Tuesday, January 20, 2015

புத்தாண்டில் மலர்வோம் புதுமனிதராய்





பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,
தமிழ்த்துறைத்தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி(தன்னாட்சி),
திருநெல்வேலி, mahabarathi1974@gamil.com,
9952140275

2015 வசந்தமாய் வந்துவிட்டது.உலகம் முழுக்க மலர்ச்சியின் அடையாளமாய் புத்தாண்டு வாழ்த்துக்கள்,டைரி,காலண்டர், கேக்பெட்டி அன்பளிப்புகள்,குறுஞ்செய்தி வாழ்த்துப் பரிமாற்றம்.கடந்த ஆண்டின் தொடக்கத்தையும் இப்படித்தானே கொண்டாடி வரவேற்றோம்..இந்த ஆண்டை மறக்க முடியா வெற்றியாண்டாக எவ்வாறு மாற்றப்போகிறோம்?

 *நேற்று நாம்கிழித்துப்போட்ட நாட்கள் கீழே கிடக்கின்றன கடந்த ஆண்டின் காலண்டர் தாள்களாய்..காலக்கழிவாய் ..மிச்சமிருக்கும் நாட்கள் ஆணிகளால் அறையப்பட்டு அட்டையில் தொங்கிக்கொண்டிருக்கின்றன.புதிதாய் புலர்ந்திருக்கும் இந்த முநூற்றுஅறுபத்தைந்து நாட்களையும் முன்னேற்ற நாட்களாய் எப்படி மாற்றுவது? சிந்திக்கலாமே சிலமணித்துளிகள்.
 
*மன மாற்றம் தினமாற்றமாய் மாறும்.எந்தப் புதுமையையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் மனதை மாற்றிவையுங்கள்.
*நின்றால் உயர்த்தும் நகரும் படிக்கட்டுகளல்ல வாழ்க்கை.மூச்சுப்பிடித்து முன்னேறும் வித்தையே வாழ்க்கை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
*விழிக்கும் வரைக்கும் விடியல் வெளியே நிற்கிறது.விழிகள் திறந்தால் இருள் எங்கோ தொலைகிறது.விடியல் வந்துவிட்டதென்று நம்புங்கள்;வெற்றிக்கு வெகுஅருகில் வந்துவிட்டீர்கள் என்று பொருள்.
*எந்தச் சூழலையும் எதிர்கொண்டு மனவலிமையோடு சிரிக்கக்கற்றுக்கொள்ளுங்கள்; புண்களின் ரணத்தைப் புன்னகை ஆற்றும்.
* வலியின்றி வாழ்க்கை இல்லை,வலியின் வழியில்தான் வெற்றிதேவதை காத்துக்கொண்டிருக்கிறாள் என்பதை உணருங்கள்.

*எல்லாப் பறவைகளுக்கும் இடம்தந்து திறந்துகிடக்கிறது, விந்தை பல செய்து நம் சிந்தை மயக்கும் விரிவானம் சிறகிருந்தால் நாமும் பறக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். விட்டு விடுதலையாகிப் பறப்போம் சிட்டுக்குருவிகளாய் நாமும்.
* தயக்கத்தைத் தள்ளி நிறுத்துங்கள்.அது உங்கள் முதல் எதிரியாய் நின்று உங்கள் வெற்றியை முடக்கிவைக்கிறது.

* இந்தநாள் எனக்கு நொந்த நாள் அன்று;இந்தநாள் என் சாதனைக்குரிய சொந்தநாள் என்று எண்ணுங்கள்.
*எதையும் ரசிக்கக்கற்றுக்கொள்ளுங்கள் அந்தந்த வினாடிகளில் வசிக்கக்கற்றுக்கொள்ளுங்கள்.
*எல்லோருக்கும் பிடித்துக் கொள்ள ஒரு சுட்டுவிரல் மிச்சமிருக்கிறது அந்தக் கரத்தைத் தேடித்தான் காலஓட்டம். எவர் மீதும் வெறுப்பையும் கோபத்தையும் விதைக்காமல் அன்பு செய்வோம் அனைத்தையும் மறந்து.

*குட்டையாய் தேங்கிப்போவதோ, தூங்குமூஞ்சிமரம் போல் தூங்கிப்போவதோ அல்ல வாழ்க்கை, துணிச்சலோடு சவால்களைத் தாங்கி வெல்வதே வாழ்க்கை என உணருங்கள்.

*உள்ளும் புறமும் ஊற்றெடுக்கும் உற்சாகம் உங்களை வைத்திருக்கும் என்றும் இளமையாக வைத்திருக்கும் என்று நம்பி எப்போதும் உற்சாகமாக இருங்கள்.

* உங்கள் அறிவிற்கு அப்பாற்பட்ட விஷயங்கள் குறித்துக் கவலைப்படுவதோ அவற்றை மனதில் போட்டுக் குழப்பிக்கொள்ளவோ வேண்டாம்,செப்புக்குச் சிக்காத சில முடிகள் எப்போதும் உண்டு என்ற உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள்.

*எண்ணம் கிண்ணம் போன்றது ஊற்றியதை ஏற்றுக்கொள்ளும் தன்வடிவத்தில்,எனவே ஒருபோதும் கண்டவற்றை எண்ணி மனதைக் குப்பைத் தொட்டியாக்கிவிடாதீர்கள். எண்ணத்தைத் திண்ணமாக்கினால் வண்ணமாகும் வாழ்வும்.

*பூவின் வாழ்வில் மலர்தலுக்குப் பஞ்சமில்லை,இளையோர் சூடார்,வளையோர் தேடார் ஆனாலும் எழுச்சியாய் பூக்கின்றன எருக்கம்பூக்களும்.பூவாக உங்களை நினைத்துக் கொள்ளுங்கள்..மலர்ச்சி என்பது மனிதத்துவம் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

* இருக்கமாயிருந்து இரும்பு என்று பேர்வாங்குவதைவிட இளக்கமாய் இருப்போம். இளக்கமாய் இருக்கிறவரை எப்படி வேண்டுமானாலும் இந்த வாழ்வு நமை  வசதியாய் வளைக்கும்.

*  பணத்தை நோக்கியே பயணிப்பதை விட, உயிர்மம் பெற்று வரும் உறவுகள் உன்னதமனவையாய் என்று நினைப்போம் உறவுகளை மதிப்போம் வெற்றியாளர்கள் வென்ற ரகசியம் அதுதான். அந்தப்பேரன்புதான் இனம் தெரியாத மனிதர்களோடு நம்மைச் சங்கமிக்க வைக்கிறது.மானிட சமுத்திரம் நானெனக் கூவக் கற்றுக் கொடுக்கிறது.

*  எதுவும் வீணில்லை இந்த வாழ்க்கையில்;நகர்ந்து போகிற இந்த மனிதப் பிரவாகத்தின் நீண்ட தொடர்ச்சியின் கனிவான கண்ணிகள் நாம் என்பதைப் புரிந்துகொள்வோம்.நம்மைநாமே நொந்துகொள்வதை இனியேனும் தவிர்ப்போம்.தோல்விகளில் தோய்ந்துகிடைப்பதுவிட வெற்றியை நோக்கி விரைவாய் இயங்குவது சாலச்சிறந்தது.

* மாசுமருவற்ற நல்லமனிதர்களை அடையாளம் காண்போம்,அவர்களின் நற்பணியில் நம்மையும்இணைத்துக் கொள்வோம்; முன் தயாரிப்பற்ற வாழ்வின் நகர்வுகளில்தான் நாம் அடையாளம் காண்கிறோம் அன்பான இதயங்கள் பலவற்றை.
* சிகரங்கள் ஏறச் சிந்திப்பவன்,பலவீனத்தின் பள்ளத்தாக்குகளில் படுத்துறங்கமாட்டான்.பலவீனங்கள் என்ன என்பதைக்கண்டறிந்து அவற்றைப் பலமாக்க முயலுங்கள்.
*முடியாதென்று முதலிலேயே முடிவெடுக்காதீர்கள்..முறிந்து போகும் முயற்சியின் கிளை.முயன்று பார்க்கும்போது தோல்விவந்தாலும் அதுவும் வெற்றிக்கான முதல்படியே என்று உணருங்கள்.
* இருக்கும் இடத்தின் மீது பழிபோடாதீர்கள்,சின்ன வட்டத்திற்குள் ஓடினாலும் காலம் காட்டும் அடையாளமாய் நம் கரத்தோடு ஒட்டி ஓடிக் கொண்டேயிருக்கின்றன  கைக்கடிகாரமுட்கள்.
*பேருந்துகள் ஓய்வெடுக்கிற மோட்டல்களில் அன்றைய மாலை நாளிதழ் மடித்துத் துடைக்கிற ஓட்டுனர் மாதிரி துடைக்கத்தான் வேண்டும் அன்றைய சோகங்களை அன்றன்றே.
*திசைகளைத் தீர்மானித்தால் பயணம் பலப்படும்.திசைகளை நோக்கிய தீர்க்கம் வேண்டும்.
* இலையுதிர்க்காலத்தோடு இறந்துபோவதில்லை எந்த மரமும் பரபரப்பான நான்கு வழிச்சாலைகளின் நடுவிலும் பூத்துக் குலுங்குகிற அரளிசெடிகளைப் போன்று பரபரப்புக்கிடையிலும் பூத்துக்குலுங்குகிறவனையே உலகம் விரும்புகிறது.மலர்வோம் நாமும்; துளிர்ப்பதில்தான் தொடங்குகிறது எல்லா வனமும்.நாமும் துளிர்போம் மகிழ்ச்சிச் செடிகளாய்.
* தண்ணீரில் நனைந்த சாக்பீஸ் இன்னும் அழுத்தமாய் எழுதுவதைப் போல் நம்பிக்கை எனும் வாசகத்தை அன்பில் நனைத்து அழகாய் எழுதுவோம் வெற்றி எனும் கவிதையை.
*பேருந்துப் பயணத்தின் சன்னலோர ரசிப்புகள் “ஐபேட்களின் வரவால் கண்மூடிப் போனது இன்று தொடங்குவோம் மீண்டும் குழந்தைகளாய்.
*முதலடி வைப்பதில்தான் முன்னேற்றமே உள்ளது.முதலடியை வையுங்கள் இன்றே,இப்போதே,இக்கணமே! எனப் புறப்படுங்கள்..இப்போது முடியாதென்றால் எப்போது முடியும்? நம்மால் முடியாதென்றால் யாரால் முடியும்? எனும் நம்பிக்கை சொற்றொடர்தான் இரண்டாம்உலகப்போரில் சின்னாபின்னமான ஜப்பான் நாட்டை உலகின் வல்லரசு நாடாக மாற்றிய மகத்தான சொற்றொடர் . நீரெழுச்சியைப் போல் பேரெழுச்சியோடு பயணப்படவேண்டிய நேரமிது.ஆம்! இன்று ஆண்டின் தொடக்கநாள் மட்டுமன்று;நம் நம்பிக்கைப் பயணத்தின் தொடக்கநாளும்கூட.
*கட்டுரையாளர் பாரதப்பிரதமரிடம் தேசியவிருது பெற்றவர்.






Sunday, January 18, 2015

தன்னம்பிக்கைக் கட்டுரை : " இளையபாரதத்தின் இனிய முன்மாதிரி மகாகவி பாரதி" மாதவம்" மாதஇதழில் வெளியான முனைவர் சௌந்தர மகாதேவன் கட்டுரை



                  சனவரி 12



அழியாச்சுடர் -1


பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,
தமிழ்த்துறைத்தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி) திருநெல்வேலி
 

சின்னச்சாமியார் பெற்ற ‘சினச்சாமி’ மகாகவிபாரதி இளையபாரதத்திற்கு நம்பிக்கை தரும் இனிய முன்மாதிரியாகத் திகழ்கிறார். இரவெல்லாம் இரைச்சலிடும் இராக்கோழி, பகல் வந்தவுடன் பயந்து பம்முகிறது.பம்முவதும் விம்முவதும் பாரதி விரும்பா இருண்மைச்சொற்கள். பதினெட்டு வயது இளைஞனாய் காசியில் அத்தை குப்பம்மாள்,மாமா கிருஷ்ணசிவன் வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தபோதே இளையோர் குறித்து பாரதிக்குத் தெளிவான பார்வை இருந்தது. இளைய சமுதாயம் வாழ்வின் எந்தச் சூறாவளி கண்டும் அஞ்சாமல்,நெஞ்சுரத்தோடும், தன்னம்பிக்கையோடு திகழவேண்டும், தேசமுன்னேற்றத்தில் ஈடுபடவேண்டும் என்று பாரதி விரும்பியதை ‘பாரதியார் சரித்திரம்’ எனும் நூலில் செல்லம்மாபாரதி தெளிவுபடுத்தியுள்ளார்;  “தேசத்தை முன்னுக்குக் கொண்டு வரவேண்டும்,அதற்கு எந்தத் தியாகமும் செய்ய ஒவ்வொரு வாலிபனும் தயாராகயிருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய நினைப்பு” என்றார். “அச்சம் தவிர்” என்று பயத்திற்கே பயம்தந்தவன் பாரதி. “காலா,உனை நான் சிறுபுல்லென மதிக்கிறேன்-என்றன் காலருகே வாடா,சற்றே உனை மிதிக்கிறேன்” என்று துணிச்சலாய் அழைத்தது அவருடைய இருபத்தாறு வயதில்தான்.
சிந்துக்குத் தந்தையைச் சீண்டிய சிலபேர்
மறுப்பதற்கில்லை என்றாலும் ஏற்பதற்கில்லை என்ற மனநிலையோடுதான் எதிர்கொள்கிறோம் வாழ்வின் சில கணங்களை.

பாரதி வாழ்வை அப்படிச் சலிப்போடு எதிர்கொண்டவனில்லை. ‘முடியாது என்ற சொல்லைச் சொல்ல முடியாது’ என வாழ்ந்த இளையபாரதியைச் சீண்டுவதற்கு எட்டயபுர அரண்மனையில் புலவர்கள் சிலர்,எட்டயபுர மன்னரை வைத்துக்கொண்டு,”பாரதி நீ தேசமுன்னேற்றக் கவிதைகள் படைத்திருக்கிறாய்..ஆனால், பாமரரும் ரசிக்கும்படி அண்ணாமலை ரெட்டியாரைப்போல் எளிமையான சிந்து வகையில் உன்னால் பாடல் எழுதுவது இயலாத காரியம்” என்று சொல்ல, எட்டயபுர மன்னரும் அதை ஆமோதித்து, “அண்ணாமலை ரெட்டியாரைப்போல் இசைக்கவிதைகள் படைக்க இனி ஒரு புலவன் பிறந்துவரவேண்டும்” என்று ஆமோதிக்க பாரதி சப்தமாய் சிரித்தார்.சபையிலிருந்தவர்கள் “பாரதி..!சிரித்துப் பயனில்லை, உன்னால் முடிந்தால் அவரைப் போன்ற கவிதைகள் படைத்துவா பார்ப்போம்” என்று இளக்காரமாய் கிண்டலடிக்க, ஏதும் சொல்லாது வெளியே விடுவிடுவென்று நடந்த பாரதி,அன்றே காவடிச்சிந்துப் பாடல்களை இயற்றிவந்து மன்னரிடம் பாடிக்காட்டிப் பிரமிக்கவைத்தார்.

 1904 இல்”பச்சைத் திருமயில் வீரன்” என்ற தலைப்பில் சிந்துப்பாடல் பாரதியார் கவிதைகளில் அவர் தன்னம்பிக்கையின் சான்றாய் இடம்பெற்றுள்ளது. பின்நாளில் சிந்துக்குத் தந்தை எனும் பெயர் கிடைக்குமளவு இளையபாரதி, சொற்களைக் குழைத்துச் சுந்தரக்கவிதைகள் படைத்தார்.” வலிமையே வாழ்க்கை என்பதை நன்குணர்ந்த மாகவிஞன்,தன் சுயத்தை நிருபிக்கும் வாய்ப்பாகவே தனக்குமுன்பிருந்த சவால்களைப் பயன்படுத்தினார். பாரதியின் இந்தப் போர்க்குணமே  மிகப்பெரிய தன்னம்பிக்கையாளானாய்,மகா கவியாக, தமிழ்கூறு நல்லுலகத்தின் முன், சாதனையாளானாய் முன்னிறுத்தியது.தன்னைக் குறைத்துப்பேச பாரதியார் யாரையும் அனுமதிக்கவில்லை. எடுத்த காரியம் யாவினும் வெற்றி என்றும், தன்னால் எதுவும்முடியும் என்றும் தன்வாழ்நாள் முழுக்க நிருபித்துக்கொண்டே இருந்தார்.
 

பெரிதினும் பெரிது கேள்

எட்டயபுர அரண்மைனையில் தினமும் மன்னருக்குப் பத்திரிகைகள் வாசிப்பது, நூல்கள் வாசித்து விளக்கம் சொல்வது,நாட்டுநடப்புகளை விளக்குவது என்பன போன்ற எளியபணிகளைத் தொடக்கத்தில் செய்த பாரதிக்கு அப்பணிகள் சற்றும் பிடிக்கவில்லை. “திருவினை வென்றுவாழ்” என்று சாதிக்கத் துடித்தவன் சம்பளமதில்சுவர்களுக்குள் மாட்டிக்கொண்டு சங்கடப்படுவானா? ‘அரைக் காசானாலும் அரசாங்கக்காசு’ என்ற வழக்கமான சிந்தனை, பாரதிக்குப் பிடிக்கவில்லை. மனத்திற்குப் பிடித்தமில்லாத வேலையைத் தொடரமனம் ஒப்பவில்லை.

வெறுப்பில் அரண்மனைப்பணியை விட்டுவிலகினான். அடுத்து ஆசிரியப்பணியில்..22 வயது இளைய ஆசிரியராய் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் 1-8-1904 முதல் 10-11-1904 வரை பணியாற்றிய பாரதி, சுகவாழ்க்கை எனும் சூத்திரத்திற்குள் அடங்காத கங்கையாகவே கரைபுரண்டு பிரவாகமாய் ஓடினார். “நொந்தது சாகும்” என்று உற்சாகமாய் சொன்ன மகாகவிபாரதி,ஆசிரியத்தொழிலில் இருந்துகொண்டு தேசத்தின் அரசியல் மாற்றத்திற்குப் போராடுவதில் பயனில்லை என்று அந்தவேலையையும்  உதறிவிட்டு சென்னை சென்று,சுதேசமித்திரன் இதழில் உதவியாசிரியராய் பணிக்குச் சேர்ந்தார். விழிக்கும் வரைக்கும் விடியல் வெளியே நிற்கிறது. விழிகள் திறந்தால் இருள் எங்கோ தொலைகிறது. இலக்குகள் அதிஉன்னதமாய் அமையும்போது அதை அடைவதற்கான பாதையும் கரடுமுராடாகத்தான் இருக்கும் என்பதைப் பாரதி நன்றாக உணர்ந்திருந்தான்.சொந்தச் சிறைக்குள் தன்னைப் பூட்டிக்கொண்டுத் தன்னை நொந்துகொள்ளாத வல்லமை மிக்கவன் மகாகவி பாரதி.  எந்தப் புதுமையையும் ஏற்றுக்கொள்ளும்  வகையில் மனதைத் தயாராக மாற்றி வைத்திருந்ததால் பாரதியால் சொல்வதைத் தெளிந்துசொல்லி, செய்வதைத் துணிந்து செய்ய முடிந்தது.


மைஇருளை வெளுத்த மாகதிரோன் பாரதி

சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையாக விளங்கிய சகோதரி நிவேதிதா,பாரதியின் உள்ளுக்குள் ஒளிந்திருந்த அக்கினிக்குஞ்சைச் சொற்களால் கூர்தீட்டிச் சாதனைவானில் சிறகடிக்க வைத்தவர். 1905 இல் பாரதி,சகோதரி நிவேதிதாவைச் சந்தித்தான். “பாரதத் தாய் உன் கண் எதிரே கையில் விலங்கோடு நிற்க, நீ உடைத்தெரியாமல் நிற்கலாமா பாரதி!” என்று சினத்தோடு வினவ 23 வயதேயான இளையபாரதி சிலிர்த்தெழுந்தான்.”சொல்லுக்கடங்காவே பராசக்தி, சூரத்தனங்களெல்லாம் வல்லமை தந்திடுவாள் பராசக்தி வாழியென்றே துதிப்போம்”என்று தேசம் காக்கத் தெய்வத்திடம் பாரதி வல்லமை வேண்டிய பாரதிக்கு சகோதரி நிவேதிதா மகத்தான சக்தியாகப் புலப்பட்டார்.

பிரகாசமான முகத்தோடு உறுதியோடு பேசிய சகோதரி நிவேதிதாவிடம் பேசியபின் பாரதியின் தன்னம்பிக்கை இன்னும் கூடியது.சகோதரி நிவேதிதாவைச் சந்தித்து உபதேசம் பெற்ற நிகழ்வையும், அவரிடம் பெற்ற ஞானதீட்சையைத் தன் இறுதிக்காலம் வரையிலும் சக்தியாய் பாரதி மனதில் தேக்கிவைத்திருந்தார்.

புதிய ஆத்திசூடியில் இளையபாரதி

பாரதியின் புதியஆத்திசூடியில் இளையபாரதியின் தன்னம்பிக்கையைத் தெளிவாய்காணமுடியும்.”எண்ணுவதுயர்வு, ஓய்தலொழி, கீழோர்க்கஞ்சேல், கேட்டிலும் துணிந்துநில், சிதையா நெஞ்சுகொள், தாழ்ந்து நடவேல், துன்ப மறந்திரு, தோல்வியிற் கலங்கேல், கெடுப்பது சோர்வு, புதியன விரும்பு, மானம் போற்று, ரௌத்திரம் பழகு, வையத் தலைமை கொள்” என்று இளையோருக்குத் தன்னம்பிக்கைப் பொன்மொழிகளைத் தந்தவன் தன்நம்பிக்கை பாரதி.

 
மகாத்மாவைக் கவர்ந்த மகாகவி பாரதி

சிறுவயதிலிருந்தே பாரதி யாருக்கும் அஞ்சியதாய் சரித்திரமில்லை.1919 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ரௌலட் சட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்தவதற்கான ஆயத்தக் கூட்டத்திற்கு மகாத்மாகாந்திஜி சென்னை வந்திருந்தார்.அவர் ராஜாஜியின் வீட்டில் தங்கியிருந்த அந்த நாளின் மதிய வேளையில், வாசலில் பாதுகாப்புக்கு நின்றவர்களைச் சற்றும் சட்டை செய்யாமல்,யாருடைய அனுமதியையும் வேண்டாமல், பாரதி விடுவிடுவென உள்ளே நுழைந்தான்.மகாத்மா காந்திக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மெத்தையில் அமர்ந்தான். “மிஸ்டர் காந்தி! இன்றைக்குச் சாயங்காலம் ஐந்தரைமணிக்கு நான் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் ஒரு கூட்டத்தில் பேசப்போகிறேன் அந்தக் கூட்டத்துக்குத் தாங்கள் தலைமை வகிக்க முடியுமா?” என்று கம்பீரமாய் கேட்டான்.உடன் காந்திஜி தன் உதவியாளர் மகாதேவ தேசாயிடம் “இன்று மாலை நமது அலுவல்கள் என்ன?” என்று கேட்க,”இன்று மாலை வேறு இடத்தில் இருக்கவேண்டும் பாபுஜி” என்று பதிலளித்தார்  மகாதேவ தேசாய்.உடன் மகாத்மா,பாரதியிடம் “விழாவை நாளைக்கு வைத்துக்கொள்ளலாமா?” என்று கேட்கிறார். “ முடியாது, நான் போய்வருகிறேன்,மிஸ்டர் காந்தி! தாங்கள் ஆரம்பிக்கப் போகும் இயக்கத்தை நான் ஆசீர்வதிக்கிறேன்.” என்று சொல்லிவிட்டுப் பாரதியார் அந்த இடத்தைவிட்டுப் போய்விட்டார். 

பாரதியின் தன்னம்பிக்கை மகாத்மாவைப் பெரிதும் ஈர்த்தது. அவர் போனபின், “இவர் யார்?” என்று ராஜாஜியிடம் காந்தி கேட்க, “அவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவி” என்றார். “இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்.இதற்குத் தமிழ்நாட்டில் ஒருவரும் இல்லையா?” என்று மகாத்மா கேட்க, ‘ஒருவரும் பதில் சொல்லவில்லை’ என்று அந்தச் சம்பவத்தை அருகிலிருந்து பார்த்த வா.ரா.என்கிற பாரதியாரின் நண்பர் “மகாகவி பாரதியார்” எனும் நூலில் பதிவுசெய்துள்ளார்.அந்தச் சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குள்( 1921) பாரதி என்ற தமிழ்க்கருவூலத்தை நாம் இழந்தோம்..காந்தி சொன்னதுபோல் பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால். பார்த்துக்கொண்டிருந்தால் இன்னும் இறவாக் காவியங்களை இளையபாரதி இறவாமல் தந்திருப்பான்.
















*கட்டுரையாளர் பாரதப் பிரதமரிடம் தேசியவிருது பெற்றவர்.