கலித் தொகையில் உளவியல் கூறுகள்
பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
ரஹ்மத் நகர், திருநெல்வேலி – 627 011.
நற்றிணை நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல், கற்ற்றிந்தார் ஏத்தும் கலி, அகம் புறமென்ற இத்திறதத எட்டுத் தொகை நூல்களைக் கொண்ட தங்கத் தமிழ், நம் உயரிய சங்கத்தமிழ் பழம் பெருமை, காதல், மணம், பண்பாடு, ஒழுக்கம் யாவற்றையும் பாட்டாலே தொகுத்தளித்தது, பிறநாட்டாரும் போற்றும் வகையில் சங்கப் புலவர்கள் சாதித்தனர்.
கற்றறிந்தார் களிப்புடன் போற்றும் கலித்தொகை, உளப்பதிவை உவப்புடன் படைத்தளிக்கிறது. கடவுள்வாழ்த்து உட்பட நூற்று ஐம்பது பாடல்களைக் கொண்டு குறிஞ்சி, முல்லை. மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களில் வசிக்கும் மாந்தரின் மனவோட்டத்தை அழகியல் நோக்கோடு அற்புதமாகத் தருகிறது கலித்தொகை.
சொல்லழகு, பொருள் நயம், கருத்துச் செறிவு, ஓசைநயம், உவமை நயத்தோடு கலித்தொகை தமிழரின் வாழ்வியல் வளத்தை எடுத்துரைக்கின்றது. பாலைக்கலியைப் பெருங்கடுங்கோவும், குறிஞ்சிக் கலியைக்கபிலரும், மருதக் கலியை மருதன் இளநாகானரும், முல்லைக் கலியைச் சோழன் நல்லுருத்திரனாரும், நெய்தற் கலியை நல்லந்துவனாரும் பாடினார்.
பாலைக்கலியில் “எறித்தரு கதிர்தாங்கி“ எனும் பாடல், உளவியல் சித்திரமாக நம் உள்ளத்தில் உரைக்கிறது. அழகிய இளம் பெண் தன் தலைவனோடு கொண்ட காதல் உணர்வால், பெற்றோரை விட்டுவிட்டு உளம் புகுந்த உற்றானோடு ஊர் நீங்குகிறாள். பெற்ற உள்ளம் நெருப்பிலிட்ட வெண்ணெய்க் கட்டியாய் உருகி வழிகிறது. தனிமகளைத் தேடித் தாய் நடக்கிறாள்.
குழப்பத்தில் நம் மனம் உள்ளபோது, சாதாரண கோணம் கூட நம் அறிவுக்கு எட்டாமல் போய்விடுகிறது. அறிவும் உணர்வும் தராசுத் தட்டுகளைப்போல மேலும் கீழும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. நம் துன்பங்களை மூடிமறைத்து, நம் மனத்திற்குள்ளே புதைக்கும் போது அதுமனச்சிதைவு நோயாக மாறுகிறது. மற்றவரிடம் சொல்லி, ஆறுதல் தேடும்போது, அவர்கள் உணர்வு நிலைக்கு ஆட்படாமல், மூன்றாவது கோணத்தில் அதே பிரச்சனையைப் பார்க்கிறார்கள். சரியான முடிவையும் தருகிறார்கள்.
“மகளைக் காணாமால் தவித்துத்திரியும் பெண்ணே! உன்னால் பிறந்தால் உன் மகள் உனக்கு மட்டுமே உரியவள் அல்லள். மலையிலே பிறந்ததால் யாரேனும் சந்தனத்தை அரைத்து மலைமீது பூசுவார்களா?
அழகான வெண்முத்து கடலிலே பிறந்தாலும், முத்து மாலையாக்க் கோர்த்து யாரேனும் கடலுக்கு அணிவிப்பார்களா?
இன்னிசை யாழிலே பிறந்தாலும், யாழுக்கு என்ன பயன்? நினைத்துப் பாரத்த்தால் உன் மகளுக்கும் உனக்குமான உறவும் இப்படிப் பட்டதே“
என்ற உவமையின் மூலம் தாயின் உள்ளத்தைப் புலவர் ஆறுதல் படுத்த முயல்கிறார். இறுதியாகப் பெருங்கடுங்கோ “தாயே! கற்பு நெறியை மேற்கொண்ட காதலனோடு காட்டு வழியில் போய்விட்ட உன் மகள் குறித்து வருந்தாதே, அவள் தலைசிறந்த ஒருவனைத் தன் கணவனாக ஏற்றச் சென்றுள்ளாள்? அது மட்டுமன்று, அவள்வினவுகிறாள். மனச்சோர்வு எனும் Depression அவளை ஆட்டிப் படைக்கிறது. State Anxiety எனும் பதட்டம், PHOBIA எனும் மிகை அச்சமாய் மாறப்போகும் நிலையில், அவளை ஆற்றுப்படுத்த பாலை பாடிய பெருங்கடுங்கோ, வழிப்போக்கர்களாக அந்தணர்களை அனுப்பி, அவள் மனதை ஆற்றுப்படுத்துகிறார்.
“பலவுறு நறும்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என் செய்யும்?
நினையுங்களால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே,
சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என்செய்யும்?
தேருங்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே,
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என் செய்யும்?
“சூழுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
என வாங்கு,
இறந்த கற்பினாட்டு எவ்வம் படரன்மின்,
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்,
அறந்தலை பிரியா ஆறும் மற்றதுவே“
எனத் துடித்தவள், தன் தோழியை அழைத்து “அவனுக்கு எக்கேடும் ஏற்படாமல் இருக்க, கடவுளை வேண்டலாமா?“ என்று கேட்கிறாள்.
“பாடு இன்றிப் பசந்தகண், பைதல பணிமல்க
வாடுபு வனப்பு ஓடி, வணங்கு இறை வளை ஊர,
ஆடு எழில் அழிவு அஞ்சாது அகன்றவர் திறத்து இனி
நாடுங்கால், நினைப்பது ஒன்று உடையேன்மன்“
என்ற பாடல் மனச்சோர்வுக்குக் காரணமான பிரிவுத் துயரினை அழகாக விள்க்குகிறது.
கலித்தொகை, தலைவன் தலைவியின் காதல் உணர்வினை உளவியல் நோக்கில் படம் பிடித்துக் காட்டுகிறது. இரு மனம் இணைந்து திருமணம் ஒழுக்கத்தில் ஈடுபடும் வரை ஏற்படும், தவிப்பு, அச்சம், பதட்டம், பிரிவுத்துயர், ஆகியவற்றை நுண்ணிய உணர்வுப் பதிவாகத் தருகிறது. “வருவேன்“ எனக் கூறிச் சென்ற தலைவன், வராகத காரணத்தால் ஏற்பட்ட உணர்வுக் கொந்தளிப்பைக் கலித்தொகை சிறந்த உவமைகளால் விளக்குகிறது.
தேன் உண்ட பூ, தனித்துக்கிடக்க அதை விட்டு, வேறு புதுப் பூக்களைத் தேடிச் சென்ற அழகிய நீலமணி பொன்ற நிறம் பெற்ற தும்பியைக் கொண்டு தலைவனின் மனவுணர்வினை விளக்கும் பாடல்
“வீயகம் புலம்ப, வேட்டம் போகிய
மாஅல் அம்சிறை மணிநிறத்தும்பி“
என்று கலித்தொகை விளக்குகிறது. நூலில் தொங்கும் ஊசலாய், தவிப்பில் தொங்கும் தனி ஊசலானது அந்தத்தாயின் மனம். உளவியல் அவளது உணர்வினைப் பகுப்பாய்வு செய்யத் துணைக்கு வருகிறது. பாலூட்டிச் சீராட்டி வளர்த்த மகள், தூக்கி எறிந்து அப்பால் போனதை அவளால் தாங்க முடியவில்லை. “உள்ளமுறிவு எவ்வகைத் தீர்வும் இன்றித் தொடருமானால் உள்ள இறுக்கம் அதாவது Stress தோன்றும். உள்ள முறிவின் காரணமாக, எதிர்மறையான Emotion எனும் உள்ளக் கிளர்ச்சிகள் தோன்றுகின்றன. அப்போது சினம், அச்சம், கவலை எனும் மூன்று நிலைகளை மனம் சென்றடைகிறது“ என்று உளவியல் அறிஞர்கள் குறித்ததற்கேற்ப, “தன் மகள் இப்படிச் செய்து விட்டாளே“ என்ற சினம் அத் தாய்க்கு வருகிறது.
உடன் எதார்த்த நிலைக்கு அத் தாய் வருகிறாள். “கைப்பிடித்த மணவாளன் நல்லவனா? கவவுக்கை நெகிழாமல் காப்பானா? என்ற அச்சம் அந்தக் கலித்தொகைத் தாய்க்கு வருகிறது. கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வழிகிறது. “உலகில் நடக்காததா நம் வீட்டில் நடந்து விட்டது!. போனது போகட்டும். அவளைக் காணமுடியுமா? எந்த ஊரில் வாழ்கிறாள் எனத் தெரியவில்லையே என்ற கவலை அத்தாயை ஆட்டிப் படைக்கிறது. “எத்தைத் தின்றால் பித்தைத் தெளியுமென்று“ வழியில் கண்டோரிடமெல்லாம் தன் மகள் குறித்து கூறஅவள் செயல், உலகியல் அறத்தோடு ஓட்டியதும் ஆகும்“ என்று ஆறுதல் கூறுகிறார்.
கலித்தொகைப் பாடல்களில் ஊடாடிக் கிடக்கும் உணர்வு “பிரிவு“ என்பதாகும். அதை உளவியல் விளக்குகிறது. பொருள்தேடப் பிரிவு, ஊர் நீங்கும் பிரிவு, உலகத்தை விட்டே பிரிவு எனப் பிரிவு ஒவ்வொரு நிலையிலும் மனிதர்களைத் தொடர்கிறது. பிரிவுத்துயர் எல்லை கடக்கும் போது, அது மனத்தின் சமநிலையையே பாதிக்கிறது.
“செல்லேன் என்றேல் எனக்குரை, மற்றுநின்
வல்வரவு வாழ்வாற்க்குரை“
என்று இன்பத்துப்பாலில் திருவள்ளுவர், பிரிவை விளக்க முயல்கிறார்.
களவு வாழ்வு வாழ்ந்த போது, “உன்னை என்றும் பிரியேன்“ என உரைத்தவன், கற்பு வாழ்க்கையில் பொருளீட்டப் பிரிவை மேற்கொள்கிறான். பிரிவு அவளை வாட்டுகிறது. பொருளீட்டி சென்றவன், தன் வாழ்வைப் பொருளில்லாது ஆக்கினானோ“ என்று வருந்துகிறார்.
வாக்குறுதி பொய்க்கும் போது, வழிக்கொடுமைகள் அவனை வருத்திக் கெடுக்குமா? வாக்கு தவறிய அவனது போக்கு கண்டு இயற்கை தண்டிக்குமா? மனித மனம் விந்தையானது, மனித மனம் அற்புதங்களின் நிலைக்களனாய் அமைவது, சிக்மண்ட் பிராய்டு, யூங், போன்ற உளவியல் அறிஞர்கள் உளவியலுக்கான ஆய்வுகளை மேற்கொண்டனர். டேகார்ட், வில்லியம் மேதைகள் உளவியல் அறிஞர்களாகவும் திகழ்ந்து உளப்பொருத்தப்பாட்டினை, உளச்சிக்கல்களைப் படம் பிடித்துக் காட்டினர். சங்க இலக்கியப் புலவர்கள் உளவியல் நோக்குடையவர்களாகவே திகழ்ந்தனர்.
“உடையும் என் உள்ளம்“
“இணர் இறுபு உடையும் நெஞ்சம்“
“உடுவது போலும் என் நெஞ்சம்“
ஆகிய தொடர்களால் உள்ள முறிவினைச் சங்க இலக்கியம் சுட்டுகிறது.
கலித்தொகை உணர்வுப் பிழம்பான இலக்கியமாகத் திகழ்வதால், ஒவ்வொரு பாடலையும் பிராய்டிசத்தோடு, யூங்கின் கருத்தாக்கத்தோடு பகுப்பாய்வு செய்து பார்க்க முடிகிறது
சிக்மண்ட் பிராய்டு, ஒரு தனியனை, மையம் அற்றவனாகத் தன்னுணர்வு, ஆதார இச்சை, (Ego, Id, Super Ego) என்ற மும்மைப் பண்போடு கட்டமைத்துள்ளார். கலித்தொகைத் தலைவனும் இப்பண்புகளோடு திகழ்கிறான். மோகம் என்பது அவனது அடையாளமாகத் திகழ்கிறது. அத்தலைவன் தலைவியின் மீது கொண்ட காதல், அடையாளம் சார்ந்ததாகவே திகழ்கிறது. அவனது தன்னுணர்வின் மிகுதியாக அமையும் கற்புவாழ்க்கையைக் கலித்தொகை அழகாக விளக்குகிறது.
உளவியல் என்னும் விளக்கின் துணையோடு இலக்கியத்தைக் குறிப்பாகக் கலித்தொகையை, உட்புகுந்து ஆராய்ந்தால் இன்னும் அதிகமான செய்திகள் புலப்படும்.
இலக்கியம் என்பது உள்ளத்து உணர்வின் எழுத்துப் பதிவு.
உளவியல் என்பது உள்ளத்து உணர்வின் நுண்ணிய பதிவு.
இரண்டும் சேரும் போது, வாசகனுக்குப் புதிய உண்மைகள் புலப்படுகின்றன.
தூத்துக்குடி, அகில இந்திய வானொலியில் 16.02.2009 அன்று ஆற்றிய உரைப்பதிவு
No comments:
Post a Comment