புலரும் புதுயுகத் தமிழ்
பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
ரஹ்மத் நகர், திருநெல்வேலி – 627 011.
ஆய்வின்முன்னுரை
“தகுதி உள்ளதே தப்பிப் பிழைக்கும்“ என்ற டார்வீனின் விலங்கியல்
கோட்பாட்டின்படி, மனிதன் தப்பிப் பிழைப்பதன் காரணம், காலத்துக்கேற்பத்
தன்னை மாற்றி நவீனமயமாக்கித் தற்காத்துக் கொண்டதுதான். பன்னீராயிரம் ஆண்டு
இலக்கிய, இலக்கண வரலாறு பெற்றது தமிழ். “உலக
நாடுகளின் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ, கிரேக்கம்,
எபிரேயம், இலத்தீன், சீனம், அரபு ஆகிய மொழிகளோடு தமிழையும் செவ்வியல்
மொழியாக ஏற்று அதன் தொன்மை, வரி வடிவம் ஆகியவற்றை ஆராய முற்பட்டது”
என அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா குறிப்பிடுகிறார். தொன்மையும்
உண்மையும் மென்மையும் கொண்ட தமிழ் கணினி யுகத்தில் புதுயுகத் தமிழாக
உருப்பெற்று வரும் இக்காலத்தில் தமிழ், கற்பித்தல், கற்றல் குறித்த
கருத்துக்களை இக்கட்டுரை முன் வைக்கிறது.
நவீனப் பார்வை
தேமதுரத் தமிழோசை இணையமெலாம் ஒலித்திடும், புது யுகத்தில் தமிழ்
கற்பித்தலும் கற்றலும் உருமாறுவது தவிர்க்க முடியாது. தொலைக்காட்சிப்
பெட்டி இன்று எவ்வாறு மனித சமுதாயத்தை ஆட்டிப் படைக்கிறதோ அதேபோல் இணைய
ஊடகமும் ஆட்டிப் படைக்கத் தொடங்கி உள்ளது. தட்டச்சுப் பலகை மூலம் தேடு
பொறிகளுக்குக் கட்டளை இட்டால் விரல் நுனியில் மலைபோல் தரவுகளைத் தொகுத்து
அளிக்கும் நிலையில், வகுப்பறை வாசித்தல்களும், அருஞ்சொற்பொருள்
விளக்கங்களும், பொழிப்புரை, பதவுரை கூறுதலும் நாளை பொருளற்றுப்
போகக்கூடும். அப்போது வரும் மாணாக்கர் கூட்டம் மிதமிஞ்சிய அறிவுக்
களஞ்சியமாகத் திகழக் கூடும். ஓர் ஆசிரியர் உலகின் ஒரு கோடி இணைய
மாணவர்களுக்கு ஒரே சமயத்தில் வகுப்பெடுக்கக் கூடும்.
தமிழியல் நாளை.....?
1.
“தமிழ் மொழியாம் தாய்மொழியைக் கற்காமலேயே தமிழ்நாட்டில் எல்.கே.ஜி. முதல்
எம்.பி.பி.எஸ் வரை பயின்று விடலாம்“ என்ற கொடுமையான நிலை மாற வேண்டும்.
தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி, தொழிற்கல்வி, மருத்துவக் கல்வி என்று
எந்தக் கல்வியாக இருந்தாலும் தமிழ் பயில்வது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
ஒரே தமிழாக இல்லாமல், அந்தந்தத் துறைகளுக்கேற்ற பயன்படு தமிழாக அக்கல்வி
வடிவமைக்கப்பட வேண்டும்.
2.
கல்லூரிகளில் பகுதி – 1 என்று தமிழ் இருந்தாலும், அந்த மதிப்பெண்கள்
பட்டம் வழங்கும் போது தர மதிப்பீடுகளுக்கு ஏற்கப்படாததால், மாணவர்களுக்கு
அது பொழுதுபோக்கும் வேடிக்கை வகுப்பாகவே தற்சமயம் அமைகிறது. இந்நிலை
எதிர்காலத்தில் மாற்றியமைக்கப்பட்டு, அந்த மதிப்பெண்களும் தர
மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட வெண்டும்.
3.
படித்தலையும் தேர்வு எழுதுதலையும் மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொள்ளாமல்,
மாணவர்களைப் படைப்பாளிகளாக்கும் வகையில் நவீன முறையில் தமிழ்ப்பாடத்
திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
4.
வகுப்பறை சார்ந்துமட்டும் அமையாமல் பண்பாடு, மக்கள் வாழ்வியல் சார்ந்த கள
ஆய்வுகள், பங்கேற்றல் அனுபவங்களைத் தரும் வகையில் பாடங்கள் அமைதல்
வேண்டும்.
5.
பி.ஏ.(தமிழ்), எம்.ஏ (தமிழ்) போன்ற இலக்கியம் சார்ந்த பாடங்களோடு இணையப்
பயன்பாட்டுத்தமிழ், மக்கள் தொடர்பு ஊடகத் தமிழ், கலைச்சொல்
உருவாக்கத்தமிழ், இதழியல்மொழிசார்ந்த தமிழ் போன்றவற்றைத் தற்போதுள்ள
நிலையைவிட இன்னும் மேம்பட்ட நிலையில் அளித்தால் தமிழ் கற்போர் ஆர்வம்
மேம்படும்.
6.
சங்க இலக்கியங்களைப் பொருள் சொல்லி விளக்குவதோடன்றி, நவீனத் துறைகளான
அழகியல், அமைப்பியல், உளவியல், சமூகவியல் போன்றவற்றின் அடித்தளத்தோடு
நவீனக் கோட்பாட்டு முறையில் இன்னும் சிறப்பாக நடத்தலாம்.
7.
பல்கலைக்கழகங்களில் உரைநடைக்கான, கவிதைகளுக்கான, சிறுகதைகளுக்கான,
புதினங்களுக்கான, கடிதஇலக்கியங்களுக்கான தனித்தனித் துறைகள்
ஏற்படுத்தப்பட்டு நவீனக் கோட்பாட்டு ஆய்வுகள் பயன் மிகுந்த முறையில்
நிகழ்த்தப்பட வேண்டும்.
8.
இளநிலை படிக்கும் மாணவ மாணவியரைக் கள ஆய்வில் ஈடுபடவைத்து, அந்தந்த
வட்டாரம் சார்ந்த வட்டார வழக்குச் சொல் அகராதிகளைத் தொகுத்து இணையத்தில்
அவற்றை சேமிக்க வகை செய்ய வேண்டும். பிங்கல நிகண்டு, திவாகர நிகண்டு என்று
நாம் அறிந்தவற்றின் அடிப்படையில் சொற்கள் வகை தொகை செய்யப்பட வேண்டும்.
9.
அயற்புலம் சார் தமிழர்களை முன்நிறுத்திப் பல்கலைக்கழகங்களில் புலம்பெயர்
தமிழ்ப் படைப்பாளர்களின் படைப்பிலக்கியங்களுக்காகத் தனித்துறைகளை அமைக்கப்
பெற்று, அவர்களின் நேரடி அனுபவங்களைப் பெற்று அவ்விலக்கியங்கள் ஆய்வு
செய்யப்பட வேண்டும்.
தமிழ் இணையத் துறை
ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் இணையத் தமிழுக்கென ஒரு தனித்துறை
உருவாக்கப்பட வேண்டும். எல்லாக் கல்லூரி மாணவர்களுக்கும் கணினிப் பயிற்சி
அளிப்பதோடு, ஒவ்வொரு மாணவனுக்கும் குறிப்பிட்ட பக்கவரையறை தந்து e-format எனும்
மின்னணு வடிவத்தில் தமிழ்ப் படைப்பிலக்கியங்கள் அனைத்தையும் இணையத்தில்
சென்று சேர்க்க ஆவன செய்ய வேண்டும். சில இணைய அன்பர்கள் இத்தொண்டினை
எவ்விதப் பலனும் பாராமல் தற்போது செய்து வருகிறார்கள். சங்க இலக்கியமும்,
நீதி நூல்களும், பக்தி இலக்கியங்களும், சிற்றிலக்கியங்களும், நவீன
படைப்பிலக்கியங்களும் இணையப்பக்கங்களில் சேமிக்கப்படும்போது கற்பித்தல்
எளிமையாகிறது.
ஒலி சார்ந்து கற்பித்தல்
தமிழ் இலக்கியத்தைக் கற்றுத்தருவது இன்றைய சூழ்நிலையில் எழுத்துக்களைச்
சார்ந்தும், சொற்களைச் சார்ந்தும் அமைகிறது. தமிழ் இலக்கியங்களை
ஒலிசார்ந்து கற்றுத் தருவதற்காக ஒவ்வொரு கல்லூரியிலும் “மொழி ஆய்வகம்“
ஏற்படுத்தப்பட்டுத் தமிழின் நுட்பமான தனித்துவம் எதிர்காலத்திலும்
நிறுவப்பட வேண்டும். லகர, ளகர, ழகர வேறுபாடுகள் சார்ந்த இனிமை போன்றவற்றை
மொழிஆய்வகம் மூலம் எதிர்காலத்தில் மிக நுட்பமாகக் கற்றுத்தரலாம்.
சுவடிகள் பாதுகாப்பு
பள்ளி, கல்லூரித் தமிழாசிரியர்கள் தங்களிடம் பயிலும் மாணவ மாணவியரைக்
கொண்டு அவரவர்ப் பகுதியில் கிடைக்கும் அரிய ஓலை சுவடிகளைத் தேடி எடுத்துப்
பாடம் செய்து பல்கலைக்கழகங்கள் மூலம் பதிப்பிக்க வேண்டும். உ.வே.சா.
செய்த உன்னதமான பணியை இன்று தமிழ்ப்பேராசிரியர்கள் செய்வது காலத்தின்
கட்டாயம். அச்சுவடிகள் கணினி மூலம் ஸ்கேன் செய்யப்பட்டுக் குறுந்தகட்டில்
பத்திரப்படுத்தப்பட்டால் நாளைய தலைமுறை அவற்றை ஆராய முடியும். மேதகு
முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்கள்
ஓராண்டுக்கு முன் ஆற்றிய உரையில், “உலகின் உன்னதமான திருக்குறள் மூலச்
சுவடிகளை நாம் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. உடனடியாக அதைக் கண்டறிவது
அவசியம்“ எனக் குறிப்பிட்டார். கண்டுபிடிக்கப்படாத சுவடிகளில் தமிழின்
நாட்டார் பாடல்கள், சிற்றிலக்கியங்கள், சங்க இலக்கியச் செய்யுள்கள் இன்னும்
பல தமிழகத்தின் கிராம, நகரப் பகுதிகளில் இருட்டறைகளில் மறைந்து
கிடக்கின்றன. அவற்றை எடுத்துப் பத்திரப்படுத்தி எதிர்கால ஊடகங்கள் மூலம்
அடுத்த தலைமுறைக்குத் தர வேண்டும்.
கல்வெட்டுப் பதிவுகள்
தமிழ், எழுத்துகளோடு மட்டும் தொடர்புடைய மொழியன்று. பண்பாட்டோடு
தொடர்புடைய மொழி. உலகின் முதல் மனிதன் தோன்றியதாகக் கருதப்படும்
லெமூரியாக் கண்டத்தை ஆழ்கடல் ஆய்வுக்கு உட்படுத்தும் முயற்சி
வரும்காலத்தில் முக்கியமானதாகக் கருத வேண்டும். திருநெல்வேலிக்கு அருகில்
உள்ள ஸ்ரீ வைகுண்டம் பகுதி சார்ந்த ஆதிச்ச நல்லூரில் முதுமக்கள்தாழிகள்
கிடைத்துப் பல திருப்பங்களை உண்டாக்கியது. எதிர்காலங்களில் தமிழ்
மாணவர்களுக்குத் தொல்லியல், மானுடவியல் அணுகுமுறைகள் வெவ்வேறு முறைகளில்
கற்றுத் தரப்பட்டுத் தொல்லியல் சான்றுகளை ஆராயும் தன்மையைத் தர வேண்டும்.
கல்வெட்டு எழுத்துகளைக் கணினி மூலம் பட முறையால் விளக்கி அப்படிப்பைத்
தமிழ் மாணவர்களுக்குக் கட்டாயமாக்க வேண்டும். மாதம் ஒரு முறை மாணவர்களைக்
கல்வெட்டு தொடர்பான கள ஆய்வுகளுக்கு அனுப்புவதன் மூலம் அரிய கல்வெட்டுகளை
நம்மால் அறிந்து பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குத் தர முடியும்.
ஆய்வு முடிவுரை
மொழி நவீனமாகும் போது, பண்பாடு எழுச்சி அடைகிறது. தமிழ் என்றால் இனிமை
என்பதோடு, இனி அனைத்தும் உள்ளடக்கிய நவீனப் புதுமை என்ற பொருள்
புனையப்படட்டும். கல்தோன்றி மண் தோன்றிய கதையைச் சொல்லி மட்டுமே
எதிர்காலத்தில் காலம் தள்ளவிட முடியாது. காகிதமில்லாப் புத்தகங்களிலும்,
தமிழ் நவீன மின்னணு அங்கியோடு இணைய ஆட்சி செய்யும். அன்று கணினி முன்
எல்லாரும் கம்பராமாயணத்தைப் படக் காட்சிகளோடு ஒலி, வரி வடிவில் கற்பார்கள்.
அன்று வீடுகளே வகுப்பறையாகும். காஞ்சி நகர்ப் புலவன் பேசும் உரைதனைக்
கனடாத் தமிழன் நேரடி இணைப்பில் நிறைவாகப் படிப்பான். கற்போரெல்லாம் கவிதை
எழுதுவர்: மாணாக்கர் மனிதம் பேணுவர். கலாநிதி கைலாசபதி போன்று, ரசிகமணி
போன்று, வண்ணதாசன், கலாப்பிரியா போன்று, விக்ரமாதித்யன் போன்று, நா.
வானமாமலை, வையாபுரிப் பிள்ளை போன்று புதிய நோக்கிலும் போக்கிலும் தமிழ்
மாணவன் வீறு கொண்டு எழுவான்.
எதிர்காலத்தில் தமிழ்த் துறையின் துணையாக ஆயிரமாயிரம் புதிய துறைகள்
புலரும். இலக்கணக் குறிப்பு கற்பது மட்டுமே தமிழ்க்கல்வி என்ற நிலை மாறி,
இணையப் பூங்குன்றனார்கள் “யாதும் ஊரே யாவரும் கேளிர்“ என்று புதிய பூபாளம்
இசைப்பர். அன்று உலகத் தமிழரெல்லாம் நவயுகத்தமிழைத் தமிழ் விடு தூது
விட்டுப் போற்றி மகிழ்வர்.
“ஓங்கலிடை வந்(து) உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலி நீர் ஞாலத்(து) இருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது
தன்னேர் இலாத தமிழ்“
தமிழால்
இன்றும், என்றும் நவீனமாக நவயுகம் படைக்க முடியும். எதிர்காலத்தில் உலக
மொழிகளெல்லாம் தமிழின் தனிச்சிறப்பை மொழிபெயர்த்துத்தரும்.
சென்னைப் பல்கலைக்கழகம் நடத்திய “தமிழியலின் எதிர்காலவியல்“ பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்
புலரும் புதுயுகத் தமிழ்
ReplyDelete-- siranthothuru sindhanai,
Themathura Tamizhosai, Theruvellam Tamil Muzhakkam Chelikka Seiveer.
Vazhthukkal..!