மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஜனவரி
29 முதல் பிப்ரவரி 1 (2015) நான்கு நாட்கள் நடைபெற்ற ஒன்பதாம் உலகத் தமிழ்
ஆராய்ச்சி மாநாட்டில் திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்
துறைத் தலைவரின் இரு நூல்கள் வெளியிடப்பட்டன.
ஆய்வுக் கட்டுரை
.......................................
உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான ஆய்வறிஞர்கள் கலந்து கொண்ட ஒன்பதாம் உலகத்
தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் தொடங்கி
வைத்தார். பேராசிரியர் ச.மகாதேவன் விழா அரங்கில் மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ
நஜிப் துன் ரசாக்கை சந்தித்து மாநாடு சிறக்க வாழ்த்து தெரிவித்தார்.
மலேசியப் பல்கலைக் கழகம் ஒருங்கிணைத்து நடத்திய இம்மாநாட்டில்
பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர்
ச.மகாதேவன் பேராளராய் கலந்துகொண்டு “திருக்குறளில் மருத்துவச் சிந்தனைகள்” எனும்
தலைப்பில் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை வழங்கினார்.
120 நூல்கள்
..........................
உலகமயக் காலகட்டத்தில் தமிழாய்வுக்கு
வளம் சேர்த்தல் எனும் பொருளில் நடத்தப்பட்ட ஒன்பதாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி
மாநாட்டின் சிறப்புநிகழ்வாக சென்னை கலைஞன் பதிப்பகம்.கோலாலம்பூரில் உள்ள மலேசியப்
பல்கலைக்கழகத்தோடு இணைந்து “ சங்க இலக்கியம் முதல் பாரதி வரை” எனும் தலைப்பில் 60
பேராசிரியர்களைத் தேர்வு செய்து அவர்களின் முயற்சியில் 120 நூல்களைத் தயாரித்து
அந்தப் பேராசிரியர்களை மாநாட்டிற்கு
அழைத்துச் சிறப்புச் செய்து அவர்களின் 120 நூல்களை மாநாட்டில் வெளியிட்டது.
இருநூல்கள் வெளியீடு
..................................................
பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித்
தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் ச.மகாதேவன் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் எனும்
தலைப்பிலான இருநூல்களை , எழுதியிருந்தார். அந்த நூல்களின் நூல் வெளியீட்டு விழா சனவரி
31`அன்று மாலை 5 மணிக்கு கோலாலம்பூரில் உள்ள மலாயா பல்கலைக்கழகக் கலையரங்கில்
நடைபெற்றது.
சங்க இலக்கியம் முதல் பாரதி வரை எனும் பொருளிலமைந்த 120 நூல்களை இந்தியா
மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான கட்டமைப்புத் துறையின் சிறப்புத்தூதுவரும் மலேசியா
ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டுத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எஸ்.சாமிவேலு தலைமையேற்று
120 நூல்களை வெளியிட்டார். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டான்ஸ்ரீ
மாரிமுத்து அந்நூல்களைப் பெற்றுக்கொண்டார்.
திராவிடர் கழகத் தலைவர்
கி.வீரமணி,சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் தாண்டவன்,பேராசிரியர்
ஜெயதேவன், பேராசிரியர் எஸ்.குமரன்,சென்னை கலைஞன் பதிப்பகம் நந்தன் மாசிலாமணி
ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
பேராசிரியர் ச.மகாதேவன், தாம் எழுதிய நூல்கள் குறித்துப் பேசினார்.மாநாட்டு
ஆய்வுக் கட்டுரைகள் குறித்த நெல்லை பேராசிரியரின் பேட்டியை மலேசிய ஊடகங்கள்
இணையதளத்தில் வெளியிட்டன. நூல்களை எழுதிய திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா
கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவருக்கு விழாவில் நினைவுப்பரிசினை மலாயாப்
பல்கலைக்கழகம் வழங்கிப் பாராட்டியது.