
எழுத்தைத் தொலைத்த எந்திரவாழ்க்கை
இனிமையை இழத்தல் எத்தனை கொடூரமானது! வானத்தில்
பறக்கும் பறவை விரிவானைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுப் பார்ப்போரைக்
கழுத்துவலிக்கத் திரும்பிப் பார்க்கவைப்பதுபோல் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்த
நம் தனித்தன்மையான எழுத்து நம்மைவிட்டு எப்படிப் போனது? எழுத்து நம்மைவிட்டு
எழுந்துபோய்க் கொண்டிருக்கிறதோ என்று எண்ணும்படி கணினி நம்மை ஆட்கொண்டுவிட்ட
நாளில் நாம் எழுதிப் பழகிய விசித்திர சித்திர எழுத்துமேடை கல் சிலேட்டு
நினைவலைகளில் நீந்திநீந்தி அப்பால் போய்க் கொண்டிருக்கிறது.
உடைந்த மனங்கள்,உருக்குலைந்த உறவுகள் இவற்றின் பட்டியலில் இப்போது எழுத்தும்
வந்துவிட்டது காலத்தின் கோலம்தான்.
கடிதக் கடல்
வாழ்த்துக் கடிதங்கள், விமர்சனக்
கடிதங்கள்,கருமாதிக் கடிதங்கள் என்று கடிதஉலகில் கரைந்திருந்த நாம் கடிதங்கள்
எழுதுவதை ஏன் நிறுத்தினோம்? ஒவ்வொரு வீட்டுப் பனங்கையிலும் வளைந்த கொக்கியில்
குத்தப்பட்ட பலநூறு பழைய கடிதங்கள் உண்டே! காலம் அதன் பழுப்புநிற மூலைகளில்
கால்மடித்து அமர்ந்துகொண்டிருந்ததே..! “ய” வடிவ மாகாணிக் கொக்கிகளில் தொங்கிக்
கொண்டிருந்த அந்தக் கடிதக்கம்பிகள் எங்கே போயின? கல்வெட்டு போன்றும், பிழிந்த
ஜிலேபி போலும் எழுதிய என் தாத்தாவின் ஆச்சியின் விரல்கள் என்னை விட்டு எப்படித்
தூரப் போயின? பதினைந்து பைசாவில் அவர்களால் எப்படித் தங்களைத் தங்களால் எழுத்தாய்
வரைந்து தூரதொலைவிற்கு அப்படியே அனுப்ப முடிந்தது?
“அன்புள்ள மகனுக்கு உன் அன்பு அப்பா ஆசீர்வாதத்துடன்
எழுதுவது..தொலைவில் இருக்கிறாய் என எண்ண வேண்டாம் அப்பாவின் நினைவுக்கு
வெகுஅருகில்தான் நீ இருக்கிறாய்..” என்று தொடங்கி தந்தை எழுதிய கடிதத்தின்
அடுத்தவரியைப் படிக்காமல் அழுதிருக்கிறோமே.முப்பது ஆண்டுகளுக்கு முன்னுள்ள
கடிதங்களைப் படிக்கும்போது நம் மனம் அந்தக்காலத்தின் நீள்வெளியின்
நிசப்தப்பரப்பில் நீண்டநேரம் நிம்மதியோடு பயணித்துத் திரும்புகிறதே. எப்படி
இழக்கச் சம்மதித்தோம் அந்த சொந்தசொர்க்கத்தை? நாற்புறமும் கருமை பூசிய
அஞ்சலட்டையின் செவ்வகப்பரப்பில் உறவினரின் இறப்பை உரக்கச் சொல்லி நம்மை உலுக்கிப்
போடுகிற அந்த எழுத்தை நாம் எப்படித் தொலைக்கச் சம்மதித்தோம்.
பிரிவின் பதிவு
வயிற்றுப்பாட்டிற்காக மனைவியைப் பிரிந்து
வெளிநாட்டிலிருந்து ஏர்மெயில் அஞ்சல் உறையில் கண்ணீராலும் வியர்வையாலும் தன்னையே எழுத்தாய் வடித்துக் கடிதம் அனுப்பும்
கணவர்களும் நடுநிசிவேளையிலும் பலநூறுமுறை கண்களில் ஒற்றி ஒற்றிப் படித்துப்படித்து
அழுகிற அவர்கள் வீட்டுப் பெண்களும் எப்படி மறந்தார்கள் அந்த முத்துமுத்தான
கையெழுத்துகளை.”இந்தக் கடவுளின் அற்புதத்தை நூறு அஞ்சலட்டைகளில் உங்கள் சொந்தக்
கையெழுத்தில் எழுதிஅனுப்பினால் ஒரு வாரத்தில் உங்கள் வாழ்வில் அதிசயம் நடக்கும்”
என்று நமக்கு யாரோ அனுப்பிய கடிதத்தை அப்படியே சிரம்மேல் ஏற்று இரவோடு இரவாகக்
கைவலிக்க அஞ்சல்அட்டைகளில் சிரத்தையாய்எழுதி, அடுத்தநாள் காலையில்
அஞ்சல்பெட்டியில் போட்டுவிட்டு அதிசயங்களுக்காகக் காத்திருந்த அந்த நம்பிக்கை
நாட்கள் எங்கே போயின?
விதவிதமாய் விந்தைக் கடிதங்கள்
வேளாவேளைக்குச் சாப்பிடச் சொன்ன அம்மாவின்
அன்புக்கடிதங்கள், ஊரில் மழைபெய்ததையும் வெள்ளாமை செழிப்பாய் விளைந்ததையும்
பூரிப்பாய் சொன்ன அப்பாவின் கடிதங்கள், ஜியாமின்றி பாக்ஸ் வாங்கிஅனுப்பச் சொல்லி
கோழிக்கிண்டல் எழுத்தோடு தங்கை அனுப்பிய வேண்டுதல் கடிதங்கள், சுடலைமாடன்
கொடைவிழாவுக்குப் பணம் அனுப்பச் சொல்லிக் குலதெய்வக்கோவிலிலிருந்து வந்த கடிதங்கள்
என்று கடிதக்கடலின் ஓரத்தில் முத்தெடுத்துக் கொண்டிருந்த நாம் எப்படித்
துயரத்துளிகளுக்குள் நம்மைச் சுருக்கிக்கொண்டோம்?
அறுந்த அஞ்சல் உறவு
அஞ்சலகப் பணிநேரம் முடிவதற்குள்
நின்றுகொண்டே அவசரமாய் நாம் எழுதிய
கடிதங்களையும் நம்மிடம் பேனா வாங்கிக் கடிதம் எழுதுகிறவர்கள் முடிக்கிறவரை நாம்
காத்திருந்த நிமிடங்கள் திரும்பக் கிடைக்குமா? பதினைந்து பைசாவில் இந்தியா முழுக்கத்
தகவல்பரிமாற்றம் செய்யவைத்த அந்த அஞ்சலகங்களைவிட்டு நம்மை நாம் அவசரமாய்
அப்புறப்படுத்திக்கொண்டது எந்தவகையில் நியாயம்? டயர் செருப்போடு நம் வீட்டுவாசலில்
நின்று “சார்..தபால்” என்று பாசத்தோடு மணியடித்து அழைத்து நம் உறவாகிப் போன அந்த
அஞ்சல்துறை நண்பர் வராததெரு நன்றாகவா இருக்கிறது?
நம் மையூற்றுப் பேனாக்கள் வற்றிப்போயின,
இன்லான்ட் கடிதங்கள் இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றன. ஊரும் பேரும்,தெருவும்
உருவும் இல்லா ஒற்றைவரி மின்னஞ்சல் முகவரிகளில் நாம் நம் முகவரிகளையும்
முகங்களையும் இழந்ததை நினைக்கும்போது மனதிற்குப் பாரமாகத்தானிருக்கிறது.
தொடர்பு எல்லைக்கு அப்பால்
தொடர்பு கொள்ளும்போது தொடர்பு எல்லைக்கு அப்பால்
இருப்பதாய் சொல்லும் பதிவுசெய்து வைத்த பதில்கள் பல நேரங்களில் மென்மையாய்
முகத்தில் அறைகின்றன.முகநூல் குறுஞ்செய்திகளும், ட்விட்டர் தொடர்புகளும், வாட்ஸ்
அப் உரையாடல்களும் மின்னஞ்சல் பரிமாற்றங்களும் தகவல்களை மின்னல் வேகத்தில்
கண்டம்விட்டுக் கண்டம் தாண்டிக் கொண்டுசென்றாலும் ஏதோஒன்றை இழந்ததாகவே மனம்
கருதுகிறது.அந்த ஏதோ ஒன்று நம் கையெழுத்துதான்.
எழுதுவோம் மறுபடியும்
மளிகைக்கடைச் சீட்டில், வெளுக்கப்போட்ட உடைகளைக்
குறித்துவைக்கும் நோட்டில், நன்கொடை ரசீதில்,புத்தகக் கண்காட்சியில் புதிதாய்
வாங்கிய புத்தகத்தின் முதல்பக்கத்தில், நண்பர்களுக்கு நாம் எழுதும்
கடிதங்களில்,முகவரிக் குறிபேட்டில், தினமும் நடந்ததை எழுதும் நாட்குறிப்பேட்டில்
ஏதோவொரு பதிவை நம் விரல்களால் வலிக்கவும் இனிக்கவும் எழுதிய நாம் இன்று கணினித்
தட்டச்சுப் பலகைகளில் எழுத்துகளைத் தட்டிக்கொண்டும்,கைப்பேசிகளின் தொடுதிரைகளைத்
தடவி எழுத்துக் கோர்த்துக் கொண்டிருக்கிறோமே! எப்போது எழுதப் போகிறோம் மீண்டும்
கடிதங்களை நம் விந்தை விரல்களால்?
மறுத்தால் மறந்துபோகும், வளைந்து நெளிந்து
உருண்டுதிரண்டு தொடர்வண்டிப் பெட்டி போல் வரிசையாய் அணிவகுக்கும் அற்புதமான
உயிரும் மெய்யும்.
நம் எழுத்து நம் சொத்து.நம் எழுத்து நம்
முகம்.நம் எழுத்துதான் நாம்.தினமும் எனக்கு வரும் கடிதம் என் உயிர்மையின்
அடையாளம். என் நட்பின், என் உறவின்,என் நெருக்கத்தின் உருக்கம்.கடிதப்பெட்டிகளில்
காற்று மட்டுமே நிரம்பிக் கிடப்பது பிரிவின்,சரிவின்,முறிவின் அடையாளம்.ஏழுநாட்கள்
சிலருக்கு வாரம்,சிலருக்கு வரம்.வரமாய் வந்த நாட்களில் நம் கரங்களால் மீண்டும்
கடிதங்கள் எழுதுவோம்.
இறைவன் தந்த இனிமை வாழ்வை உறவால் நிரப்புவோம்.நலம் நலமறிய
ஆவல் எனக்கு..உங்களுக்கும்தானே.
No comments:
Post a Comment