Sunday, January 4, 2015

கைப்பிடிக்குள் கடலை அடக்கமுயன்ற கவிப்பிரவாகம் பிரமிள்: தமிழ் இந்து கலை இலக்கியம் : முனைவர் சௌந்தர மகாதேவன்



ஜனவரி- 6: பிரமிள் நினைவுநாள் கட்டுரை
 

முனைவர் சௌந்தர மகாதேவன்,
தமிழ்த்துறைத்தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி
mahabarathi1974@gmail.com,9952140275

பிரமிள்(ஏப்ரல்20,1939 -ஜனவரி 6,1997), என்கிற தருமு சிவராம் தமிழ்ப் படைப்புலகின் ஆச்சர்யமான ஆளுமை.வாழ்வில் நேர்மையும் எழுத்துக்கூர்மையும் கொண்ட அற்புதமான படைப்பாளர்.சொற்கள் குறுகி அவர் முன்னிறுத்தும் படிமங்கள் ஓங்கி உயரும்போது, வாசகன் அவர் கவிதைவெளிக்குள் கண்கூசநடக்கிறான். 

உலையில் செந்நிறத்துண்டாய்  பழுக்கக்காய்ச்சிய இரும்பு, தண்ணீர் பட்டவுடன் உஸ் என்ற சப்தத்தோடு காணமல்போகுமே அதைப்போன்ற காணாமையை அவர் கவிதைகள் பதிவுசெய்கின்றன.


 “சொல்லற்ற சுமைதரபேசு” எனும் பிரமிள்,படிமங்களைப் படியெடுத்துத் தருகிறார் உயிர்மச் சொற்களால். பிரமிள் ஓர் புதிர்ப்புதையல்.யாருமற்றப் பெருவெளியில் பேருமற்றுவாழும் அநாமதேயன் வெறுமையோடு நடப்பான் அவர் கவிவெளிக்குள்.சொற்கள் துறந்து சுள்ளென்று வலிக்குமாறு கவிபுனைய அவரால் முடிந்திருக்கிறது.

வசதியாய் அமர்ந்து வாசித்துவிட முடியா நெருடல்களோடு அவர் கவிதை வாசகமனதிற்குள் இறங்குகிறது சொல்சொல்லாக. “மண்டபம்” பிரமிளின் சிறப்பான கவிதைச்சிற்பம்.மண்டபத்தோடு மனமும் தலைகீழாகிறது..


“சுவரெங்கும்\ நிழல்கள்கீறி\ விரிசல்களாயிற்று\ ஊடே பிளந்தது அகாதம்\ சிலைகள் விரூபித்து\ வெண்கலக் கழுகுகளாயின.\ என்னைச் சுற்றிற்று\ கூக்குரல்களின்\ சப்த வியூகம்..” என்று அற்புதமாய் தொடர்கிறார்.வழக்கமான பொருளைத் தாண்டி பரந்தபொருளுக்குள் விரித்துச்செல்கிறது அவரது கவிஈட்டி.நிலவின் மீதும் நிழலின் மீதும் நீண்டு படர்கிறது அவரது கவிதைப் படிமம்.காவியம் என்ற கவிதை அருமையானது.


“சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின் தீராதபக்கங்களில்
ஒருபறவையின் வாழ்வை
எழுதிச்செல்கிறது” 


எனும் கவிதை பறக்கவைக்கிறது நம் மனவெளியில் நம்மையும் மகிழ்ச்சியாக.தேர்ந்த ஓவியராகவும் சிற்பியாகவும் இருந்த காரணத்தால் ஓவியத்தின் நேர்த்தியோடு அவரால் கவிச்சிற்பம் செதுக்கமுடிந்திருக்கிறது. வரிகளுக்கிடையே அவர் வகிக்கும் மௌனம் வலிதருவது,வாசகனைச் சிலநேரங்களில் திகைக்க வைக்கிறது.படிமங்களின் படியில் வியப்புக்குரிய புள்ளிகளை இட்டு அவரால் கவிதைக் கோலமிடமுடிந்திருக்கிறது.


ஆசைகள் அவருக்கு அவசியமானவை. தளைகளை அறுத்தெறிய அவர் கவிதைகள் முயன்றதை விடத் தளைகளைத் தாண்ட முயன்றன.
காலமும் அவருக்கு விளையாட்டுப் பொருள்தான். “காலத்தைத் திரித்து\நேற்று நாளை\இரண்டுக்கும் நடுவே\இன்று முடிந்திருக்கிறது\ முடிச்சின் சிடுக்கு- நான்\ அத்துவிதம் கணந்தோறும் நான்\ செத்தவிதம்.\
சொல்வேன் உண்டென்று \ சொல்லில் இல்லாதது.\ சொல்வேன் உண்டென்று சொல்லில்,\இல்லாதது.\ சொல்வேன் உண்டென்று\ சொல், இல்\இல்லாத\அது.” எனும் கவிதையில் பிரமிள் காலத்தைப் பிய்த்துப்போட்டு சொற்களால் அதைச் சோதித்துப் பார்க்கிறார்.



வருத்தத்தின் நிறுத்ததில் அவர் வரிகள் நின்றுகொண்டிருப்பதில்லை. வெளிச்சமற்ற வெளிகளில் புகுந்து அவர் கவிதைகள் யாதர்த்த வாழ்வியலை ஒளியூட்ட முயல்கின்றன.பிரபஞ்சத்தின் புரியாமையை அவர் கவிதை புரியவைக்க முயல்கின்றன.மேலோட்ட வாசிப்பிற்கு அவர் கவிதைகள் இடந்தராதனவாய் காட்சியளிக்கின்றன. மேலெழும்பிக் கிளைபரப்பி வானம் நோக்கி வளரும் ஆலமரம், தன் விழுதனுப்பி வேர்களை விசாரிப்பது போல,தன் அகமனக்கண்ணாடியை தினக் கண்ணாடியின் முன்னிறுத்தித் தொடர்ச்சியாகத் தெரியும் பிம்பங்களைப் பிரமிப்புடன்  பார்க்கிறார், பார்க்கவும் வைக்கிறார்.


“தத்தளிக்கின்ற\குளத்தின் பரப்பில்\நிலவை அள்ளிய\ அலை\வெளவால்களுக்கு\கண்ணாடிச் சிறகுகள்.\ அடைகாக்கும் சிறகினுள்\அடங்கும் முத்து.\ முத்தினுள் \ஒரு துகள் சேறு.\ துகளிலே விரிந்து\ ஆழ ஓடும் \ஒரு பிலம்.\ நக்ஷத்ரங்களாய்\தத்தளிக்கிறது\பிலத்தினுள்\குடிகொண்ட\அகாதம்.” 


தண்ணீர் கொட்டிய  அறையில், பரவும் தண்ணீர்போல் நிலவை அள்ளிய குளம் பரவுகிறது வாசகன் மனப்பிம்பமாய்.ஒரே நேரத்தில் அவர் நீரிலும் ஆகாயத்திலும் மாறிமாறிப் பயணப்படுகிறார்.அவர்கவிதைகளைப் புரிந்துகொள்ள நிதானமும் பக்குவமும் அவசியமாகின்றன. கற்பாறைகள் மீதும் துணிச்சலாய் அலைவீசி நீர்க்கரங்களால் தனைக் காட்டும் அலைபோல் அலைந்த கலையலை அவர்.ஆத்மதாபம் அவர் கவிதைகள்.

  சாரமற்றுப்போன வாழ்வு, அவருக்கு சோகமற்றுப்போகவில்லை. உமிழும் உணர்வின் தவழும்வரிகளே அவர் கவிதைகள்.அவர் முன்னிறுத்தும் முரண்கள் அழகானவை.


“ நீ - நான்
------------

வேலைக்கேற்ற ஊதியம்
கேட்கும் கோஷம் உன் கோஷம்
அதுவும் வேண்டாம் ஆளைவிடு
என்ற கூச்சல் என் கூச்சல்.
 என்ற வரிகள் இரைச்சலை இரைத்த பேச்சசாய் சத்தமாய் காதுக்குள் கத்துகிற குரலாய் மீண்டும்மீண்டும் ஒலிக்கின்றன. விட்டுவிடுதலையாகும் மனநிலையைக் கொண்ட பிரமிள் எதார்த்தக் கவிதைகளைத் தன் மனஅமைதியாகப் படைத்தார். கணநேர மகிழ்வுத்திளைப்பாய் அவர் கவிதைகள் அமைந்ததில்லை,ஏதோசொல்ல ஆவலாய் அருகில் வந்து ஏதும்சொல்லாமல் செல்கிறவனைப்போல் வாசகனுக்கு அருகில் நின்றுகொண்டு அமைதியால் ஏதோவொன்றை உணர்த்திக்கொண்டே இருக்கின்றன.


“இன்னும் உடையாத
ஒரு நீர்க் குமிழி
நதியில் ஜீவிக்க
நழுவுகிறது.
கைப்பிடியளவு கடலாய்




இதழ்விரிய உடைகிறது
மலர் மொக்கு.


 
என்ற கவிதை பிரமிளின் மனவோட்டத்தைச் சிறப்பாகச் சுட்டுகிறது. தூக்கிச்சுமந்த துயரங்களை, வளைய வரும் பழைய நினைவுகளை அவர் கவிதைகள் படிமங்களாய் படைத்துக்காட்டுகின்றன. சீவுகிறது வாழ்வு, 


கூராகும்வரை நேராகும் வரை..பிரமிள் கவிதைகள் அவற்றை அதே கூர்மையோடு சொல்கின்றன. எஞ்சி நிற்கின்றன அவர் சொன்ன சொற்கள் அவர் மறைந்துபோன பின்னும் அதே உயிர்ப்போடு அவரது கவிதைகளாய்.



·          கட்டுரையாளர் “இணையத்தமிழ்” நூல் ஆசிரியர், திருநெல்வேலி, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர்.




.








No comments:

Post a Comment