Sunday, July 12, 2015

லா.ச.ரா. என்கிற சௌந்தர்யநடைக் கதையாளர் : முனைவர் சௌந்தர மகாதேவன்





       
 முனைவர் சௌந்தர மகாதேவன்,தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி( தன்னாட்சி), திருநேல்வேலி

“நான் ஒரு சௌந்தர்ய உபாசகன்” என்று அழகியலோடு சொன்ன லால்குடி.சப்தரிஷி.ராமாமிர்தம், தமிழ்அழகியல் நடையின் முன்னோடி. 

வாழ்க்கைக்கு ஆயிரமாயிரம் வரையறைகளைப் படித்திருக்கிறோம்; லா.ச.ரா. போல் யாரும் எளிமையாய் சொன்னதில்லை,

 “சில அழகான மக்களைச் சந்திக்கிறோம், அதற்குத்தான் வாழ்க்கைஎன்று அவர் சொன்னது திகைப்பாயிருக்கிறது. சௌந்தர்யத்தை அந்தரநடையில் தந்த அற்புதக் கலைஞர் லா.ச.ரா.வின் தேர்ந்த எழுத்துநடை, கருப்பு மை பூசிய காரிருளில் திடீரென்று பாய்ந்து நம்மைப் பரவசப்படுத்தும் மின்மினிப்பூச்சி போன்றது.

 மவுனத்தின் நாவுகளால் தன் படைப்பில் பேசிய மாகலைஞானியும்கூட. வாசகனை உள்ளொளி நோக்கிப் பயணிக்க வைத்தவர்.

 என் பிரியமுள்ள சினேகிதனுக்கு’, ‘பச்சைக் கனவு’, ‘வித்தும் வேரும்’, ‘யோகம்’, ‘பாற்கடல்அவருடைய அற்புதமான படைப்புகள். 

சிந்தாநிதி அவர் தன்னையே பிழிந்துவைத்த அபூர்வமான படைப்பு. மௌனம் அவருக்குப் பிடித்தமானது. மௌனம் உருவாக்கிய இடைவெளிகளில் அவர் பாத்திரங்கள் வழியே மகிழ்வலைகளோடு படைப்பாக மாற்றிப் பயன்படுத்தியுள்ளார். 

புத்ர,அபிதா,கல்சிரிக்கிறது,பிராயச்சித்தம்,கழுகு,என்பன அவர் எழுதிய அற்புதமான புதினங்கள். 
வாசகனை மயக்கவைத்த அபிதாஎனும் அவர் குறுநாவலில், ‘கண்ணைக் கசக்கி இமைச் சிமிழ் திறந்ததும் கண் கரிப்புடன் திரையும் சுழன்று விழுந்து சித்திரத்திற்குக் கண் திறந்த விழிப்புஎன்று சொல்லியபடி, ‘அபிதா, நீ என் காயகல்பம்என்று அவரது கவிதை நடைக்குள் நுழைந்தவர்கள் இன்னும் வெளியே வரவில்லை.
 “ அனு என்றால் ரகசியம், பவம் என்றால் பொருள், அனுபவம் என்றால் ரகசியமான பொருள். காதல் தகிக்கும் சூடு இன்பமான அனுபவம்.” என்று சொன்ன லா.ச.ரா.ஆண்பெண் உறவுநிலைகளை மிக அழகாக இயல்பாகச் சொன்னவர்.

 எழுத்துகாக யாரோடும் எதற்கும் சமரசம் கொள்ளாதவர். 
மரணத்திற்கான சுகமான காத்திருப்பே வாழ்க்கை என்று இயல்பாகச் சொன்ன லா.ச.ரா. வாழ்வையும் மரணத்தையும் கலந்து அழகாகத் தந்தவர். 

வாசகன் மனதில் வைத்துக் கொண்டு சொல்லமுடியாமல் தவிக்கும் ஒரு அவஸ்தையை எழுத்தாளன் மிக இயல்பாக,மிக அழகாகச் சொல்லிவிட்டுச் செல்வதால் வாசகனுக்கு அந்த எழுத்தாளனின் எழுத்துமிகவும் பிடித்துப் போகிறது என்று லா.ச.ரா.கருதினார்.

அவரின் காயத்ரீ, விர்ரென்று வானம் பாயும் சிம்புட்பறவை. சொற்கள் வாக்கியங்களாய் கைகோத்து நின்றுகொண்டு, அவர் நினைத்ததைச் சொல்லப் பேராவல் கொள்ளும் அதிசயம் அவர் படைப்புலகின் தனித்தன்மை.

 ‘‘கடிகாரத்தின் விநாடிகள் ஒன்றன்பின் ஒன்றாய் தம்மைச் சொடுக்கிக்கொண்டு சுவரிலிருந்து புறப்பட்டு இருளோடு கலந்தனஎன்ற லா.ச.ரா-வின் வரிகளில் காலம் கைகட்டி நிற்பதைக் காண முடிகிறது. 
எழுத்து அவருக்கு மூச்சுவிடுவதைப் போன்ற இயல்பான ஊக்கநிகழ்வு. “நான் யாருக்காகவும் எழுதவில்லை..எனக்காக என் ஆத்ம திருப்திக்காக எழுதுகிறேன்” என்று சொல்லும் லா.ச.ரா கதையைக் கவிதையாக்கித் தரும் கலைநுட்பம்  பெற்றவர்.

நன்றி: மாதவம் மாதஇதழ்

No comments:

Post a Comment