“நபிகள் நாயகம் (ஸல்) அன்பின் தாயகம்”
பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
ரஹ்மத் நகர், திருநெல்வேலி – 627 011.
முன்னுரை
வழிகாட்டிகளை விட வாழ்ந்துகாட்டிகள் உன்னத மானவர்கள். உலகம் தோன்றிய நாளிலிருந்து உருவான கோடானுகோடி மனிதர்களிலிருந்து நூறு உன்னதமான மனிதர்களைத் தேர்ந்தெடுத்து “நூறு பேர்“ என்ற நூலைத் தந்த அறிஞர் மைக்கேல் ஹார்ட், உலகின் முதல் உன்னத மாமனிதராக நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களை வைத்துப் போற்றுகிறார். அல்குர் ஆனின் வாழ்வியல் விளக்கமாக, உலகின் அழகிய முன்மாதிரியாக, மக்கத்து மாமலராகத் தோன்றியவர்கள் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் “சுவனம் தாயின் காலடியில் இருக்கிறது“ என்று பெண்மையை உயர்வுபடுத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கணவரை இழந்த கைம்பெண்ணான அன்னை கதிஜா அவர்களை 25 வயதில் மணம்புரிந்து சமுதாயப் புரட்சியாளராகத் திகழ்ந்தார்கள்.
“ஆணும் பெண்ணும் ஆதத்தின் மக்களே“ என்று திருக்குர் ஆன்
(8 : 7 : 31) கூறும் உயரிய செய்தியைத் தம் வாழ்வியல் அறமாகக் கொண்டு வாழ்ந்த நபிகள் பெருமானாரை இறைவனின் அருட்கொடையாகவே உலகம் உணர்ந்தது.
(8 : 7 : 31) கூறும் உயரிய செய்தியைத் தம் வாழ்வியல் அறமாகக் கொண்டு வாழ்ந்த நபிகள் பெருமானாரை இறைவனின் அருட்கொடையாகவே உலகம் உணர்ந்தது.
பெருமானாரைப் பற்றி வல்லஇறைவன் திருமறையில் “இந்த உலகிலுள்ள மனிதர்கள் அனைவருக்கும்“ வழிகாட்டியாகவும், அவர்களுக்கு நற்செய்தி சொல்லக் கூடியவராகவும், அவர்களைப் பாவத்திலிருந்து காப்பதற்காக எச்சரிக்கை கொடுக்கக் கூடியவராகவும் தான் அவரை (முஹம்மது நபியை) அனுப்பியுள்ளோம்.“ (திருக்குர் ஆன் 34:28) என அமைகிறது. உலகத்தின் உயர் வேதமாகத் திகழும் திருக்குர் ஆன் ஜிப்ரயில் எனும் வான தூதுவர் மூலம் ஹிரா மலைக் குகையில் முதன் முதலாக நபிகள் பெருமானாருக்கே அருளப்பட்டது.
“உம்முல் கிதாப்“ நூல்களின் அன்னையாக, ஞான நூல்களின் ஊற்றாகத் திகழும் திருக்குர் ஆன் முதலில் பெருமானார் அவர்களுக்கே அருளப்பட்டது என்ற செய்தியின் பின்னணி, அவரது சிறப்பை உணர்த்துகிறது. அத்தகைய சிறப்புப் பெற்ற நபிகள் பெருமானார் வாழ்க்கையை “நாயகம் எங்கள் தாயகம்“ எனும் வசன கவிதைக் காப்பியமாக வலம்புரி ஜான் படைத்தளித்துள்ளார். இப்புதுக்கவிதை நூலை இக்கட்டுரை ஆய்கிறது.
புதுக்கவிதைகளில் வாழ்க்கை வரலாற்று இலக்கியம்
மேலைநாட்டுக் கவிஞர் வால்ட் விட்மனால் புனையப்பட்டு, மகாகவி பாரதியால் “காட்சி“ எனும் வசன கவிதையாய் தமிழுக்கு வருகை தந்த புதுக்கவிதை புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், சி.சு. செல்லப்பா, வல்லிக்கண்ணன், சி. மணி, ஞானக்கூத்தன், கலாப்ரியா, கல்யாண்ஜி, விக்ரமாதித்தன் போன்ற கவிஞர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது.
புதுக்கவிதை நடையில் வைரமுத்து, மகாகவி பாரதியின் வரலாற்றைக் “கவிராஜன் கதை“ என்ற நூலாகப் படைத்தார். அடுத்தநிலை புதுக்கவிதை நடையில் தமிழில் காப்பியங்கள் பிறந்தன.
“ஆனந்த விகடன்“ இதழில் இராமாயணக் கதையை “அவதார புருஷன்“ இதழில் இராமாயணக் கதைகயைக் கவிஞர் வாலி படைத்ததும், மகாபாரதக் கதையை “பாண்டவர் பூமி“ என்ற தலைப்பில் படைத்ததும், அதற்கு அடுத்து வைரமுத்து, கருவாச்சி காவியம், கள்ளிக்காட்டு இதிகாசம் படைத்ததும் தமிழில் புது முயற்சியாக அமைந்தது.
இம்முயற்சிகளுக்கு முன்னதாக ஞானபாரதி வலம்புரி ஜான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு அல்குர் ஆனையும், அல்ஹதிஸ்களையும் மார்க்கப் பேரறிஞர்களின் உதவியோடு தெளிவாகக் கற்று இந்நூலைப் படைத்துள்ளார். இந்நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள வலம்புரியார்.
“சிட்டுக் குருவி ஒன்று தன் குட்டை அலகால் வான மண்டலத்தையே வரைந்து காட்ட முற்பட்டதுபோல நாயகத்திருமேனியின் நயமான வாழ்க்கையை வசன கவிதையாய் நயமான எழுத முற்பட்டேன். “(பக்கம். 4) எனக் குறிப்பிட்டுள்ளார். தன்னடக்கத்தோடு கவிஞர் எழுதியுள்ளார்.
அரேபியாவில் நடைபெற்ற சம்பவத்தை இப்படைப்பாளர் ஏற்படுத்துகிறார்.
இலக்கியச் சுவை
இறையுணர்வும் மறையுணர்வும் பெற்று மருவிலா முழுமதியாய் வாழ்ந்த கண்மணி நபிகள் பெருமானார் அவர்களின் சிறப்பை வலம்புரியார் இலக்கியச் சுவைமிக்க வரிகளால் உயர்த்துகிறார். பெருமானார் பிறந்த அரேபியப் பாலைவனத்தைக் கவிஞர் இலக்கியச் சுவையோடு வர்ணிக்கிறார்.
“இது அரேபியப் பாலைவனம் சூரியச் சேவல் தனது நெருப்பு வயிற்றை நிரப்புவதற்காக நீர் முத்துக்களைக் கொத்தி எடுப்பது – இங்கே எப்போதும் நடப்பது“ என எழுதுகிறார்.
ஜகமது போற்றும் அண்ணல் முஹம்மது நபிகளார் பிறந்த செய்தியை அழகாக விவரிக்கிறார்.
“வெளிச்சத்திற்கு விலாசம் கிடைத்தது
மதங்கள் விழுந்தன, மார்க்கம் எழுந்தது”
நாநிலம் போற்றும் நபிகள் பிறந்தார்“ (ப.53)
என எழுதிய வலம்புரியார் இலக்கியச்சுவையோடு “தூயவன் கருணை தொடர்கதை ஆனது“ என முதல் இயலை முடிக்கிறார்.
சேர்ந்தாரைக் கொல்லும் சினத்தை நபிகள் பெருமானர் (ஸல்) அவர்கள் அடக்கினார்கள் என்ற செய்தியை இலக்கியச் சுவையோடு வலம்புரியார் முன்வைக்கிறார்.
“முகம்மதுக்கும் எப்போதோ
கோபம் வரும், ஆனால்
சொற்களுக்குப் பற்கள் முளைத்திருக்காது
அவருக்கு இனிப்பே உதடுகளாகிப் போனது
இயல்பே பணிவாய் ஆனது“ (ப.106)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை வலம்புரி ஜான், “இவர் மேற்கில் உதித்த மேன்மைச் சூரியன்“ (ப.117) என உருவகிக்கிறார்.
பெண்மையைப் போற்றிய பெருமானார்
பெண்மையைப் போற்றிய பெருங்கருணை வள்ளலாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள்.
“பெண்கள் ஆண்களுக்கு ஆடையாகவும் ஆண்கள் பெண்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றார்கள்“ (திருக்குர் ஆண். 2:187) என்று வல்ல இறைவனின் நல்லருட் கொடையாம் அறிவுரையைப் பெருமானார் போற்றிப் பரவினார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வல்ல இறைவன் அல்லாஹ்வின் பேரருள் கிடைத்ததை முதலில் அறிந்த பேறு பெற்றவர்கள் கதிஜா பிராட்டியார்தான். அவர்களே முதன் முதலில் பெருமானார் அவர்களின் கைகளைப் பிடித்து கலீமா ஓதி, ஈமான் கொண்டு இஸ்லாமானார்கள். தொழுகை வந்த வரலாற்றுப் படலத்திலே உமறுப் புலவர் இச்செய்தியைப் பதிவு செய்கிறார்கள்.
வலம்புரியார் கதீஜா பிராட்டியாரை இப்படிப் போற்றிப் புகழ்கிறார்
“நாயகத் திருமேனி
காலவெள்ளத்தில்
கரைந்திடாத கல்வெட்டென்றே
கருதிப் போற்றினார்
கதீஜா பிராட்டி“
என்று மதித்துப் போற்றுகிறார். “செயலில் உயிர்பெறாத சொல், குறைந்த பட்சம் வயதுக்கு வராத கிழவி; அதிகபட்சம் புதைக்க இடம் கிடைக்காத பிணம்“ என்று சொன்ன வலம்புரியார், விதவைப் பெண்ணான கதீஜா அம்மையாரை மணம்முடித்த பெருமானாரின் சமுதாயப் புரட்சியைச் செம்மாந்து பாராட்டுகிறார்.
“முகம்மது என்னும் மூதறிவாளர்
விதவைகள் பற்றி
சொற்பொழிவாற்றிச் சிறந்தாரா?
செயலில் காட்டினார்
செம்மாந்து வாழ்ந்தார்“ (ப.151)
“செயல் அதுவே மிகச்சிறந்த சொல்“ எனும் உண்மையைப் பெருமானார் வாழ்வியல் நிகழ்வுகொண்டு வலம்புரியார் விளக்குகிறார்.
நாயகம்அன்பின் தாயகம்
புனித இல்லம் கஃபாவைச் சுற்றிலும் குறைஷிகளால் நடத்தப்பட்ட சிலைவழிபாட்டினை நபிகள் பெருமானார் (ஸல்) அர்த்தமற்ற சடங்காக வெறுத்த செய்தியை வலம்புரியார்
“சடங்குகள் எங்காவது சமயம் ஆகுமா?” என்று கேள்வி கேட்டு, “ஆகும்“ என்று பதில் தந்துவிட்டு எப்போது ஆகும்? என்று இலக்கியச் சுவையோடு வலம்புரியார் கவிதை படைத்துள்ளார்.
“உமி எப்போதாவது
ஆகுமா?
நெல் ஆனால்
உரல் எப்போதாவது
உணவாகுமா?
உணவாய் ஆனால்“
என முடிக்கிறார். புனித இரமலான் மாதத்திலே அண்ணலாருக்கு நபித்துவத்தை அளித்த நிகழ்வை வலம்புரியார்
“ஆகாயம் கிழிந்ததோ அலைகடல் உருண்டதோ பூமிதான் பிளந்ததோ, புவனங்கள் சரிந்ததோ அம்மவோ“ அம்மம்மா பேரொலி பிறந்தது. ஒலி பிறந்த நொடிக்குள்ளே ஒளி வெள்ளம் புகுந்தது. திசைகள் எரிவதுபோல் திகைப்பங்கே சூழ்ந்தது“ “ஓதுவீராக“ என்றது ஒளிப்புயல், சொற்களின் சுயம்வர மண்டபத்தில் பொருள் மயங்கி விழுந்தது. சுயம்வர மண்டபத்தில் பொருள் மயங்கி விழுந்தது. “ஓத நான் அறிய மாட்டேன்.“ உரை பகர்ந்தார் உத்தமர்; அந்த உருவம் அருகில் வந்தது; இறுக அணைத்தது. இப்போது ஓதுவீராக என்றது என்று உணர்ச்சிப் பெருக்கோடு வலம்புரியார் சொல்லோவியமாகத் தந்துள்ளார்.
“வேரினைத் தொடர்ந்து செல்லும்
நீரினைப் போல அண்ணல்
வானவர் ஓதஓத வண்ணமாய் ஓதினார்கள்“
“ஓதுவீராக! சிந்திப்பீராக! ஆராய்வீராக!“ என்று அருமறையாம் திருக்குர் ஆனிலே வல்ல இறைவன் 760க்கும் மேற்பட்ட இடங்களில் கூறுகிறான்.
நபிகள் பெருமானாரின் விண்ணேற்ற நிகழ்வை வலம்புரியார் பாடிப் பரவுகிறார்.
வான மண்டலத்தில்
ஆதம் நபி முதல் ஆபிரகாம் வரையிலும்
சாந்த நபிக்கு சலாம் வைத்தார்கள்
நபிகளும் வாழ்த்தினார்
அல்லாவின் பேரொளிப் பிழம்பினை
அண்ணல் பார்த்தார்.
சொர்க்கமும் நரகமும் கண்களில் பட்டன. வேதநாயகனை விளங்கும் மெய்ப்பொருளை, ஆதிமுதலை ஆனந்த வாரிதியை
“மனம் மொழி மெய் கடந்த மாயப்பெருவெளியை
உரோமக் கால்கள் ஒவ்வொன்றிலும் ஊற்றிக்கொண்டார்“ (ப.299)
அருமையாக அக்காட்சியை இக் காப்பியத்தில் வர்ணித்துள்ளார்.
“அடியவர் ஒருவர்
அரசராய் ஆனார்
அரசராய் இருந்தும்
ஆண்டியாய் தொடர்ந்தது
அற்புதம்தானே“
என்று கேட்ட வலம்புரியார், “உலகத்தின் அதிசயங்கள் ஏழென்றார், மனிதனை அதில் சேர்க்க மறந்தார், உலகத்தின் முதல் அதிசயம் நபிகள்நாதர்தாம்“ எனக் கடைசி இயலில் எழுதுகிறார்.
“தத்துவம் சொன்னவர்
ததும்பி வழிவர்
மருந்துகள் சொன்ன
மாநபி இவரே“
என்று வலம்புரியார் “நாயகம் எங்கள் தாயகம்“ காப்பியத்தை முடிக்கிறார்.
முடிவுரை
தன்னைப் படைத்த இறைவனின் உயர் வேதத்தை மக்கள் மயமாக்கத் தன்னையே தந்து தரணியில் புகழ்பெற்ற நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள், அகிலத்தின் அழகிய முன் மாதிரியாகத் திகழ்கிறார்கள். இருள் சேர் உலகில் பெருமானார் அவர்கள் கலங்கரை விளக்கமாக வாழ்வியல் விளக்கமாகத் திகழ்கிறார்கள். அத்தகைமை சார்ந்த உத்தம மாநபியின் உயிர் வரலாற்றை உணர்ச்சிப் பெருக்கோடு புதுக்கவிதைக் காப்பியமாகத் தருகிறார் வலம்புரியார்.
“நபிகள் நாயகம் அன்பின் தாயகம்
உயர் பண்பின் தாயகம்“
பயன்பட்ட நூல்கள்
1. தர்ஜா அல்குர்ஆனில் கரீம் – பஷாரத் பப்ளிஷர்ஸ்
2. நாயகம் எங்கள் தாயகம்
3. அண்ணல் நபிகளாரின் அருமை மொழிகள்
காயல்பட்டினத்தில் 08.07.2011, 09.07.2011, 10.07.2011 ஆகிய நாட்களில் நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறைத்தலைவர் கலாநிதி மனோகரன் அவர்கள் தலைமையில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை.
Subscribe to:
Posts (Atom)
No comments:
Post a Comment