Thursday, January 10, 2013

சமூக மாற்றத்தில் தமிழ் இதழ்களின் சீரிய பங்களிப்பு – வரலாற்றுப் பார்வை

   சமூக மாற்றத்தில் தமிழ் இதழ்களின் சீரிய பங்களிப்பு – வரலாற்றுப் பார்வை


     பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
ரஹ்மத் நகர், திருநெல்வேலி 627 011.

தொடக்கம்
பத்திரிகையாளரின் எழுதுகோல் தலைகுனிவதே இச்சமூகம்
தலைநிமிரத்தான்.  ஆட்சிப்பீடம், நாடாளுமன்றம், நீதிமன்றம் எனும் முத்தூண்களோடு, நான்காம் தூணாய் அமைந்து சனநாயகத்தைச் சலவை செய்துவரும் முக்கியத்தூண் பத்திரிக்கைகள் ஆகும்.  
தமிழா! நீ இருந்ததுபோதும் செருப்பாய், இனிமேல் இருப்பாய் நெருப்பாய் எனும் கவிஞர் காசிஆனந்தனின் எழுச்சி வரிகளை நாம் அறியத் தந்த ஊடகங்கள் பத்திரிகைகள்.  கீழவெண்மணியில் கொடூரமான மனிதர்நோகப் படுகொலை நடந்தபோது உலகப் பார்வைக்குக் கொண்டு சென்றதும் பத்திரிகைகள்தாம்.  நேர்கொண்ட பார்வை, நிமிர்ந்த நன்னடை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத கம்பீரம், சமூக மாற்றத்திற்காகத் தன் உடல் பொருள் ஆயுளாலே அளித்த தியாகம்... இவை போன்ற பண்புகளால் தன்மானம் ஊட்டிய இனமானப் பெரியாரின் குடியரசு எண்பதை எட்டுகிறது என்பதால் இக்கட்டுரை ஒருசில இதழ்களை முன்னிறுத்துகிறது.
சுதேசமித்ரனும் சமூக மாற்றமும்
    ஜி. சுப்பிரமணிய ஐயரால் தொடங்கப்பெற்ற (1882) சுதேசமித்ரன் வார இதழ், 1889 ஆம் ஆண்டிலிருந்து நாளிதழாய் உருப்பெற்றது.  சமூக மாற்றத்தை முன்னிறுத்திப் புதுமை போக்குடன் திகழ்ந்தது.  சமூக, அரசியல், பொருளாதார நோக்கில் இவ்விதழ் ஒவ்வொரு நிகழ்வையும் விமர்சித்தது.  தேச விடுதலையும், சமூக விடுதலையும் இதன் இரு கண்களாகத் திகழ்ந்தன.  பாரதி 1904 இதன் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.  அவரது கட்டுரைகள் பெண்விடுதலை, தீண்டாமை ஒழிப்பு, விதவை மறுமணம், பெண் கல்வி போன்ற கோணங்களில் சமூகம் எழுச்சி பெற உதவின.
    அதன்பின் 1906இல் பாரதி தொடங்கிய இந்தியா தமிழ் வார இதழும் பாரதி ஆசிரியராயிருந்து வழிகாட்டிய சக்ரவர்த்தினி மாத இதழும் சமூக மாற்றத்திற்குப் பேருதவி புரிந்தன.  பாரதி ஆசிரியராயிருந்து (1909 1910) புதுவையிலிருந்து நடத்திய விஜயா நாளிதழ் தீண்டாமையைக் கடுமையாகச் சாடியது.  அந்நாளிதழின் 18.02.1910 தேதியிட்ட இதழில் பாரதி தீண்டாதவர்கள் எனும் கட்டுரையில் தீண்டாமையைக் கடுமையாகச் சாடுகிறான்.  நாம் இந்தச் ஜாதியாரில் ஒவ்வொருவனும் நற்குணமில்லாதவனென்று கருதுவது கண்மூடித்தனமாகும்.  உலகத்தில் ஒவ்வொரு ஜாதியாரும் பெருமையாய் வாழ விரும்ப வேண்டுவது இயற்கை.  ஒருவன் பிறப்பில் தாழ்ந்த ஜாதியென்றும் மேலான ஜாதியென்றும் பிரிக்கப்படுவது நியாயமாகாது.  எல்லோரும் தெய்வ சிருஷ்டி. (பாரதி விஜயா கட்டுரைகள் தொ.ஆ. ஆ.இரா. வெங்கடாசலபதி, ப.130 131) தீண்டாமையைக் கருத்தில் மகாத்மாவோடு பாரதி முரண்பட்டு இதழ்களில் எழுதிக் கண்டித்ததை உணர முடிகிறது.
தேசபக்தனும் சமூக மாற்றமும்
    திரு.வி.க. 1917இல் ஆசிரியராய் பொறுப்பேற்ற தேசபக்தன் தூயத் தமிழில் சமூக முன்னேற்றக் கருத்துக்களை முன் வைத்து சாதிமத பேதங்களைத் தேசபக்தன் கடுமையாய் சாடியது.  தொழிலாளர் முன்னேற்றம்,  பெண் கல்வி, சாதி ஒழிப்பு போன்ற கருத்துகளைத் தேசபக்தனில் திரு.வி.க. தொடர்ந்து எழுதினார்.
தந்தை பெரியாரின் எழுத்தோவியங்கள் ஏற்படுத்திய சமூக மாற்றம்
    தந்தை பெரியாரின் இதழியல் சாதனைகள் மகத்தானவை கடவுள் மறுப்பாளர் எனும் ஒரே காரணத்தால் அவர் செய்த சமூக முன்னேற்ற முயற்சிகள், அவர் நடத்திய இதழ்கள் சாதித்த சாதனைகள் ஆகியன இன்றும் இருட்டடிப்பு செய்யப்படுவதையும் கொச்சைப்படுத்தப்படுவதையும் காணமுடிகிறது. அச்சமற்றவன் ஒற்றை மனித இராணுவம் எனும் கூற்றுக்கேற்பப் பெரியார் பகுத்தறிவு இராணுவமாகவே திகழ்ந்தார்.  வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் வேறுபாடின்றி வாழ்ந்ததால் இன்று அவர் மட்டுமே பெரியார் எனும் அடைமொழிக்குச் சான்றாகிறார்.  1929 ஏப்ரலிலிருந்து பெரியார் திராவிடன் இதழின் நிர்வாகப் பொறுப்பை ஏற்று, எரிமலையாய் எழுதினார்.  அதன்பின் கோவைச் சிறையில் தன் நண்பர் தங்கபெருமாள் பிள்ளையுடன் இருந்தபோது (1922)  குடியரசு எனும் இதழைத் தொடங்கப் பெரியார் எண்ணினார்.  அக்கனவு 1924இல் நனவானது.  இதழின் முகப்பில் பாரதமாதா படம், மகாத்மா காந்தி வாழ்க எனும் வாசகமும் இடம் பெற்றது தலையங்கப் பக்கத்தில் கைராட்டை இடம் பெற்றது.
    மக்களின் சுயமரியாதை ஓங்க வேண்டும்.
    சாதி என்ற சொல்லே சாக வேண்டும்.
    இன உணர்வுகளும் ஒற்றுமையும் உருப்பெற வேண்டும்.

என நினைத்த பெரியார் 1933 இல் குடிஅரசு தடை செய்யப்பெற்ற பின் புரட்சி பகுத்தறிவு, விடுதலை உண்மை, போன்ற இதழ்களைத் தொடங்கி நடத்தினார்.  பகுத்தறிவில் அவர் முன் வைத்த எழுத்துச் சீர்திருத்தமே இன்று நடைமுறையில் உள்ளது.  எழுதியதோடு மட்டுமல்லாது, செயல்பாட்டிலும் சிறந்து விளங்கினார்.  தாழ்த்தப்பட்டோர் அவரால் வைக்கம் தெருவில் கம்பீரமாய் நடந்தனர்.  வ.வே.சு.ஐயர் சேரன்மகாதேவியில் நடத்திய பரத்வாஜ குருகுலத்தில் நடைபெற்ற சாதிய ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்து எழுதித் தீண்டாமையைத் தடுத்தார். 48 ஆண்டுகள் பத்திரிகையாளராய் எழுதிச் சாதனை படைத்தார் வெண்தாடி வேந்தர் ஈ.வே.ரா. பெரியார்.

பேரறிஞர் அண்ணாவும் சமூக மாற்றமும்
    அரசியல் விழிப்புணர்ச்சி சீர்திருத்தம், பகுத்தறிவு கருத்துக்களோடு அண்ணா 1942ல் திராவிடநாடு இதழில் அனலாய் எழுதினார்.  தம்பிக்கு என் கடிதம் மூடநம்பிக்கைகளைச் சாடினார்.  21 ஆண்டுகள் திராவிட இன எழுச்சிக்காக, மொழிவளர்ச்சிக்காக அரியகட்டுரைகள் தந்தார் அறிஞர் அண்ணா நவயுகம், விடுதலை, பாலபாரதி, மாலைமணி, நம்நாடு, காஞ்சி போன்ற இதழ்களில் எழுதித் தொடர்ந்து சமூக மாற்றம் கண்டார்.
ஆனந்த விகடனின் சமூகப் பார்வை
    பிரம்மன் எழுத்து ஆயுசோடு முடிகிறது.  ஆனால் பேனா பிடித்தவன் எழுத்து எத்தனை காலம் நீடித்து நிற்கிறது.  (அமரர் எஸ்.எஸ். வாசன் நூற்றாண்டு மலர் ப.96) என்று கூறிய எஸ்.எஸ். வாசன் புதூர் வைத்தியநாதையரிடமிருந்து எழுத்துக்கு 25 ரூபாய்வீதம் தந்து 1926 இல் ஆனந்த விகடனை வாங்கி வெற்றிகரமாய் நடத்தினார்.  சென்னையிலிருந்து கொண்டே ஈரோட்டில் ஈ.வெ.ரா. பெரியார் நடத்திய குடியரசு இதழுக்கு விளம்பரம் சேகரித்து அனுப்பினார்.  கேலிச்சித்திரங்கள், தலையங்கங்கள் மூலம் சமூக மாற்றத்திற்கு ஆதரவு அளித்தார்.  ஆனந்தவிகடன் நாடக இலக்கியப் போட்டிகள், முத்திரைக்கதைகள் போட்டி, முத்திரை ஓவியங்கள் போட்டிகள் நடத்தி சமூக மறுமலர்ச்சியினை ஏற்படுத்திப் பெரும்பரிசு தந்தார்.  பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை விகடனில் நடைமுறைப்படுத்தி ஸ்ரீமான்களைத் திருவாளராக்கினார்.  விகடன் மாணவர் பத்திரிக்கையாளர் திட்டம் வகுத்து இளைஞர்களைச் சமூக மாற்றத்திற்காக எழுத வைத்தார்.  கல்கியின் தியாக பூமியை ஆனந்த விகடனில் வெளியிட்டு நாட்டுப்பற்று, தீண்டாமை ஒழிப்பு, பெண்ணுரிமை ஆகியவற்றை இலட்சக்கணக்கான வாசகர்கள் சிந்திக்க வைத்தார்.  இன்றும் இதே போக்கு ஜுனியர் விகடன் (1982லிருந்து) அவள் விகடன் (1996லிருந்து) சுட்டி விகடன் (1999லிருந்து) சக்திவிகடன் (2004லிருந்து) நாணயம் விகடன் (2005லிருந்து) சிறப்பாகத் தொடர்கிறது.
கலைஞரின் எழுத்தோவியங்களில் சமூக மாற்றம்
    திருக்குவளையில் மாணவராயிருந்தபோதே மாணவநேசன் கையெழுத்து இதழ் நடத்திய கலைஞர் மு.கருணாநிதி குடி-அரசு இதழில் துணை ஆசிரியராய் பணியாற்றி விதவை மறுமணம்.  பகுத்தறிவு, இந்தி எதிர்ப்பு பற்றிய நிறைய எழுதியுள்ளார்.  மறவன்மடல், முத்தாரம் போன்ற இதழ்களை நடத்திய கலைஞரின் எழுத்து, கத்தியை விடக் கூர்மையான நாசூக்கா கலைஞர் எழுதும் திறன் பார்த்துத் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் கருணாநிதியைப் போலப் பொடி வைத்து எழுத வேண்டும் எனப் பாராட்டினார் முரசொலி நாளிதழை உருவாக்கிப் பேனா முனையில் கலைஞர் சமூக மாற்றம் செய்து தமிழக முதல்வராய் அரியாசனம் ஏறி உள்ளார்.
தினமணியின் சமூகச் சிந்தனை
    இதழாளர் திரு. சந்தானத்தால் 11.09.1934இல் தொடங்கப் பெற்ற தினமணி தேசப்பற்றை மிகத் தரமான தமிழில் தந்தது.  முதல் எட்டு ஆண்டுகள் டி.எஸ்.சொக்கலிங்கமும், அதன் பின் ஏ.என். சிவராமனும், ஐராவதம் மகாதேவன், புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா போன்றோர் பணியாற்ற உருவான தினமணி என்றும் எவருக்கும் எதற்கும் அஞ்சாமல், தரமாக, ஏழை எளிய மக்களின் சமூக மறுமலர்ச்சிக்காகத் தொண்டாற்றி வருகிறது.
முந்தித் தந்தி தந்த முன்னவர் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார்
    தமிழரின் சமூக மாற்றத்திற்காக “நாம் தமிழர் இயக்கம்“ கண்ட, தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் மக்களிடம் தமிழைக் கொண்டு சென்று கோடிக்கணக்கான மக்களை வாசிக்க, எழுதவைத்தார். உள்ளுர் பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து தந்தியில் வெளியிட்டார்.  உலகப்போரில் தினத்தந்திக்குக் காகிதப் பஞ்சம் ஏற்பட்டபோது வைக்கோலை அரைத்துத் தாள் தந்து கைத்தாள் தந்தி தந்தார்.  தொழில் துறையில் பின்தங்கிய தென் மாவட்டத்தின் சேரன்மகாதேவியில் 1962ல் சன் காகித ஆலையை உருவாக்கினார்.  இந்தியாவிலேயே தமிழ்ப் பத்திரிக்கைகள்தான் அதிகம் விற்பனையாகின்றன.  இதற்குக் காரணம் பேச்சு வழக்கிலுள்ள மொழியை அவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று மேனாள் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு தந்தியைப் புகழ்ந்து பேசியுள்ளார்.  ஆண்டியார் பாடுகிறார்.  சாணக்கியன் சொல் ஆகிய பகுதிகள் பாமர மக்களைச் சிந்திக்கத் தூண்டுகிறது.
தொகுப்புரை
    சமூக மாற்றம் என்பது இரவில் சிந்தித்துக் காலையில் அரங்கேறுவது அன்று.  அது நீண்ட தொடர் முயற்சி; அதில் தொடர்ந்து தமிழ் இதழ்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன.
    நேதாஜியின் பீராங்கிகளுக்கு அஞ்சியதை விடப் பாரதியின் இந்தியா காகிதங்களுக்கு ஆங்கிலேயர் அஞ்சினர்.  ஆயுதங்களால் முடியாததைத் தமிழ்க் காகிதங்கள் சாதித்துள்ளன.
    தமிழரை வாசிக்க வைத்துப் புதிய மரபுகளை நோக்கிக் கொண்டு சென்ற புதுமைப்பித்தன், கு.பா.ரா. ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, வண்ணதாசன் போன்றோரின் எழுத்துக்களைத் தொடர்ந்து வெளியிட்டுச் சமூகம் மாற்றம் காணத் தமிழ் இதழ்கள் உறுதியாய் உதவுகின்றன.
    மொழிப்போர் நடந்தபோது திருவனந்தபுரத்திலும் “தினமலர்“ கொண்டு வந்து டி.வி.ராம சுப்பையரும் குறிப்பிடத்தக்கவர்தாம் குமுதம் இதழைப் பல லட்சக்கணக்கில் வாசகரிடம் கொண்டு சென்ற எஸ்.ஏ.பி.யும் பாராட்டுக்குரியவர்.
    புதிய நோக்கோடு செயல்பட்டு புதுப்புனல், ரசனை, அம்ருதா, புன்னகை காலச்சுவடு, உயிர்மை, பறை தீராநதி, கணையாழி, இந்தியாடுடே, கசடதபற போன்ற சிற்றிதழ்களின் பங்களிப்பையும் மறுக்க இயலாது.
6.    குரோட்டன்ஸ் செடிகளைத் தொட்டியில் நட்டு அழகு பார்ப்பதை விட, அதே மண்ணில் பூசணி விதை போட்டு நாம் உருவாக்கித் பூசணிக்காய் இச்சமுதாயத்தில் ஒருவனது பசி அகற்றும்.  அறியாமைப் பசியகற்றும் அரும் பணியைத்தான் இச்சமூகம் இன்று பத்திரிகையாளர்களிடம் எதிர்பார்க்கிறது.
தந்தை பெரியாரின் குடிஅரசு இதழின் 80 ஆண்டுகள் நிறைவின் நினைவாக தமிழ்த்தினை நடத்திய இதழ்கள் எனும் கருத்தரங்கில் வாசித்த ஆய்வுக்கட்டுரை. (மார்ச். 2007, திருச்சிராப்பள்ளி) இதழியல் ஆய்வுக்கோவை (பக்.223 – 227)

No comments:

Post a Comment