Sunday, January 4, 2015

வானொலிகளின் வசந்தகாலம் :முனைவர் சௌந்தர மகாதேவன் : தி இந்து தமிழ் கிராமபோன் கட்டுரை 4.1.2015





காதுகளை இழந்து தவிக்கும் காவியவானொலி
..........................................................................................................
முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி,
mahabarathi1974@gmail.com,9952140275
காதுகளைக் கண்களாக்கிப் பார்க்கவைத்த பெருமை வானொலிக்கு உண்டு.கம்பீரமான குரல்களின் காதலனாய்க் காதுகளை ஆக்கிய பெருமையும் வானொலிக்கு உண்டு.

 சித்தப்பாவின் வானொலிப்பெட்டிப் பழையகாலத்து மாடல்பெட்டி. ட்ரங்குபெட்டிமாதிரி இருந்த அந்த மிகப்பழைய வானொலியை அந்தச்சிறுவயதில் பார்த்துப் பிரமித்திருக்கிறேன். 

காலை ஆறுமணிக்கு நிகழ்ச்சி கேட்கவேண்டுமானால் ஐந்தரைக்கே அதை அவர் தயார் செய்துவிடுவார்.வலதுபக்கத்தில் இருக்கும் குட்டிபல்பு எரிந்து “சொய்ங்கென்று”சத்தம் எழுப்பியபடிப் பாட ஆரம்பிக்கும்போது பிரமித்துப்போய் பார்ப்போம். துணிகாயப்போடும் கம்பிமாதிரி நீண்ட ஏரியல்கூட அதில் இருக்கும்.


”எப்படி சித்தப்பா இந்தப் பெட்டியிலிருந்து பாட்டுக் கேட்கிறது? என்று சிறுகுழந்தைகளாய் இருந்தபோது கேட்டிருக்கிறோம்,அதற்குச் சித்தப்பா “முந்திய நாளே பாடுகிறவர்கள் பெட்டிக்குள் போய் அமர்ந்துகொள்வார்கள் ..பாடிமுடித்தவுடன் காற்றில் ஏறிக்காணாமல் போய்விடுவார்கள்”என்பார்.என்ன செய்ய! நம்பித்தொலைத்தோம்.


அந்த வானொலிப்பெட்டியைவிட அந்த வானொலிப்பெட்டியைச் சுற்றியிருக்கும் காப்புப்பெட்டியான மரப்பெட்டியைக் கண்டால் காமெடியாய் இருக்கும்.மேலிருந்து கீழே இறக்கி மூடும் கண்ணாடிக்கதவு வேறு அதற்கு. சித்தப்பா அதை யாரும் கைபடா உயரத்தில் ஏற்றி வைத்திருப்பார்.அவருக்குத் தெரியாமல் யாரேனும் தொட்டால் தொலைத்துவிடுவார்.”நூறுரூபாய் கொடுத்து வீராவரத்தில் வாங்கினதுடா” என்பார். டெல்லி அஞ்சலில் ஒலிபரப்பாகும் இந்துஸ்தானி இசையை அதில் கரகரப்பாய் கேட்கும்போது வித்யாசமாய் இருக்கும்.சிலநேரங்களில் சித்தார் இசைகூட அதில் கேட்டிருக்கிறோம்.

சித்தப்பா ஒரு ரகமென்றால் அப்பா இன்னொரு ரகம்.டெல்லி செட்டில் அவரால் வந்தேமாதரம் கேட்காமல் அன்றும் இன்றும் என்றும் அவரால் ஒருநாளின் காலையை தொடங்கமுடியாது.

 வந்தேமாதரம் போடும்போதே, அப்பா நெல்லை வானொலியைக் கேட்க ஆயத்தமாகி விடுவார். சூரியன் உதித்தும் உதிக்காமலும் இருக்கும் அந்தக் கருக்கலோடு இயைந்த அந்தக் காலைவேளை வானொலியின் மங்கலஇசை கேட்கும்போது கொஞ்சம்கொஞ்சமாய் பிரகாசமாவதாய் தோன்றும்.நெல்லை வானொலியின் சான்றோர் சிந்தனை தினமும் அப்பாவுக்குப் பிடித்தமானது.

நாகூர் அனிபாவின் இறைவனிடம் கையேந்துங்கள்..பாடல்,பி.சுசிலாவின் தாமரைப்பூவில் அமர்ந்தவளே..பாடல்,”கேளுங்கள் கொடுக்கப்படும்..பாடல்,இளையராஜாவின் ஜனனி ஜனனிபாடல் என்று காதுகள் வழியே கனிவைப் பிழிந்துஊற்றிட நெல்லை வானொலியால் முடிந்திருகிறது.அப்போது தென்கச்சி சுவாமிநாதனின் இன்று ஒரு தகவல் பிரபலம்,அப்பா காலையில் அதைக் கேட்கவைத்துவிடுவார்.

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம்,விவித்பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு,பிபிசியின் தமிழோசை,ஆல் இந்தியா ரேடியோவாயிருந்து ஒருநாளில் அகிலஇந்திய வானொலியாய் மாறிப்போன நம்மூரு வானொலி வரை அத்தனை வானொலிகளும் எங்கள் காதுகளுக்குச் சாமரம் வீசின. 

இலங்கை வானொலியின் மயில்வாகனம்,கே.எஸ்.ராஜா,ராஜேஷ்வரி சண்முகம், பி.எச்.அப்துல் ஹமீது,விமல் சொக்கநாதன்,சில்வெஸ்டர் பாலசுப்ரமணியம்,கமலினி செல்வராஜன்,எழில்வேந்தன்ஆகியோரைக் கடல்கடந்தும் காதுகள் இன்றும் நினைவில் வைத்திருக்கின்றன.

”பிறந்தநாள் இன்று பிறந்தநாள்” என்று அழகாக இலங்கை வானொலியால் பிறந்தநாள் வாழ்த்துச்சொல்லமுடிந்தது.வாழ்த்தும் அன்புநெஞ்சங்கள் பட்டியலில் சித்தப்பாமார்,பெரியப்பாமார்,மாமன்மார்,மாமிமார் என்று வாசிக்க முடிந்தது.வானொலிக்கு நாடுகளின் எல்லை ஏது?பேதம் ஏது?யார் பிறந்தநாள் வாழ்த்தைக் கேட்டாலும் அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் உற்சாகத்தில் நமக்கே பிறந்தநாள் வந்ததைப்போல் உணர்ச்சிப்பூர்வமாக வாசிப்பார்கள்.அப்படி ஒரு காந்தக்குரல் அவர்களுக்கு

!பேசும்போதே அவர்களால் பாடிநடிக்க முடிந்தது,முப்பது ஆண்டுகளுக்கு முன் வந்தபாடலை இசையமைப்பாளர்,பாடலாசிரியர்,பாடகர் பட்டியலோடு நினைத்த மாத்திரத்தில் அவர்களால் சொல்ல முடிந்தது.

அகில இந்தியவானொலியும் சளைத்ததல்ல ...செய்திகள் வாசிப்பவர் (ரொம்பகாலம்வரை வாசிப்பதுதான்)சரோஜ்நாராயண் சுவாமி என்ற அந்தக் கரகரப்பான காந்தக்குரலையும் எண்பதுகளில் எங்கள் காதுகள் காதலித்த காலகட்டம் அது. இன்றுள்ளதுபோல் இணையவசதிகள் இல்லாத காலகட்டத்தில் ஜி.ராமநாதன்,சுதர்சனம்,விஸ்வநாதன் ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன்,இளையராஜா என்று திரையிசை ஜம்பவான்களை உலகம் முழுக்கக் கொண்டுசென்றது வானொலிதானே!கவியரசர் கண்ணதாசனின் வரிகள் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கக் காரணம் வானொலிதானே!

சொப்பன வாழ்வில் மகிழ்ந்து,நிலவே என்னிடம் மயங்காதே,மலர்ந்தும் மலராத,பிறக்கும்போதும் அழுகின்றாய்,கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே,மாலைப் பொழுதின் மயக்கத்திலே,மயக்கமா கலக்கமா? மனதிலே குழப்பமா?,நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்,நிலவே என்னிடம் நெருங்காதே,முல்லைமலர் மேலே,நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்,நான் மலரோடு தனியாக ஏன் அங்கு நின்றேன்,உள்ளத்தில் நல்ல உள்ளம்,மாசிலா உண்மை காதலே,மடிமீது தலைவைத்து விடியும்வரை தூங்குவோம்,அமுதைப் பொழியும் நிலவே,அன்னக்கிளி உன்னைத் தேடுதே,பனிவிழும் மலர்வனம் என்று போட்டிபோட்டுக் கொண்டு நம் வானொலியும், இலங்கை வானொலியும் ஒலிபரப்பிய பாடல்களை மறக்க முடியுமா?”உனக்கும் கீழே உள்ளவர்கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு” என்ற கண்ணதாசனின் கவிதைவரி கடைக்கோடிப் பகுதியில் வாழும் பாட்டாளியின் மனதில் நம்பிக்கையை விதைத்ததே எப்படி?

விளம்பரங்களையும் இசையோடு வானொலி தந்ததை மறக்கமுடியுமா? கோபால் பல்பொடி விளம்பரம்,பொன்னான புதிய ரக்சோனா விளம்பரம்,பாண்ட்ஸ் விளம்பரம்,ஹோர்லிக்ஸ் விளம்பரம் என்று வானொலி தந்த விளம்பரங்கள் இன்றும் நீங்கா நினைவுகளின் படிக்கட்டுகளில் கம்பீரமாய் அமர்ந்திருப்பதை அழிக்க முடியுமா?


எத்தனையோ  முகம்தெரியா வானொலிக் கலைஞர்களின் ரசிகனாய் மாற்றியதும் வானொலிதான். வானொலி கேட்கும் பழக்கத்தை அப்பாதான் ஆரம்பித்து வைத்தார்.

 அப்பாவின் வானொலிப்பெட்டி அவர் முப்பதாண்டுகளுக்கு முன் புதுடெல்லிக்கு இன்பச்சுற்றுலா போனபோது வாங்கி வந்தது.வாங்கிய புதிதில் அப்பா அதைத் தொடக்கூட விடமாட்டார்.லெதர் பேக் கடையில் அதற்குத் தோலில் சட்டைவேறு.

தெளிவான அழுத்தமான தமிழ்உச்சரிப்பை நான் கற்றுக்கொண்டது தமிழாசிரியரான என் தந்தையாருக்கு அடுத்து வானொலி அறிவிப்பாளர்களிடம்தான்.கிண்டல் மிளிரும் கிராமத்துப் பாமரரின் குரலில் தென்கச்சியாரின் இன்று ஒருதகவல்,இரவின் இனிமையில் தவழும் இந்துதானிஇசை,எம்.எஸ்.அம்மாவின் குறையொன்றும் இல்லை பாடல்,வாரியார் சுவாமிகளின் ஆன்மீகச் சொற்பொழிவுகள்,ஏற்ற இறக்கத்தொடு கம்பராமாயணம் பேசிய புலவர் கீரன் குரல்,எம்பார் விஜய ராகவாச்சாரியார் கதாகாலட்சேபம்,இளம்பிறை மணிமாறன்,சரஸ்வதி ராமநாதன் என்று குரலில் தேன்தமிழைத் தடவித்தந்த  நூற்றுக்கணக்கான வெண்கலத்தொண்டைகளுக்கு என் காதுகளைத் தானமாகத் தந்துள்ளேன்.


செய்திகள் வாசிப்பது சரோஜ்நாராயண்சுவாமி என்று டெல்லி செய்தியறிக்கை தரும் அந்தக் காந்தக்குரலுக்காகக் காலை ஏழுமணியிலிருந்தே வானொலிப்பெட்டியின் முன் தவம் கிடந்த நாட்கள் உண்டு.இடையிடையே நிறுத்தி அவர் மூச்சு வாங்க எடுத்துக்கொள்ளும் அவர் பாணி வித்தியாசமானது.சிலநாட்களில் அவர் செய்தி வாசிக்கும்போது நகர்த்தும் பேப்பர் சத்தம் கூடத் தெளிவாய் கேட்கும். 

நான் நெல்லை வானொலியில் சிறுவர்குரலில் நேயர்கடிதம் வாசித்ததை அப்பா சேவியர் பள்ளிமுழுக்கத் தன் மாணவர்களிடம் சொல்லி மகிழ்ந்தது இன்றும் நினைவில் இருக்கிறது. 

நாம் பார்க்கும் வேலையில் எந்தத்தடையும் இன்றி வானொலி கேட்டபடி நம்மால் நம் வேலையைத் தொடரமுடியும்.சைக்கிள் பஞ்சர் ஓட்டும்கடையில்,தேநீர்க் கடையில்,பலசரக்குக் கடையில் எப்படியும் வானொலிக்கு ஒரு இடம்கிடைத்தது இப்படித்தான்.இன்று செல்பேசிகளில் டிஜிட்டல் ஒலிபரப்பில் நூற்றுக்கணக்கான பண்பலைகள் ஒலிபரப்பானாலும் ஏதேனும் ஒன்று நினைவில் நிற்கிறதா? 

காதுகளின் காதலர்கள் மறைக்காமல் சொல்லட்டும்.நினைத்துப்பார்க்கிற யாவும் உணர்வின் வேரை,உயிரின் வேரை நனைத்துப் பார்க்கத்தானே செய்யும்.கனத்த பெட்டிக்குள் காதுகளின்றி அடைபட்டுக்கிடக்கிறது காவியமாய் ஒலித்த அந்தக்கால வானொலி.
*
கட்டுரையாளர் திருநெல்வேலியில் கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர்.
முனைவர் சௌந்தர மகாதேவன்,தமிழ்த் துறைத்தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி
mahabarathi1974@gmail.com,9952140275


No comments:

Post a Comment