மேலும் இலக்கிய அமைப்பின் சார்பில் பாளையில். வண்ணதாசன் சிறுகதைஇலக்கிய விழா மற்றும் வண்ணதாசன் நூல்
வெளியீட்டுவிழா
எழுத்தாளர் வண்ணதாசனின் சிறுகதைகள் குறித்த
“வண்ணதாசன் கதைகள் வாசிக்கலாம் வாங்க” எனும் இலக்கிய நிகழ்ச்சியும் “வண்ணதாசன்”
நூல் வெளியீட்டு விழாவும் மேலும் இலக்கிய அமைப்பின் சார்பில் பாளை.தூய சவேரியார்
கல்லூரியில் 22.8.2015 அன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது.
மேலும் அமைப்பின்
நிறுவனர் பேராசிரியர் மேலும் சிவசு விழாவுக்குத் தலைமை தாங்கித் தொடக்கவுரை
ஆற்றினார்.
மேலும் அமைப்பின் செயலாளர் பேராசிரியர் சௌந்தர மகாதேவன் வரவேற்றுப்
பேசினார்.
வண்ணதாசன் நூல் வெளியீடு
பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித்
தமிழ்த்துறைத் தலைவர் எழுதி, மலேசியாவில் உள்ள மலேயாப் பல்கலைக்கழகம்,சிதம்பரம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சென்னை கலைஞன் பதிப்பகம் இணைந்து பதிப்பித்துள்ள
வண்ணதாசன் வாழ்க்கை வரலாறு, வண்ணதாசன் சிறுகதைகள் குறித்த அறிமுகம், வண்ணதாசன்
நேர்காணல் ஆகியவற்றை உள்ளடக்கிய
“வண்ணதாசன்” என்கிற நூலை பேராசிரியர் மேலும் சிவசு வெளியிட எழுத்தாளர்
வண்ணதாசன் அதன் முதல்பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
சிறுகதைகள் வாசிப்பு நிகழ்ச்சி
வண்ணதாசன் எழுதியுள்ள 165 சிறுகதைகளிலிருந்து
ஆறு கதைகள் வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
பேராசிரியர் மேலும் சிவசு வண்ணதாசன்
எழுதிய “சுவர்” கதையையும்,எழுத்தாளர் நாறும்பூநாதன் “ நிலை” கதையையும்,
பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சௌந்தர மகாதேவன்
“கூறல்” கதையையும், திருநெல்வேலி அகிலஇந்திய வானொலியின் நிகழ்ச்சிப் பொறுப்பாளர்
கண்ணையன் தட்சிணாமூர்த்தி “அப்பாவைக் கொன்றவன்” எனும் கதையையும்,முனைவர் பட்ட
ஆய்வாளர் ரமேஷ் “தோட்டதிற்கு வெளியிலும் சிலபூக்கள்” எனும் சிறுகதையையும்
திறனாய்வு செய்தனர்.
வண்ணதாசன் ஏற்புரை
நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினராகக்
கலந்துகொண்டு பேசிய எழுத்தாளர் வண்ணதாசன்,
“ ஒரு படைப்பாளி எத்தனை மனிதர்களைச்
சென்றடைகிறானோ அத்தனைப் படைப்புகளுக்கான தூண்டுதலைப் பெறுகிறான்.
என் பிறந்தநாளில்
என் வாசகர்கள் முன் என் கதைகள் பேசப்படுவது மகிழ்வான நிகழ்வுதான்.
வாழ்வின் அபூர்வ
கணங்களை என் வாசகர்கள் வழியே ஐம்பத்து மூன்று ஆண்டுகளாக அடைதல் எவ்வளவு அழகானது.
எழுதிவனுக்கு தான்எழுதிய எந்தக் கதைதான் பிடிக்காமல் போகும்?
ஆனால் முன்னால் பயணிப்பதை விட்டுவிட்டு நாற்பது
ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய கதைகளை அப்படைப்பாளி இன்று திரும்பிப் பார்ப்பது
வலிநிறைந்தது. அப்படித் திரும்பிப் பார்க்கும்போது கழுத்துமட்டுமா என் மனமும்
வலிக்குமே.!
எழுத்தாளர் சுஜாதா பேசுகிற இடங்களில் எல்லாம் “நிலை” கதையைப்
பெருமையாகச் சொல்லிக்கொண்டே இருந்தார்.
“நிலை” கதையில் பத்துவயதுச் சிறுமியாக,
நெல்லையப்பர் தேர்பார்க்கக் கிளம்பிய சிறுமி கோமுவை என் அறுபத்து ஏழுவயதில்
மூண்றாண்டுகளுக்கு முன் சந்தித்தேன்.
தன் பேத்தியோடு அவள் என்னிடம் வந்து “ நல்லா
இருக்கியளா அய்யா” என்று பேசினாள்.அதைவிட வேறு என்ன மகிழ்ச்சி படைப்பாளிக்கு
இருந்துவிடமுடியும்?
என் கதைகளில் வரும் பாத்திரங்கள் யாவும் என்னோடு பயணித்த
சகபயணிகள்,என் தெருசார்ந்தவர்கள், என் தோளைத் தொட்டவர்கள், என்னை ஆதரித்தவர்கள்.
நான் கருணையின் பாடலைப் பாடியபடிக் குதித்துக் குதித்துச் செல்லும் கடிகாரத்தின்
நொடிமுள்ளாய் என்னை உணர்கிறேன்.
நெல்லை நகரம் மாறிவிட்டது, காரைவீடுகள்
காணாமல்போய்விட்டன, பழுப்படைந்த சுவர்கள் காணாமல் போய்விட்டன.
வெள்ளையடிப்புக்கு
முந்தையநாளின் சுண்ணாம்பு நீத்தும் சடங்குகள் காணாமல் போய்விட்டன. பழைமையின்
அடையாளமாய் திகழ்ந்த பரண்கள் காணாமல் போய்விட்டன, வெள்ளையடிப்புக்கு ஒதுங்கவைக்கும்போது
கண்விழிக்காத மெல்லியதோல் உள்ள சின்னஞ்சிறு எலிக்குஞ்சுகள் காணாமல் போய்விட்டன.
எனக்கு எல்லாக் கவிதைகளின் கடைசிவரிகளைப் போல் என் சிறுகதைகளின் கடைசிவரிகளும்
முக்கியம்.
என் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமானகதை, “கூறல்” கதை. தொடுதலே ஒரு
உரையாடல். முதியவர்கள் தொடுதலுக்கு ஏங்குகிறார்கள்.
ஆனால்
மறுக்கப்படுகிறார்கள்,பிறரால் ஒதுக்கப்படுகிறார்கள். வெயிலிலும் மழையிலும் காலம் காலமாய் உழைத்துக் கைகளில்
தோல்சுருக்கத்தோடு தொடுதலுக்கு ஏங்கிக்கொண்டிருக்கின்றனர்
இன்னும்.
அப்பாவைக்
கொன்றவன் சாதிக்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒரு இளம் உள்ளத்தின் கதை.”தோட்டத்திற்கு
வெளியிலும் சிலபூக்கள் கதை” கைக்குழந்தையோடு பேருந்தில் பயணிக்கும் ஒருவனுடைய
குழந்தை அழும்போது உடன் பயணிக்கும் சகபயணியான பெரியவர், அக்குழந்தையை தூக்கி அதன்
அழுகையை நிறுத்தி, “என் அம்மையில்லா” என்று சொன்னதைக் கருணையோடு சொன்ன கதை.
இந்த எழுபதாவது வயதில் அந்த ஒருவயது பெண்குழந்தையை என் மடியில்வைத்து
என் அம்மையில்லா என்று நான் சொல்லுமளவு கனிந்துவிட்டேன்.கதை எழுதுகிறவனை இப்படி
நுட்பமாகக் காலம் நிறுத்தி அழகுபார்க்கிறது.” என்று பேசினார்.
வண்ணதாசனின்
வாசகர்கள் சார்பில் அவருக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ரமேஷ் நன்றி கூறினார்.
படத்தில்: மேலும் இலக்கிய அமைப்பு நடத்திய
வண்ணதாசன் கதைகள் வாசித்தல் தொடர்பான இலக்கிய விழாவில் சதக்கத்துல்லாஹ் அப்பா
கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் சௌந்தர மகாதேவன் எழுதியுள்ள “
வண்ணதாசன்” எனும் நூலை பேராசிரியர் மேலும் சிவசு வெளியிட வண்ணதாசன்
பெற்றுக்கொள்கிறார்.அருகில் எழுத்தாளர் நாறும்பூநாதன்.
முனைவர் சௌந்தர மகாதேவன்
செயலாளர்,மேலும் அமைப்பு