பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,
தமிழ்த்துறைத்தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி(தன்னாட்சி),
9952140275
2015 வசந்தமாய் வந்துவிட்டது.உலகம் முழுக்க மலர்ச்சியின் அடையாளமாய்
புத்தாண்டு வாழ்த்துக்கள்,டைரி,காலண்டர், கேக்பெட்டி அன்பளிப்புகள்,குறுஞ்செய்தி
வாழ்த்துப் பரிமாற்றம்.கடந்த ஆண்டின் தொடக்கத்தையும் இப்படித்தானே கொண்டாடி
வரவேற்றோம்..இந்த ஆண்டை மறக்க முடியா வெற்றியாண்டாக எவ்வாறு மாற்றப்போகிறோம்?
*நேற்று நாம்கிழித்துப்போட்ட நாட்கள் கீழே
கிடக்கின்றன கடந்த ஆண்டின் காலண்டர் தாள்களாய்..காலக்கழிவாய் ..மிச்சமிருக்கும்
நாட்கள் ஆணிகளால் அறையப்பட்டு அட்டையில் தொங்கிக்கொண்டிருக்கின்றன.புதிதாய்
புலர்ந்திருக்கும் இந்த முநூற்றுஅறுபத்தைந்து நாட்களையும் முன்னேற்ற நாட்களாய்
எப்படி மாற்றுவது? சிந்திக்கலாமே சிலமணித்துளிகள்.
*மன மாற்றம் தினமாற்றமாய் மாறும்.எந்தப்
புதுமையையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் மனதை மாற்றிவையுங்கள்.
*நின்றால் உயர்த்தும் நகரும் படிக்கட்டுகளல்ல
வாழ்க்கை.மூச்சுப்பிடித்து முன்னேறும் வித்தையே வாழ்க்கை என்பதைப்
புரிந்துகொள்ளுங்கள்.
*விழிக்கும் வரைக்கும் விடியல் வெளியே
நிற்கிறது.விழிகள் திறந்தால் இருள் எங்கோ தொலைகிறது.விடியல் வந்துவிட்டதென்று
நம்புங்கள்;வெற்றிக்கு வெகுஅருகில் வந்துவிட்டீர்கள் என்று பொருள்.
*எந்தச் சூழலையும் எதிர்கொண்டு மனவலிமையோடு
சிரிக்கக்கற்றுக்கொள்ளுங்கள்; புண்களின் ரணத்தைப் புன்னகை ஆற்றும்.
* வலியின்றி வாழ்க்கை இல்லை,வலியின் வழியில்தான்
வெற்றிதேவதை காத்துக்கொண்டிருக்கிறாள் என்பதை உணருங்கள்.
*எல்லாப் பறவைகளுக்கும் இடம்தந்து
திறந்துகிடக்கிறது, விந்தை பல செய்து நம் சிந்தை மயக்கும் விரிவானம் சிறகிருந்தால்
நாமும் பறக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். விட்டு விடுதலையாகிப் பறப்போம்
சிட்டுக்குருவிகளாய் நாமும்.
* தயக்கத்தைத் தள்ளி நிறுத்துங்கள்.அது உங்கள்
முதல் எதிரியாய் நின்று உங்கள் வெற்றியை முடக்கிவைக்கிறது.
* இந்தநாள் எனக்கு நொந்த நாள் அன்று;இந்தநாள்
என் சாதனைக்குரிய சொந்தநாள் என்று எண்ணுங்கள்.
*எதையும் ரசிக்கக்கற்றுக்கொள்ளுங்கள் அந்தந்த
வினாடிகளில் வசிக்கக்கற்றுக்கொள்ளுங்கள்.
*எல்லோருக்கும் பிடித்துக் கொள்ள ஒரு சுட்டுவிரல் மிச்சமிருக்கிறது அந்தக்
கரத்தைத் தேடித்தான் காலஓட்டம். எவர் மீதும் வெறுப்பையும் கோபத்தையும் விதைக்காமல்
அன்பு செய்வோம் அனைத்தையும் மறந்து.
*குட்டையாய் தேங்கிப்போவதோ, தூங்குமூஞ்சிமரம்
போல் தூங்கிப்போவதோ அல்ல வாழ்க்கை, துணிச்சலோடு சவால்களைத் தாங்கி வெல்வதே
வாழ்க்கை என உணருங்கள்.
*உள்ளும் புறமும் ஊற்றெடுக்கும் உற்சாகம் உங்களை
வைத்திருக்கும் என்றும் இளமையாக வைத்திருக்கும் என்று நம்பி எப்போதும் உற்சாகமாக
இருங்கள்.
* உங்கள் அறிவிற்கு அப்பாற்பட்ட விஷயங்கள்
குறித்துக் கவலைப்படுவதோ அவற்றை மனதில் போட்டுக் குழப்பிக்கொள்ளவோ
வேண்டாம்,செப்புக்குச் சிக்காத சில முடிகள் எப்போதும் உண்டு என்ற உண்மையைப்
புரிந்துகொள்ளுங்கள்.
*எண்ணம் கிண்ணம் போன்றது ஊற்றியதை
ஏற்றுக்கொள்ளும் தன்வடிவத்தில்,எனவே ஒருபோதும் கண்டவற்றை எண்ணி மனதைக் குப்பைத்
தொட்டியாக்கிவிடாதீர்கள். எண்ணத்தைத் திண்ணமாக்கினால் வண்ணமாகும் வாழ்வும்.
*பூவின் வாழ்வில் மலர்தலுக்குப்
பஞ்சமில்லை,இளையோர் சூடார்,வளையோர் தேடார் ஆனாலும் எழுச்சியாய் பூக்கின்றன
எருக்கம்பூக்களும்.பூவாக உங்களை நினைத்துக் கொள்ளுங்கள்..மலர்ச்சி என்பது
மனிதத்துவம் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.
* இருக்கமாயிருந்து இரும்பு
என்று பேர்வாங்குவதைவிட இளக்கமாய் இருப்போம். இளக்கமாய் இருக்கிறவரை எப்படி
வேண்டுமானாலும் இந்த வாழ்வு நமை வசதியாய்
வளைக்கும்.
* பணத்தை
நோக்கியே பயணிப்பதை விட, உயிர்மம் பெற்று வரும் உறவுகள் உன்னதமனவையாய் என்று
நினைப்போம் உறவுகளை மதிப்போம் வெற்றியாளர்கள் வென்ற ரகசியம் அதுதான். அந்தப்பேரன்புதான் இனம் தெரியாத மனிதர்களோடு நம்மைச் சங்கமிக்க
வைக்கிறது.மானிட சமுத்திரம் நானெனக் கூவக் கற்றுக் கொடுக்கிறது.
* எதுவும் வீணில்லை இந்த வாழ்க்கையில்;நகர்ந்து போகிற இந்த மனிதப் பிரவாகத்தின்
நீண்ட தொடர்ச்சியின் கனிவான கண்ணிகள் நாம் என்பதைப் புரிந்துகொள்வோம்.நம்மைநாமே
நொந்துகொள்வதை இனியேனும் தவிர்ப்போம்.தோல்விகளில் தோய்ந்துகிடைப்பதுவிட வெற்றியை
நோக்கி விரைவாய் இயங்குவது சாலச்சிறந்தது.
* மாசுமருவற்ற நல்லமனிதர்களை அடையாளம் காண்போம்,அவர்களின் நற்பணியில்
நம்மையும்இணைத்துக் கொள்வோம்; முன் தயாரிப்பற்ற
வாழ்வின் நகர்வுகளில்தான் நாம் அடையாளம் காண்கிறோம் அன்பான இதயங்கள் பலவற்றை.
* சிகரங்கள் ஏறச் சிந்திப்பவன்,பலவீனத்தின்
பள்ளத்தாக்குகளில் படுத்துறங்கமாட்டான்.பலவீனங்கள் என்ன என்பதைக்கண்டறிந்து
அவற்றைப் பலமாக்க முயலுங்கள்.
*முடியாதென்று முதலிலேயே முடிவெடுக்காதீர்கள்..முறிந்து
போகும் முயற்சியின் கிளை.முயன்று பார்க்கும்போது தோல்விவந்தாலும் அதுவும்
வெற்றிக்கான முதல்படியே என்று உணருங்கள்.
* இருக்கும் இடத்தின் மீது பழிபோடாதீர்கள்,சின்ன
வட்டத்திற்குள் ஓடினாலும் காலம் காட்டும் அடையாளமாய் நம் கரத்தோடு ஒட்டி ஓடிக்
கொண்டேயிருக்கின்றன கைக்கடிகாரமுட்கள்.
*பேருந்துகள் ஓய்வெடுக்கிற மோட்டல்களில் அன்றைய
மாலை நாளிதழ் மடித்துத் துடைக்கிற ஓட்டுனர் மாதிரி துடைக்கத்தான் வேண்டும் அன்றைய
சோகங்களை அன்றன்றே.
*திசைகளைத் தீர்மானித்தால் பயணம்
பலப்படும்.திசைகளை நோக்கிய தீர்க்கம் வேண்டும்.
* இலையுதிர்க்காலத்தோடு இறந்துபோவதில்லை எந்த
மரமும் பரபரப்பான நான்கு வழிச்சாலைகளின் நடுவிலும் பூத்துக் குலுங்குகிற அரளிசெடிகளைப்
போன்று பரபரப்புக்கிடையிலும் பூத்துக்குலுங்குகிறவனையே உலகம்
விரும்புகிறது.மலர்வோம் நாமும்; துளிர்ப்பதில்தான் தொடங்குகிறது எல்லா
வனமும்.நாமும் துளிர்போம் மகிழ்ச்சிச் செடிகளாய்.
* தண்ணீரில் நனைந்த சாக்பீஸ் இன்னும் அழுத்தமாய்
எழுதுவதைப் போல் நம்பிக்கை எனும் வாசகத்தை அன்பில் நனைத்து அழகாய் எழுதுவோம்
வெற்றி எனும் கவிதையை.
*பேருந்துப் பயணத்தின் சன்னலோர ரசிப்புகள்
“ஐபேட்களின் வரவால் கண்மூடிப் போனது இன்று தொடங்குவோம் மீண்டும் குழந்தைகளாய்.
*முதலடி வைப்பதில்தான் முன்னேற்றமே
உள்ளது.முதலடியை வையுங்கள் இன்றே,இப்போதே,இக்கணமே! எனப் புறப்படுங்கள்..இப்போது
முடியாதென்றால் எப்போது முடியும்? நம்மால் முடியாதென்றால் யாரால் முடியும்? எனும்
நம்பிக்கை சொற்றொடர்தான் இரண்டாம்உலகப்போரில் சின்னாபின்னமான ஜப்பான் நாட்டை
உலகின் வல்லரசு நாடாக மாற்றிய மகத்தான சொற்றொடர் . நீரெழுச்சியைப் போல்
பேரெழுச்சியோடு பயணப்படவேண்டிய நேரமிது.ஆம்! இன்று ஆண்டின் தொடக்கநாள்
மட்டுமன்று;நம் நம்பிக்கைப் பயணத்தின் தொடக்கநாளும்கூட.
*கட்டுரையாளர் பாரதப்பிரதமரிடம் தேசியவிருது
பெற்றவர்.
No comments:
Post a Comment