Saturday, April 11, 2015

ஜெயகாந்தன் :யாரும் உடைக்க முடியாத ஞானபீடம் : சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி




·       
மகாகவி பாரதிக்குப் பிறகு தமிழின் தனித்துவமான எழுத்துஇயக்கம் ஜெயகாந்தன்.

புரையோடிப் போன சமூகத்தின் போலி முகமூடிகளைத் தன் பேனாவால் கிழித்தெறிந்தவர்,
தனிமனிதனும் இயக்கம்தான் என்று நிரூபித்து எழுத்துக்கும் எழுத்தாளர்களுக்கும் மதிப்புதேடித்தந்தவர்.
வானத்தில் பறக்கும் பறவை விரிவானைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பார்ப்போரைக் கழுத்துவலிக்கத் திரும்பிப் பார்க்கவைத்ததுபோல் எழுத்துவானத்தில் இறுதிவினாடிவரை பறந்த பரந்த,மனதுக்காரர்.

தனக்குச் சாமரம் வீசிக்கொண்டு அவர் எதனோடும் சமரசப்படுத்திக்கொள்ளவில்லை.

அவர் இருக்கும்போதே ஒவ்வொருவாரமும் அவரைப்பற்றி இந்து நாளிதழ் அரைபக்கக் கட்டுரை வெளியிட்டு அவரைப் பெருமைப்படுத்தியதும் சமஸ் அவர்களைக் கொண்டு விரிவான நேர்காணல் வெளியிட்டதும் வரலாற்றுச்  சுவடுகளாய் காலப்பரப்பில் நின்றுநிலைக்கச் செய்துவிட்டது. 

நவீனஇலக்கியம்,பத்திரிகைத்துறை,அரசியல், திரைத்துறை யாவற்றிலும் மலினப்படுத்தாமல் தன் ஆளுமையை ஆளப்பதித்தவர்.அவர் வாழ்வதற்காக எழுதியவர் அல்லர்,எழுதவே வாழ்ந்தவர்,எழுத்தாகவே வாழ்ந்தவர்.

ஜெயகாந்தன் காலத்தின் கம்பீரம்,யாரும் உடைக்க முடியாத ஞானபீடம்.அவர், வலிகளுக்கிடையேயும் வலிமையோடு வாழ்ந்த இன்னொரு புதுமைப்பித்தன்.
ஜெயகாந்தன் எழுத்துவனம்,அவரை யாரும் வரப்புக்குள் சுருக்கிவிட முடியாது.எட்டுத்திக்கும் சிறகுவிரித்துப் பறந்துவிட்டு இறுதியில் திசைகாட்டியாய் நின்று யாவற்றையும் மௌனமாய் பார்த்தது காலம் செய்த கோலம்.

சிந்தித்துப் பார்த்தால் அவரைப்போல் ரௌத்திரம் பழக இனி யார் உள்ளார் என்று கேட்கத் தோன்றுகிறது.எல்லோரையும் ஈர்த்த ஜெயகாந்தத்தை வழக்கம்போல் காலம் தெரியாமல் உண்டு, செரிக்கமுடியாமல் நின்று மலைத்துநிற்கிறது.
ஆனாலும் அவரை யாரும் மறைக்க முடியாது.


No comments:

Post a Comment