சங்காலப் பெண்பாற் புலவர்களின் உயரிய ஆளுமைகள்
பேராசிரியர் முனைவர். ச. மகாதேவன்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி)
திருநெல்வேலி.
கைப்பேசி : 09952140275
Email : nellaimaha74@gmail.com www.mahatamil.com
முன்னுரை
சங்க இலக்கியம் தமிழரின் பண்பாட்டுப் பெட்டகமாகத் திகழ்கிறது. ஈராயிரம்
ஆண்டுகளுக்கு முன்னரே கல்விகற்று உள்ளத்து உணர்வுகளைக் கவிதைகளாகப்
படைத்தளித்த முப்பதிற்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்களால் அழகு செய்யப்பட்ட
உயரிய இலக்கியமாகச் சங்க இலக்கியம் திகழ்கிறது. அதற்குப் பின் வந்த
இலக்கியங்களில் அதிகம் இடம் பெறாத பெண்களின் தன்னுணர்வுக் கவிதைகளையும்,
தனித்துவம் மிக்கப் பெண்மொழிகளையும், எவ்வித ஒளிவு மறைவுமின்றி தன்னை
இயல்பாக வெளிப்படுத்துதலையும் கொண்டதாக அமைகிறது. சுதந்திரமான பெண்ணிய
வரலாற்றின் தொடக்கமாகவும் அமைகிறது. மொழியைக் கூரிய ஆயுதமாகப் பயன்படுத்தி
ஆணின் அடக்குமுறைகளுக்கு எதிரான கலகக்குரலை வன்மையாகவே, பதிவு செய்த
இலக்கியமாகச் சங்க இலக்கியம் திகழ்கிறது.
“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகின்” உயரிய
ஆளுமை உடைய பெண்பாற் புலவர்களின் கருத்தியல், புதிய போக்கிற்கு நம்மை
இட்டுச் செல்கிறது. சமையலறைகளையும் கட்டிலறைகளையும் தாண்டி,
பெண்மைக்கென்று பரந்துபட்ட வெளி இருந்ததையும் அதில் அப்பெண்கள்
வெகுசுதந்திரமாக உலவியதையும், காதலுடன் ஊடியதையும் காதலனுடன்
சண்டையிட்டதையும், உலகியல் நிகழ்வுகளை அறிந்ததையும், போர்ச் செய்திகளை
உற்று நோக்கியதையும் சங்க இலக்கியப் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.
சங்க காலப் பெண்பாற் புலவர்கள்
அறம், மறம், காதல், இன்பம், இயற்கை, இவற்றோடு இணைந்து வாழ்ந்த சங்காலப்
பெண்டிர், கல்வியறிவும் பெற்றிருந்ததால் படைப்பாளிகளாகத் திகழ்ந்து
பெண்டிர் வாழ்க்கையைப் பதிவு செய்தனர். அகப்பாடல்களின் ஆணிவேர்களாகப்
பெண்கள் திகழ்ந்தனர். தலைவி, தோழி, விறலி, நற்றாய், செவிலித்தாய் என்று
பெண்மையின் மீதே அகப்பாடல்கள் கட்டமைக்கப்பட்டன.
சங்கப்
பெண் கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்துள்ள எழுத்தாளர் ந. முருகேச
பாண்டியன், அவர்களின் எண்ணிக்கை குறித்த முரண்களை அவரது நூலில் பதிவு
செய்துள்ளார். “இன்று நமக்குக் கிடைத்துள்ள சங்கப்பாடல்களைப் பாடிய
கவிஞர்களின் எண்ணிக்கை 473 ஆகும். சில பாடல்களைப் பாடிய கவிஞர்களின்
பெயரினை அறிய இயலவில்லை. இத்தகைய கவிஞர்களில், பெண்களின் எண்ணிக்கை 41.
பெண் கவிஞர்களின் எண்ணிக்கை குறித்துத் தமிழறிஞர்களிடையே கருத்து வேறுபாடு
உள்ளன. பெண் கவிஞர்களின் எண்ணிக்கையினை உ.வே.சா. 38 எனவும், எஸ்.
வையாபுரிப்பிள்ளை 30 எனவும், ஔவை துரைசாமி பிள்ளை 34 எனவும், புலவர் கா.
கோவிந்தன் 27 எனவும், ஔவை நடராசன் 41 எனவும், ந. சஞ்சீவி, 25 எனவும்
முனைவர் தாயம்மாள் அறவாணன் 45 எனவும் குறிப்பிடுகின்றனர்“1 என்கிறார்.
பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடுகளிருந்தாலும்
முப்பதிற்கும் மேற்பட்ட புலவர்கள், தனித்துவம்மிக்க பெண்மொழியில் கவிதைகள்
படைத்தனர் என்பது புலனாகிறது.
தனித்துவம் மிக்க பெண்மொழி
“முதலில்
காதலைச் சொல்பவளாகப் பெண் இருக்கக்கூடாது. மனத்தின் உணர்வுகளைப் பெண்கள்
வெளிப்படையாக ஆண்களிடம் காட்டக் கூடாது. தம் உடலையும் மனத்தையும்
உயிரையும் ஆணுக்காகவே அர்ப்பணிக்க வேண்டும். தனித்துவம் மிக்க உரிமைக்குரலை
எழுப்பக்கூடாது”
போன்ற பெண்கள் மீது திணிக்கப்பட்ட கற்பிதங்களை ஈராயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே பெண்பாற் புலவர்கள் தம் கவிதைகள் மூலம் உடைத்தெறிந்தனர்.
தமக்கென சுதந்திரமான பரப்பினை, வெளியினை உருவாக்கி, தனித்துவமிக்க பெண்
மொழியால் பிரிவுத்துயரினை, இளமை பயனற்று அழிவதை, மசக்கையின் விளைவினை,
விரகதாபத்தை, உணவு சமைக்கும்போது ஏற்பட்ட தாளிப்பு மணத்தை, கைம்மைத்
துன்பத்தை, மணல்வீடு கட்டிச் சிறுசோறு சமைத்து விளையாடியதைப் பெண்மொழியால்
பெண்பாற்புலவர்கள் அழகாகக் கவிதையாக வடித்தளித்தனர்.
இற்செறித்தலுக்கு எதிரான கலகக்குரல்
திருமண வயதிலிருந்த தம் மகளின் களவொழுக்கத்தை அறிந்த தாய், அவளை
இற்செறிக்கிறாள். மலைப் பகுதியில் சூரியனின் வெம்மை தாங்கமுடியாமல் கருகிக்
கிடந்த வள்ளிக் கொடியைப் போல அவளது உடலழகு அழிந்ததுத் தோழியர் கூட்டமும்
வருந்தியது.
“பல வேலைப்பாடுகள் மிக்க கப்பல்களைப் பெரிய விளங்கிக் காணும் பெரிய
துறையில் வைக்கப்பட்டிருக்கும் செருக்கைத்தரும் மதுச்சாடியைப் போன்ற என்
இளைய அழகு வீட்டு வாயிலிலேயே அழிந்தொழியும். யாம் இவ்வீட்டிற்குள்ளிருந்தே
முதுமையடைந்து மடிவோம்” என்று நற்றிணை (295) நெய்தல் திணைப்பாடலில்
ஔவையாரின் அழகுத் தலைவி இற்செறிப்புக்கு எதிரான கலகக் குரல் எழுப்புகிறார்.
“முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளியின்
புறம் அழிந்து ஒலிவரும் தாழ் இருங்கூந்தல்
ஆயமும் அழுங்கின்று, யாயும் அஃது அறிந்தனன்,
பலவினை நாவாய் தோன்றும் பெருந்துறை,
கலிமடைக் கள்ளின் சாடி அன்னஎம்
இளநலம் இற்கடை ஒழியச்
சேறும், வாழியோ! முதிர்கம் யாமே“2
“மயக்கம் தரும் மதுச்சாடியைத் தூக்கி அருந்தாவிட்டால் நாட்பட்டு மதுவீணாகி
விடும். இற்செறித்தால் இளமை கெட்டு முதுமையடைந்து வீட்டிற்குள்ளே
இறந்துபோக நேரிடும்” என்று இற்செறிப்புக்கு எதிரான கலகக் குரலை ஔவையார்
எழுப்புகிறார்.
ஆற்றாமை வெளிப்பாடு
காதல் என்ற உணர்வு, ஆண்பெண் இருபாலருக்கும் பொதுவானது. காமநோய் இரு
பாலாரையும் வாட்டக் கூடியது. தம் மனத்தில் தோன்றிய காமநோய் முளைவிட்டு
மரமாக வளர்ந்து மலர்களைச் சொரிந்தது, அப்போதும் தலைவர் வரவில்லை என்று
அகநானூறு (273) பாலைத் திணைப்பாடலில் ஔவையார் ஆற்றாமையை
வெளிப்படுத்தியுள்ளார். “விசும்பு விசைத்து எழுந்த” எனும் பாடலில்
“தலைவரம்பு அறியாத் தகைவரல் வாடையொடு
முலையிடைத் தோன்றிய நோய்வளர் இளமுளை
அசைவுடை நெஞ்சத்து உயவுத் திரள்நீடி,
ஊரோர் எடுத்த அம்பல்அம் சினை,
ஆராக் காதல் அவிர்தளிர் பரப்பி,
புலவர் புகழ்ந்த நார்இல் பெருமரம்
நிலவரை எல்லாம் நிழற்றி
அல் அரும்பு ஊழ்ப்பவும், வாரா தோரே”3
என்று
காமத்தை மரமாக உருவகித்துத் தன் ஆற்றாமையை வெளிப்படுத்திய ஔவையார்,
“இடைபிறர் அறிதல்...” எனத் தொடங்கும் அகநானூற்றுப் (303) பாடலிலும் தன்
ஆற்றாமையைப் பேய்கனவு உவமைமூலம் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். “நம்மை
மற்றவர் அறிந்து கொள்வர் என்பதற்கு அஞ்சிப் பேயைக் கனவில் கண்டதைப்
பிறரிடம் கூறாததைப் போன்று, நாம் நமது ஆற்றாமையை மறைத்து வைத்தோம். ஆனால்
பல சிறப்புகளை உடைய நாமம் நமக்கே தெரியாமல் நம்மையும் மற்றவர்க்குக்
காட்டியது” என்ற பொருளில் ஔவையார்.
“இடைபிறர் அறிதல் அஞ்சி மறை கரந்து,
பேஎய் கண்ட கனவில், பல்மாண்
நுண்ணிதின் இயைந்த காலம் வென்வேல்”4
என்று
பாடுகிறார். கழார்க்கீரன் எயிற்றியாரின் “பெய்து புறந்தந்த பொங்கல்
வெண்மழை” எனத் தொடங்கும் அகநானூற்றின் (217) பாலைத்திணைப் பாடல்,
பொருள்வயிற்பிரிந்த தலைவனது பிரிவின் ஆற்றாமையால் துடித்த தலைவியை நமக்குக்
காட்டுகிறது. “பறவைகளின் கூட்டம் கல்லென்று ஒலிக்க, தம் தலைவரைப் பிரிந்த
மகளிர் அழகிழந்து நடுங்கப் பனிப் பருவம் வந்தது. இந்தப் பருவமானது பொருள்
வயின் பிரிவார்க்கு ஏற்ற ஒன்று” என நினைத்து எத்தகைய சிறந்த பொருளைப்
பெறுவதாய் இருந்தாலும் பிரியாதீர் என்ற எமக்குத் துணையாய் உள்ள உமக்குக்
கூறுவேன் என்று நீ தலைவருக்குக் கூறவும் அதைக் கேட்டும் அவர் எம்மைவிட்டுப்
பிரிந்ததைக் கண்டு, அவரால் நுகரப்பட்டுக் கைவிடப்பட்ட பாழ்மேனியை நாம்
கண்டு, அக்காமநோய் மேலும் வருந்துவதால், உள்ளத்தில் வலிமை குன்றி அவரோடு
புணர்தலை விரும்பிக் கடும்பனியால் வருந்திப் பற்களைத் தீப்பற்றுமாறு
கடித்து நடுக்கம் கொள்வோம் எனும் பொருளில் அப்பாடலை எயிற்றியார்
ஆற்றாமையால் இயற்றியுள்ளார்.
அறிவியல் பதிவுகளை அமைத்துக் பாடினர் குமுழிஞாழலார் நப்பசலையார்
இருபதாம் நூற்றாண்டை அறிவியல் நூற்றாண்டென்றே கொண்டாடுமளவுக்குப் புதிய
கண்டுபிடிப்புக்களை ஏராளமாகக் கண்டுவருகிறோம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே பெண்பாற்புலவர் பெருமக்கள் உயிரினத்தையும் பயிரினத்தையும் அறிவியல்
நோக்கோடு நுட்பமாகக் கவனித்து அகக்கவிதைகளின் பின்னணியாக அவற்றைக்
கொண்டுவந்து மனவுணர்வுகளை மென்மையாகப் பதிவு செய்துள்ளனர்.
“ஒடுங்குஈர் ஓதிநினக்கும் அற்றோ?
நடுங்கின்று, அளித்து என் நிறைஇல் நெஞ்சம்
அடும்புகொடி சிதைய வாங்கி, கொடுங்கழிக்
குப்பை வெண்மணற் பக்கம் சேர்த்தி,
நிறைச்சூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த
கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை...”5
நிறை
கர்ப்பம் அடைந்த பெண்ஆமை மணல் மேட்டில் மறைந்து நின்று புலால் நாறும்
முட்டையை இட்டு மறைத்து வைக்கும், பிளவுடைய வாயைப் பெற்ற ஆண் ஆமை, குஞ்சு
வெளிப்படும் வரை அம்முட்டையைப் பாதுகாக்கும் என்ற அரிய விலங்கியல் செய்தியை
நப்பசலையார் பதிவு செய்த நுட்பம் வியத்தற்குரியது.
வாழ்க்கை பற்றிய பேருண்மையைப் பதிவுசெய்த காமக்காணிப் பசலையார்
வாழ்க்கை பற்றிய பேருண்மையை நற்றிணை (243) யின் பாலைத்திணைப் பாடல்
வாயிலாகக் காமக்காணிப் பசலையார் அருந்திறத்தோடு வெளிப்படுத்துகிறார்.
“செல்வம் என்பது சிந்தையின் நிறைவே”
என்கிறார் குமரகுருபரர். “செல்வோம் செல்வோம்“ என்று சென்றுகொண்டே
இருக்கும் தன்மைபெற்ற செல்வத்தைத் தேடிக் காதலியரை விட்டுப் போக வேண்டாம்
என்ற உண்மையைக் காமக்காணிப் பசலையார் உணர்த்துகிறார்.
“வாழ்க்கை சூதாட்டக்கருவியைப் போல நிலையற்றது. சூதாட்டக்கருவி மாறி மாறி
விழுவதைப் போல வாழ்க்கை மாறிக்கொண்டேயிருக்கும். எனவே தலைவனையே நினைத்து
வாழும் காதலியரைப் பிரிய வேண்டாம் என்ற பொருளில்
“தேம்படு சிலம்பில் தென் அறல் தழீஇய
துறகல் அயல தூமணன் அடைகரை,
அலங்கு சினை பொதுளிய நறு வழ மாஅத்துப்
பொதும்புதோறு அல்கும் பூங்கண் இருங்குயில்,
கவறு பெயர்த் தன்ன நில்லா வாழ்க்கை இட்டு
கையறத் துறப்போர்க் கழறுவ போல,
மெய்உற இருந்து மேலா நுவல,
இன்னாது ஆகிய காலை, பொருள்வயிற்
பிரிதல் ஆடவர்க்கு இயல்பு எனின்,
அரிது மன்றம்ம, அறத்தினும் பொருளே!”6
“வாழ்வின் பொருள், பொருள் தேடுதல் மட்டுமன்று, பொருள்பட வாழ்ந்து காதலரோடு மகிழ்ந்திருத்தல்” என்று பசலையார் உணர்த்துகிறார்.
கைம்மைக் கொடுமையினைப் பதிவு செய்த தாயங்கண்ணியார்
சிறுவயதிலேயே மணம்முடித்துக் கணவனை இழந்து, தலைமையிரை நீக்கி, வளையலைக்
களைந்து, அல்லி அரிசியுண்ணும் கணவனை இழந்த பெண்டிர் நிலையைப் புறநானூற்றுப்
பாடலில் (250) உவமையாகப் பயன்படுத்தித் தாயங்கண்ணியார் யாவரையும் கண்கலங்க
வைத்துள்ளார்.
“குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்
இரவலர்த் தடுத்த வாயில், புரவலர்
கண்ணீர்த் தடுத்த தண்நறும் பந்தர்,
கூந்தல் கொய்து, குறுந்தொடி நீக்கி,
அல்லி உணவின் மனைவியொடு, இனியே
புல்லென்றனையால் வளம்கெழு திருநகர்!
வான்சோறு கொண்டு தீம்பால் வேண்டும்
முனித்தலைப் புதல்வர் தந்தை
தனித் தலைப் பெருங்காடு முன்னிய பின்னே”7
கைம்மைத் துயரினை அனுபவித்த பெண்ணினத்தைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு அழகாகப் பாட முடியாது என்றே எண்ணத் தோன்றுகிறது.
புறநானூறு இலக்கியத்தில் (246) பூதப் பாண்டியன் தேவியார் பாடிய “பல் சான்றீரே! பல் சான்றீரே!” என்ற பாடலும் இக் கொடுமையை முன் வைக்கிறது. நெய் கலவா நீர்ச்சோறு, எள் துவையல், புளிசோ்த்த வேளைக் கீரை ஆகியவற்றை உண்டும்.
கல் மேல் துயின்றும் கைம்மை நோன்பியற்றிய பெண்டிர் பட்ட மன வேதனையைப்
பூதப் பாண்டின் தேவியார் உணர்த்தி உள்ளார். மாறோக்கத்து நப்பசலையார்
புறநானூற்றில் (280) பாடிய “என்னை மார்பில் புண்ணும் வெய்ய...” எனும்
பொதுவியல் திணைப் பாடலில் தலைவன் மார்பில்பட்ட புண்ணில் வண்டுகள்
மொய்ப்பதால் வீட்டில் வைத்த விளக்கு அணைகிறது என்று கொடுமையை
வெளிப்படுத்துகிறார். கைம்மைக் கொடுமையைப் பெண்கவிஞர்கள் மன வேதனையோடு
வெளிப்படுத்தியுள்ளனர்.
வீரம் செறிந்த வீரப்பெண்டிர்
வீரம் நிறைந்தவர்களாகச் சங்காலப் பெண்டிர் இருந்தனர். முதல்நாள் போரில்
தந்தையை இழந்தாள். இரண்டாம் நாள் போரில் கணவனை இழந்தாள், இன்றைய நாளில்
போர் முழக்கம் கேட்டவர் தன் குடிப்பெருமையைக் காக்க எண்ணித் தன்
குடிகாக்கும் ஒரே மகனுக்கு எண்ணெய் தடவி வெள்ளாடை உடுத்தி வேலைக் கையில்
தந்து போர் முனைக்குச் சங்ககாலப் பெண் அனுப்பினாள் என்ற செய்தியை ஒக்கூர்
மாசாத்தியாரின் புறநானூற்றுப் (279) பாடல் விளக்குகிறது.
“கெடுக சிந்தை, கடிது இவள் துணிவே,
மூதில் மகளிராதல் தகுமே,
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை,
யானை எறிந்து, களத்து ஒழிந்தனனே,
நெடுநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்
பெருநிலை விலங்கி, ஆண்டுப் பட்டனனே
இன்னும், செருப்பறை கேட்டு, விருப்புற்று, மயங்கி
வேல்லைக் கொடுத்து, வெளிது விரித்து உடீஇ,
பாறு மயிர்க்குடுமி எண்ணெய் நீவி,
ஒரு மகன் அல்லது இல்லோள்
செருமுகம் நோக்கிச் செல்க என விடுமே” 8
முடிவுரை
பெண்மை உயரிய ஆளுமையின் அடையாளம். நுட்பமான அறிவுணர்வின் அடையாளம்,
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே படைப்பாற்றல் மிக்கவர்களாகத் திகழ்ந்த
பாலினம், தனித்துவம் மிக்கவர்களாகத் தன்னுணர்வினை அழகாகத் திறத்தோடு
வெளிப்படுத்திய இனம். சங்க இலக்கியப் பெண்பாற்புலவர்கள் மொழியைக் கூரிய
ஆயுதமாகப் பயன்படுத்தித் தம்மை இயல்பாக வெளிப்படுத்தினர். ஒக்கூர்
மாசாத்தியாரின் பாடல்களில் வரும் காட்டுப் பூனையும், ஔவையாரின் கவிதைகளில்
திரும்பத்திரும்ப வரும் பாம்பும் பல செய்திகளை உணர்த்துவதாய் அமைகின்றன.
பச்சைப் புளியை விரும்பி உண்ணும் தலைச்சூல் மகளிரின் மசக்கையை
கச்சிப்பேட்டு நன்னாகையாரின் “அம்மவாழி தோழி”, எனும் குறுந்தொகைப் (287)
பாடல் உணர்த்துகிறது.
இந்செறித்தலுக்கு எதிரான பதிவைப் பெண்பாற் புலவர்களால் சிறப்பாகத் தர
முடிந்துள்ளது. காமஉணர்வினை வெளிப்படையாக உணர்த்தி ஆற்றாமையைச்
சுதந்திரமாகச் சொல்ல முடிந்த அவர்களின் திறம் பாராட்டுக்குரியது. ஈராயிரம்
ஆண்டுகளான பின்னரும் விலங்கினங்களை உற்று நோக்கி அவற்றின் இயல்புகளை
நம்மால் இலக்கியமாக்க முடியாநிலையில், அன்றே ஆமையைப் பற்றியும் இதர
விலங்கினைப் பற்றியும் பதிவு செய்து அறிவியலுக்கு வித்திட்ட திறம் வியக்க
வைக்கிறது.
“கணவனை இழந்ததால் யாவற்றையும் இழக்க வேண்டுமா?“ என்ற வினா எழுப்பிய
பெண்பாற் புலவர்களின் கலகக்குரல் பெண்ணியத்திற்கு அடித்தளமாக அமைகிறது.
”வீரம் என்பது ஆணுக்கு மட்டுமன்று, பெண்ணுக்கும் உரியது“ என்று போர்ச்
செய்திகளைப் பாடிய திறமும், மன்னனுக்கு ஆலோசனை கூறி, தூதுவராகச் சென்றதும்,
வலிமையான சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் திறமையான ஆளுமைப் பதிவுகள்
மொத்தத்தில் சங்ககாலம் ஆளுமையுடைய பெண்களின் சுதந்திரமான பொற்காலம் என்பது
சாலப் பொருத்தமாக அமைகிறது.
சான்றெண் விளக்கம்
1. ந. முருகேசபாண்டியன், சங்கப்பெண் கவிஞர்களின் கவிதைகள், ப.2.
2. நற்றிணை, பா. 295.
3. அகநானூறு. பா. 273.
4. மேலது, பா. 303.
5. மேலது, பா. 160.
6. நற்றிணை, பா. 243.
7. புறநானூறு, பா.250.
8. மேலது, பா. 279.
Sunday, 23 October 2011
காலத்தை வென்ற ஞாலக்கவிஞன் பாரதி
பேராசிரியர் முனைவர். ச. மகாதேவன்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி)
திருநெல்வேலி.
கைப்பேசி : 09952140275
Email : nellaimaha74@gmail.com
மாநிலம் பயனுற வாழ்வதற்கான வல்லமையைப் பாரதி, பராசக்தியிடம் வரமாகக் கேட்கிறான்.
பாரதிதாசனாரும் ஆத்திசூடியில் நல்ல சிந்தனைகளை விதைக்கச் சொல்கிறார். வெறும் பேச்சு பேசேல் என்று கூறும் பாவேந்தர்.
“தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறுகதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று – பிறர்வாடப்
பல செயல்கள் செய்து
நரைகூடிக் கிழப்பருவம் எய்தி
கொருங் கூற்றுக்கு இரையெனப்பின் மாயும்
வேடிக்கை மனிதரைப் போல
வீழ்வேனெ நினைத்தாயோ”
என்ற பாரதியின் வரிகளை அடியொற்றியே ஆத்திசூடி படைத்துள்ளார்.
“வையம்
வாழ வாழ்” என்ற பாவேந்தரின் வரி, பொதுமைச் சமுதாயத்திற்கு மக்களை
அழைத்துச் செல்கிறது. “கெடு நினைவு அகற்று, சோர்வு நீக்கு” எனும்
ஆத்திசூடிப் பாடல் வரிகளில் “நல்ல எண்ணம் வேண்டும்” என்ற உயரிய நீதி நிலை
பெறும். சிந்துக்குத் தந்தை, செம்மொழித் தமிழின் கம்பீரக்கவிக்குழந்தை
எட்டயபுரத்து மண் ஈன்ற பண் சுமந்த பைந்தமிழ் தேர்ப்பாகன், தமிழில் புதிய
மரபுகளின் தொடக்கமாக அமைகிறார். நூறாண்டுகள் வாழ வரங்கேட்ட மகாகவிபாரதி
இம்மண்ணில் வாழ்ந்தது முப்பதொன்பது ஆண்டுகளே!
புதுக்கவிதையின் பிதா மகனாக, தேர்ந்த மொழி பெயர்ப்பாளராக, சீரிய அரசியல்
பார்வை கொண்ட பத்திரிக்கையாளராக, சமுதாய மாற்றம் கண்ட சீர்திருத்த
செம்மலாக பாரதி எடுத்த ஆவதாரங்கள் ஆயிரம்... ஆயிரம்...
1898ஆம் ஆண்டு பாரதியின் தந்தை சின்னசாமி ஐயர் இறப்பைத் தழுவ, பாரதி
காசிக்குச் சென்றார். அலகாபாத் சர்வகலா சாலையில் பிரவேசத் தேர்வில்
தேர்ச்சிபெற்ற, காசி இந்து கலாசாலையில் சமஸ்கிருதம் இந்தி மொழிகள்
பயின்றார். 1898 முதல் 1902 வரை அவர் வாழ்ந்த காசி வாழ்க்கை அவரைச்
சீர்திருத்தவாதியாக மாற்றியது. “பேயரசு செய்தால் பிணந்தின்னும்
சாத்திரங்கள்” என்று சினப்பட்ட பாரதி, தன் சுய சரிதையில் இப்படி
எழுதுகிறார்.
“தாழுமுள்ளத்தர்,
சோர்வினர், ஆடுபோல் தாவித்தாவிப் பல பொருள் நாடுவோர்,
விழுமோரிடையூற்றினுக்குக் கஞ்சுவோர், விரும்பும்யாவும் பெறாரிவர் தாமன்றே,
விதியை நோவர் தம் நண்பரைத் தூற்றுவர், விதியை நோவர் தம் நண்பரைத்
தூற்றுவர், வெகுளி பொங்கிப் பகைவரை நிந்திப்பர், சதிகள் செய்வர், பொய்ச்
சாத்திரம் பேசுவர், சாதகங்கள் புரட்டுவர் என்று பட்டியல் இடுகிறார்.”
இந்திய புராணக் கதைகளில் மரணத்தின் அதிபதியாக இருக்கும் “எமனை” பாரதி
காலருகில் அழைத்தார்.
“காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன் என்றன, காலருகே வாடா! சற்றே
உனை மிதிக்கிறேன்” என்று கம்பிரமாகப் பாடிய பாரதி உணவைத் தேடியுண்டு, உணவு
செரிக்கப்பழங்கதைகள் பேசி, பிறர் வாழ்வில் சிக்கல்கள் செய்து நரைகூடிக்
கிழப்பருவம் எய்தும் வேடிக்கை மனிதர்களைப் போல வாழ விரும்பவில்லை.
“தேடிச்சோறு நிதந்தின்று – பல
சின்னஞ்சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து
நரைகூடிக் கிழப்பருவமெய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ”
என்ற பாரதியின் வரிகள் தன்னம்பிக்கையின், தனித்துவத்தின் வசந்த வரிகளாகத் திகழ்கின்றன. காளி தேவியிடம் வரம் கேட்டும் பாரதி,
“காளி நீ காத்தருள் செய்யே,
மரணமும் அஞ்சேன், நோய்களை அஞ்சேன்
மாரவெம் பேயினை அஞ்சேன்”
என்று கம்பீரமாகப் பேசிய பாரதி, புதிய ஆத்திசூடியில் ரௌத்திரம் பழகச் சொல்கிறார்.
கல்வியெனும் கலங்கரை விளக்கால் மட்டுமே கடலில் தவிக்கும் வாழ்க்கைப் படகுக்கு வெளிச்சம் தர முடியும் என்று பாரதி கருதினார்.
“வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்
இங்கு வாழும் மனிதருக் கெல்லாம்
பயிற்றுப் பலகல்விதந்து இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்”
என்று கவிபாடினார்.
தமிழப்புதுக் கவிதையின் முதல் வசன கவிதை எனச் சிறப்பு பெறும்
“காட்சி” கவிதையில் பாரதி யாவற்றையும் ரசிக்கச் சொல்கிறான்.
“காட்சி” கவிதையில் பாரதி யாவற்றையும் ரசிக்கச் சொல்கிறான்.
“இவ்வுலகம் இனியது, இதிலுள்ள வான்
இனிமையுடைத்து, காற்றும் இனிது,
தீ இனிது, நீர் இனிது, நிலம் இனிது,
ஞாயிறு நன்று, திங்களும் நன்று,
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன
மழை இனிது, மின்னல் இனிது, இடி இனிது
கடல் இனிது, மலை இனிது, காடு நன்று
ஆறுகள் இனியன... உயிர் நன்று
சாதல் இனிது”
என்று கூறிய மாகவி பாரதி “பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்”
என்று கூறினார். உண்மைதான், வரகவிகளுக்கு மரணமில்லை.
“பாவேந்தர் பாரதிதாசனாரின் தமிழ் இன்பம்”
பேராசிரியர் முனைவர். ச. மகாதேவன்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி)
திருநெல்வேலி.
கைப்பேசி : 09952140275
Email : nellaimaha74@gmail.com
கவிச்சக்ரவர்த்தி கம்பருக்குப் பின் தமிழ்த்தாய் தவமாகத் தவமிருந்து பெற்ற
கண்மணியர் இருவர். பாட்டுக்கொரு புலவன் பாரதியும், தமிழ் நாட்டுக்கொரு
பாவேந்தர் பாரதிதாசனும் இறவா வரம் பெற்ற எழுச்சிக் கவிஞர்கள். இருவரும்
தமிழாசிரியர்கள், இருவரும் தேச விடுதலை வேள்வியில் தம்மையே நெய்யாக
மாற்றித் தந்தவர்கள், இருவரும் தளர்ந்து கிடந்த மக்கள் மனத்தில்
தன்னம்பிக்கை ஊட்டியவர்கள்.
“அச்சம் தவிர்“ என்று பாரதி ஆத்திசூடியைத் தொடங்கியது பாவேந்தரைக் கண்டு
தானோ அவருடைய மன உறுதியைக் கண்டு தானோ என்ற எண்ணத் தோன்றுகிற அளவிற்கு
அஞ்சா நெஞ்சராக, அழகுத் தமிழ் காவலராகத் திகழ்ந்தவர் பாரதிதாசனார். கவியரசு
கண்ணதாசன் பாவேந்தரைப் பற்றி எழுதும்போது “அதிர்ந்ததிந்தப் பூமி அவர் நடையில் என்றால் அழகுதமிழ் நடையினையும் சேர்த்தே சொன்னேன்” எனக் குறிப்பிட்டார்.
இந்திய வரலாற்றில் 1908ஆம் ஆண்டு குறிப்பிடத்தக்க ஆண்டு, கனக சுப்பு
ரத்தினம் பிறந்த புதுவைக்கு மகாகவி பாரதி நுழைகிறார். வேணு நாயகர்
வீட்டுத் திருமணத்தில் முதன் முதலாகப் பாரதிதாசனாரைப் பாரதி சந்திக்கிறார்.
பாரதியாரின் மனத்தில் இடம் பிடிக்கிறார். பாரதியார், வ.வே.சு. ஐயர்,
டாக்டர் வரதராஜலு, மகான் அரவிந்தர் ஆகியோரோடு தொடர்பு கொள்கிறார்.
பாரதியின் காகித ஆயுதமான “இந்தியா“ இதழை மறைமுகமாகப் பதிப்பித்து
உதவுகிறார், 1908 முதல் 1918 வரை பாரதியாருக்குப் பேருதவியாகப்
பாரதிதாசனார் திகழ்கிறார்.
பாரதியின் பார்வை தேசியப் பார்வை என்றால், பாரதிதாசனின் பார்வை தமிழ்ப்
பார்வை எனக் கொள்ளலாம். தமிழின் இனிமையைத் திரும்பத் திரும்பச் சொன்ன
கவிஞராக, தமிழ் என்ற புள்ளியை மையமாகக் கொண்டே தன் கவிதை வட்டத்தை வரைந்த
கவிஞராக, தமிழரின் நீண்ட தொன்மையை எளிய கவியில் உணர்வுபொங்கச் சொன்ன
தமிழுணர்வுக் கவிஞராகப் பாரதிதாசனாரைக் கொள்ளலாம்.
“தமிழ் என் கிளவியும் அதனோரற்றே” என்று தொல்காப்பியரால் தொல்காப்பியத்தில் குறிக்கப்படும் தமிழ், திராவிட மொழிகளின் தாயாகத் திகழ்கிறது.
“இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்” என்று
பிங்கல நிகண்டு தமிழுக்கு விளக்கம் தருகிறது. பாவேந்தரின் கவிதைகள்
தமிழின் இனிமையை அழகாகச் சொல்லும் கவிதைகளாகத் திகழ்கின்றன. உண்ணும் உணவு,
உணரும் இன்பம், உடன் வரும் உறவோர், உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் இயற்கை
இவையாவற்றையும் பின்னுக்குத் தள்ளுகிறது. தமிழின் இனிமை என்கிறார்
பாவேந்தர்.
“கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிர் இளநீரும்
இனியன என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்”
என்று அழகுக் கவிதை படைத்தார் பாவேந்தர்.
தமிழ் மந்திரமாகத் திகழும் திருமந்திரத்தில் திருமூலமாமுனிவர்
“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே”
என்று குறிப்பிட்டுள்ளார்.
மகாகவி பாரதி தேச விடுதலைக்காகப் பாடி எழுச்சியூட்டி 1921ஆம் ஆண்டில்
மறைகிறார். பாரதியின் தாசனாகத் தன்னை உருவகித்துக் கொண்ட பாவேந்தர்,
காலத்திற்கேற்ப கருத்தாக்கத்தை மாற்றிக் கொள்கிறார்.
“சுதந்திரம்
பெற்று விட்டோம்“ அடுத்த நிலை, தமிழ் மொழியை மையமிட்ட தமிழ்ச்
சமுதாயத்தை ஒன்றுபட்ட, தொன்மையை உணர்ந்த தமிழ்ச் சமுதாயத்தைக்
கட்டமைப்பதுதான் தன் பணி என வரையறுத்துக் கொண்டார். மூடநம்பிக்கை
எதிர்ப்புப் பகுத்தறிவுப் பிரச்சாரம், சமூகவிடுதலை என்று இலக்கு
மறக்கடிக்கப்பட்ட தமிழின் இனிமையைத் திரும்பத் திரும்பச் சொல்வது மற்றொரு
இலக்கு என்று தீர்மானித்து பாவேந்தர், கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே
தமிழின் அருமையான இலக்கண நூலான தொல்காப்பியம் பிறந்ததென்றால், அதற்கு
முன்பே ஈராயிரம் ஆண்டுகள் அம்மொழி கோடிக்கணக்கான மக்களால் பேசப்பட்டு
வரிவடிவங்கள் உருவாக்கப்பட்டு அதன் பின்னரே இலக்கணம் வகுக்கப்பட்டிருக்கும்
என்று பாவேந்தர் உறுதியாக நம்பினார். பாற்கடலில் கிடைத்த அமுதை
உண்டவர்களுக்குச் சாவு இல்லை என்பதைப் போல், தமிழ் அமுதைப்
பருகியவர்களுக்கும் இறப்பிலை என்று பாவேந்தர் பதிவு செய்தார்.
“தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்.
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் – இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ ”
தமிழை அமுதாக, நிலவாக, மணமாக மதுவாக, பாலாக, வானாக, தோளாக, தாயாக
உருவகித்த பாவேந்தர் “வளமிக்க உளமுள்ள தீ” யாக முடிக்கிறார். “தமிழ்” என்ற
சொல்லை மீண்டும் மீண்டும் சொல்லி மகிழும்போது “அமிழ்து அமிழ்து” என்று
அழகாய் ஒலிப்பதைக் காதுகள் கம்பீரமாய் அறிவிக்கின்றன.
சீறி எழும் சிலம்பும், மேவு புகழ் மேகலையும், பத்து எட்டொடு
குண்டலகேசியும், சீவகனார் வளம்பாடும் சிந்தாமணியும், தித்திக்கும்
திருக்குறளும், சமூக வியாதி அகற்ற நீதி சொன்ன நாலடியும், ஏலாதியும்,
திரிகடுகமும், ஒப்பற்ற கதைகள் சொன்ன பெரிய புராணமும், கம்பநாடர்
ராமாயணமும், தமிழின் நவீன இலக்கியங்களும் வரிசையாகச் சொன்னவற்றைப்
பாவேந்தர் உள்வாங்கிக் கவி புனைந்தார்.
“எல்லே இலக்கம்” என்ற தொல்காப்பிய நூற்பாவிலுள்ள “இலக்கம்” என்ற சொல்,
“இலக்கு கூட்டல் அம்” எனப் பகுக்கப்படுகிறது. “இலக்கை இயம்புவது” எதை
நோக்கி நாம் பயணிக்க வேண்டும் எனக்கற்றுத் தருகிறது.
இரவீந்திரநாத்
தாகூர் “கீதாஞ்சலி” எனும் ஒப்பற்ற இலக்கியத்தைப் படைத்தது அவரது தாய்
மொழியான வங்கமொழியில், தேசப்பிதா மகாத்மா காந்தி தன் சுய சரிதையை எழுதியது
அவரது தாய் மொழியான குஜராத்தி மொழியில் தாய் மொழியில் தான் சிந்திக்க
முடியும், சுதந்திரமாகக் கருத்துக்களைப் பதிவு செய்ய முடியும், அதற்குத்
தமிழ் மொழிவழிக் கல்வியே தமிழ் நாட்டுக்கு அவசியம்“ என்று பாரதிதாசனார்
எண்ணினார்.
“தமிழ்ப்பேறு”
எனும் கவிதையில் அக்கருத்தைப் பதிவு செய்கிறார் பாவேந்தர் “இன்னலிலே
தமிழ் நாட்டினிலேயுள்ள என் தமிழ் மக்கள் துயின்றிருந்தார். அன்னதோர்
காட்சி இரக்க முண்டாக்கியென் ஆவியில் வந்து கலந்ததுவே! இன்பத் தமிழ்க்
கல்வி யாவரும் கற்றவ் என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால் துன்பங்கள்
நீங்கும், சுகம் வரும் நெஞ்சினில் தூய்மை யுண்டாகிடும், வீரம் வரும்” என்ற அற்புதத் தீர்வைப் பாவேந்தர் பயனுறத் தருகிறார்.
தமிழகத்தில் கி.மு.க்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே சங்கங்கள்
இருந்தன. கடல்கோளுக்குள்ளான லெமூரியாவில் தென் மதுரையில் கபாடபுரத்தில்,
மதுரையில் தமிழ்ச் சங்கம் நிலைபெற்று இலக்கியங்களை உருவாக்கித் தந்தது.
பாரதப் போரில் பங்கேற்ற இருபுறத்துப் படையோருக்கும் பெருஞ்சோறளித்த
பெருஞ்சோற்று உதியன் சேரலாதனைப் புறநானூறு பதிவு செய்கிறது. மூவேந்தர்
குறித்துப் பல இலக்கியங்கள் குறித்துரைக்கின்றன. உடைந்து கிடந்த
தமிழ்மக்கள் தமிழால் “ஒன்றாதல் கண்டு பகைவர்கள் ஓடி ஒளிந்தார்கள் என்று
பாவேந்தர் “சங்கநாதம்“ பாடுகிறார்.
“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே”
இன ஒற்றுமையை மொழியின் அடித்தளத்தில் பாவேந்தர் கட்டமைத்தார்.
“செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே – எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே”
என்று பாரதி பாடியதைப் போல “தமிழ்” என்றவுடன் பாவேந்தருக்கு சக்தி பிறந்து யாவரையும் ஒன்றாக்கத் துடிக்கிறார்.
“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்த குடி”
அடுத்தடுத்த நூற்றாண்டுகளின் அசுர வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க வேண்டும் என்று
பாவேந்தர் விரும்பினார்.
“எங்கள்
தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் தலைமுறைகள் பல கழித்தோம், குறை
களைந்தோமில்லை” என்று குமுறும் பாவேந்தர் தம் குருநாதர் பாரதியை மனத்தில்
நிறுத்துகிறார். பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழ் மொழிக்குக்
கொண்டுவர நினைக்கிறார். இறவாத தமிழ் நூல்கள் தமிழில் வர எண்ணுகிறார்.
“தமிழ் வளர்ச்சி” என்ற கவிதையிலே தமிழ் வளர வழி சொல்கிறார்.
“எளிய
நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்” இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும்
வேண்டும், வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக விளைந்துள்ள
எவற்றினுக்கும் பெயர்களெலாம் கண்டு
தெளிவுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து
செந்தமிழைத் செழுந்தமிழாய்ச் செய்வதும் வேண்டும்.
எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால்
இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்.”
”தனியொருவனுக்கு உணவிலையெனில்
சகத்தினை அழித்திடுவோம்”
என்று
பாரதி சொன்னதைப் போல், எளிமையினால் ஒரு தமிழன் படிக்காமல் போனால்
தமிழகத்திலுள்ள அனைவரும் நாணவேண்டும். என்ற செய்தி நோக்குதலுக்குரியது.
72 ஆண்டுகள் 11 மாதம் 28 நாள் வாழ்ந்த பாரதிதாசன் சங்க இலக்கிய மரபில்
இயற்கையைக் கொண்டாடி அதன் பின்னணியில் புதிய கருத்துக்ளோடு இலக்கியங்கள்
படைத்தார். தொல்காப்பிய மரபில் அவர் கவிதைகளில் உள்ளுறை, உவமம், இறைச்சிப்
பொருள் ஆகியவற்றைக் காண முடியும். பாரதிதாசனுக்கு “தமிழகமே உலகம்” அவர் காண விரும்பிய உலகம் “தமிழ் உலகம்”
தமிழ் உணர்வூட்டுதல், தமிழின் வேர்களை அடுத்த கிளைகளுக்குத்
தெரியப்படுத்தித் தன்னம்பிக்கை ஊட்டுதல், தமிழால் தமிழரால் எல்லாம்
முடியும் என்று புரியவைத்தலே பாவேந்தரின் இலக்கிய நோக்கு “காரிருளால்
சூரியன்தான் மறைவதுண்டோ, கறைச் சேற்றால் தாமரையின் வாசம் போமோ,
பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மையாகமோ, பிறர் சூழ்ச்சி செந்தமிழை
மாய்ப்பதுண்டோ!” என்று சினந்து கேட்கும் பாரதிதாசன் தமிழரின் தனித்துவம்
மிக்க மூவாயிரம் ஆண்டு தமிழ்ப் பண்பாட்டின் தொடர்ச்சியாகத் தெரிகிறார்.
அவர் கண்ட கனவு அற்புதக் கனவு. அது தளரா நம்பிக்கை கொண்ட தமிழ்க் கனவு, “எந்நாளோ?” எனும் கவிதையில் அவர்
“என்னருந் தமிழ்நாட்டின் கண்
எல்லோரும் கல்வி கற்றுப்
பன்னருங் கலை ஞானத்தால்
பராக்கிரமத்தால் அன்பால்
உன்னத இமயமலைபோல்
ஓங்கிடும் கீர்த்தி யெய்தி
இன்புற்றார் என்று மற்றோர்
இயம்பக் கேட்டிடல் எந்நாளோ?
கைத்திறச் சித்திரங்கள்,
கணிதங்கள் வான நூற்கள்
மெய்த்திற நூற்கள், சிற்பம்
விஞ்ஞானம் காவியங்கள்
வைத்துள தமிழர் நூற்கள்
வையத்தின் புதுமை என்னம்
புத்தக சாலை எங்கும்
புதுக்கு நாள் எந்த நாளோ?
வெள்ளம் போல் தமிழர் கூட்டம்
வீரங் கொள் கூட்டம், அன்னார்
உள்ளத்தால் ஒருவரே
மற்றுடலினால் பலராய்க் காண்பார்”
பாரதிதாசன், வெள்ளம் போன்ற கோடிக் கணக்கான தமிழர் கூட்டம் இருந்தாலும், “உள்ளத்தால் ஒருவரே” என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.
பாவேந்தரின் கவிதைகள் பார்போற்றும் கவிதைகள்,
தமிழ் அடையாளத்தின் தன்னிகரற்ற கவிதைகள்
தனித்துவத்தின் தமிழ்க் கவிதைகள்.
Subscribe to:
Posts (Atom)
No comments:
Post a Comment